Monday, December 27, 2010

இதயத்துக்கு இதமானது!


அடுத்த ஐந்தாண்டுகளில் இதய நோயாளி களை அதிகமாகக் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. எனவே வர இருக்கும் இந்த பிரச்சினையைச் சமாளிக்க இப்போது முதற்கொண்டே இந்தியா இன்னும் தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தவறான உணவுப்பழக்கமும், உட்கார்ந்து கொண்டே செயல்படும் வாழ்க்கை முறையுமே இருதய நோய்க்கு முக்கிய காரணி. ஆனாலும் இருதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்கள், இதழ்கள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளும் இருதய நோய்க்கு வழிவகுக்கும்.

தனி மனிதனின் இருதய ஆரோக்கியத்தை சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை முறையே தீர்மானிக்கிறது. தவறான உணவு முறைகளால் ஏற்படும் இருதய பாதிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மனிதனின் மூன்று முக்கிய அம்சங்களே தீர்மானிக்கின்றன. முதலாவது உடலுழைப்பு. இருதயத்தை பராமரிக்க வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இரண்டாவதாக மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுவது. அதாவது பிடித்தமான விஷயங்களை ரசித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சுடோகு விளையாடுதல், இனிமையான இசையை கேட்டல் ஆகியவை அழுத்தத்தை குறைக்கும்.

மேற்கண்ட செயல்பாடுகளுக்கு நீங்கள் ஒதுக்க வேண்டியது ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. நீங்கள் உட்கொள்ளும் உணவு வகை இதய ஆரோக்கியத்தை காக்கும் இன்னொரு விஷயமாகும்.

விருப்பமான உணவு ஆரோக்கியமான உணவு இல்லை என்றும், ஆரோக்கிய உணவு சுவையான உணவு இல்லை என்பதும் பொதுவான கருத்து. விருப்பமான, இதயப்பூர்வமான உணவு என்பது வறுத்த உணவோ, அதிக கலோரிகளாலான இனிப்புகளோ, வறுத்தவைகளோ இல்லை.

ஓரிகானோ, ஓமம், எலுமிச்சை. ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றைக் கொண்டு சுவையாக ஒரு கோப்பை சாலட் தயாரித்து சுவைக்கலாம். இதனுடன் கொஞ்சம் ஆலிவ் எண்ணை, வறுத்த வாதுமைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சுவையை மேலும் அதிகரிக்கலாம்.


தினமும் ஐந்து காய்கள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், ஆரோக்கிய இருதயத்திற்கும் ஏற்றவை. ஆனால் நாளொன்றுக்கு ஒன்றரை காய்கனிகளைக் கூட இந்தியர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவில் காணப்படும் ஏராளமான தாவர வகைகளில் பெரும்பாலானவற்றை நாம் உபயோகப்படுத்தியதே இல்லை. இவற்றைக் கொண்டு எண்ணை இல்லாத சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

தினசரி காலைப் பொழுதை ஒரு பழத்துடன் ஆரம்பிக்கலாம். காலை உணவிற்கு மீண்டும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம். ஒவ்வொரு உணவின் போதும் ஒரு கோப்பை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாலையில் மீண்டும் ஒரு பழம். அதேபோல் இரவு உணவுக்கு காய்கறி அல்லது பழம் சாப்பிடுங்கள்.

ஒரே மாதிரியான காய்கனிகளை உட்கொள்ளாமல் மொச்சை கீரை, சிவப்பு முள்ளங்கி, கோசுக்கீரை, காலிபிளவர், பூசணி, ஆஸ்கார்ட், கத்தரிக்காய் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதவிதமான காய்களை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளான மீன் மற்றும் கோழி வகைகளை சாறாக, கிரேவியாக உட்கொள்ளலாம். இது சைவ உணவில் சத்து தரும் பருப்பு வகைகளுக்கு ஓரளவு மாற்றாக இருக்கும்.

அதேநேரத்தில் அசைவ உணவுகள் எந்தக் காலத்திலும் சைவ உணவுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமச்சீரான உணவே இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவு ஆகும்.

தகவல்: டாக்டர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கட்டுப்பாடு ஆலோசகர்.

No comments: