Friday, December 17, 2010

எல்லாவற்றுக்கும் எதிரியே காரணம்?

தன்னைப் புத்திசாலிச் சமூகங்களில் ஒன்றாக நம்பியிருந்த தமிழ்ச் சமூகம், பாரிய பாடழிவுகளில் போய் விழுந்து விடாமல் தன்னைக் காத்துக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு இங்ஙனம் வீம்புக்கு அழிவில் வீழ்ந்து தன்னைச் சிதைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்விக்குப் பல்வேறு விடைகள் இன்று பலரதும் கைவசம் இருக்கும். அது பற்றிய ஆய்வை நமது மனமாச்சரியங்களுக்கு அப்பால் நின்று ஒவ்வொருவரும் தமக்குத் தாமே நேர்மையுடன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றிருக்கிறது.

ரோச, வீராவேசங்களைச் சற்று விலக்கி வைத்துவிட்டு நிதானமுடன் யோசிப்பவர்களுக்கு நமது தவறுகள் பிடிபடக்கூடும். நிதானமும் யோசனையும் கைகூடாமல் தொடர்ந்து கொந்தளித்து அழிப்புவீறில் துடித்தாடுபவர்களுக்கு, ‘எல்லாவற்றுக்கும் எதிரியே காரணம்’ என்ற இலகு விடையுடன், கடைசி உயிர் வரை அழிக்க ஒரு பொற்கனவுப் புளுகுமிருக்கும்.

நமக்குள் மிகப்படித்தவர்கள், அறிஞர்கள் என்று சொல்லப்பட்ட நபர்களுக்கு, சமூகத்தை அழிவிலிருந்து தடுக்கும் அறிவார்ந்த எத்தனங்களை ஏன் எடுக்கமுடியாமல் போயிற்று என்பதை அறியவேண்டியதும் முக்கியமானதாகும். ஏனெனில், சமூகம் பாடழிவுக்குள் தள்ளப்பட்டதன் பின்னாலிருந்த காரணிகளைச் சரிவரப் பகுத்தாய்ந்து கொள்ளாவிட்டால், இனிமேலும் வெற்றுச் சவடால்களுக்கும் மாயைகளுக்குமே இழுபட்டுச் செல்ல நேர்ந்துவிடலாம். வைகோ, நெடுமாறன் வகையறாக்களினதும், புலம்பெயர் சொகுசுக்காரர்களின் ‘புலியிசப்’ பேத்தல்களினதும் உசாரேத்தல்களினால் மேலும் மேலும் மடையர்களாக்கப்பட்டு இன்னும் நாம் ‘ஆதிகாலத்’ தமிழர்களாகவே அடிபட்டுச் செத்துக்கொண்டிருக்க நேரலாம்.

மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுக் கடைசிநேரப் பாடழிவு வரை இழுத்துவரப்பட்டதை மௌன அங்கீகாரத்தாலும், இன ரோச தற்திருப்திகளுக்காக மறைமுக ஊக்குவிப்பும் செய்து அனுமதித்திருந்த புத்திஜீவிகள், அடிப்படையாகத் தங்களிடமிருந்த தவறை இப்போதேனும் உணர்ந்து பகிரங்கப்படுத்தாவிட்டால், மேலும் மக்களை ஏமாற்றுபவர்களாகவே இருப்பர்.

விடுதலையின் பெயரால் மாற்று இனங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களையும் நம்மவர் கொலை புரிந்த போதும், ஒரு சமூகத்தை உடுதுணியுடன் ஓட விரட்டிய போதும், மற்றுமற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக போராட்ட நடவடிக்கைகள் அமைந்த போதும் ஏன் இந்த அறிஞர்களும் படித்தவர்களும் சமூகத் தலையாடுகளும் எதிர்க்காதிருந்தார்கள்? எமது மக்களை எதிரி அழிக்கிறான், அதற்குப் பதிலடியாக அவர்களது மக்களும் அழிக்கப்படுகிறார்கள் என்கிற சமாதானமல்லவா இவர்களில் பலரது குரூர மனிதவிரோத நிலைப்பாடாக இருந்தது.

பொதுவாக மனித உயிர்களின் அவலம் என்ற அறவுணர்வைத் தொலைத்து, ‘முதன்மையானது தமிழர் அவலம்... அது குறித்தே நம் மனிதாபிமான ஓலம்... அதன் பின்னால் உண்டாக்கப்படும் மற்றவர் அவலத்தை நாம் பொருட்படுத்துவது எங்ஙனம்?’ என்று நாமே உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நிழலிலல்லவா நாம் பதுங்கியிருந்தோம். இன்றும் அதைவிட்டு வெளியே வருவதற்கான சகிப்புத் தன்மையுள்ள ‘மனிதப்’ பார்வை நம்மிடமிருப்பதாகத் தெரியவில்லை.

மக்கள் வாய்பேச முடியாமல், மாற்றுக் கருத்துக்கள் கொலைகளால் அடக்கப்பட்டும், தலைவனைச் சூழ்ந்த ஆயுதங்களையே மக்கள் தொழுது பின்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டும் இருந்த சூழலை, ‘விடுதலைப்போராட்ட’ சூழலாய் இவர்கள் வியாக்கியானப்படுத்தி இருந்ததன் விளைவல்லவா இன்றைய நிலைமை?

எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள் எல்லோரும் இவற்றையெல்லாம் எப்படி அனுமதித்திருந்தார்கள்? தவறுகளைக் களைந்து மேற்செல்வதற்கு, இந்தக் காரணங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் மனந்திறந்து பேசியாக வேண்டும்.

காரணங்கள் பலவாக இருக்கக் கூடும். அவற்றில் ஒரு சாத்தியம் பற்றி, ரஷ்ய எழுத்தாளர் மக்ஸீம் கோர்க்கியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைப் பகுதியொன்றை இணையத்தில் பார்க்க நேரிட்டது. இப்படியும் சிலர் இருந்திருக்கக்கூடும் என்பது ஒருபுறமிருக்க, மற்றவர்களும் இந்தப் பாடழிவு வரை மக்களை இட்டு வந்ததில் தங்கள் தங்கள் விருப்ப-நம்பிக்கைகளுக்கிருந்த பங்கை உரசிப் பார்த்துக்கொள்ள முடியும். அப்படிப் பார்த்துக் கொள்ள முடிந்தால் அதுவே நம் எதிர்காலத்தை நம்பிக்கைக்குரியதாக்கும். ஜெயமோகனின் அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு சிறிய பகுதி:

“கோர்க்கி ரஷ்யப் புரட்சியின்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஸ்டாலினின் அழைப்பின் பேரில் அவர் ரஷ்யா திரும்புகிறார். ரஷ்யா வந்த கோர்க்கி உடனடியாக தன் கனவுகள் குரூரமாக கலைந்துவிட்டதை உணர்ந்திருப்பார். கலைஞன் அப்படி உணராமலிருப்பான் என நான் நினைக்கவில்லை. அவனுக்கு ஒரு துளி தகவலே போதும். சொந்த சகோதரர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை கோர்க்கி அறிந்திருப்பார். சக எழுத்தாளர்கள் கட்டாய உழைப்பு முகாம்களில் மட்கி அழிவதைக் கண்டிருப்பார். ஆனால் அவர் மௌனம் சாதித்தார்.

ஏன்? மனசாட்சியை ஏன் கோர்க்கி மூடி வைத்தார்? என்ன ஆயிற்று அவருக்கு? ஷேல்ஷெனிட்ஸினுக்கும் பாஸ்டர்நாக்குக்கும் இருந்த தைரியமும் தியாக உணர்வும்கூட இல்லாதவரா அவர்? இல்லை, அப்படி நினைக்க இடமில்லை. கோர்க்கி ஒரு மேதை. அப்படியானால் ஏன்?

கோர்க்கி உண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை ‘இல்லை’ என கற்பனை செய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம்வரை ஒத்திப் போட்டார்.

காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலைக் கூறு போடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள்வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக் கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை, தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்க வேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்....”

கோர்க்கியைப் போலவே மன உடைவுச் சங்கடத்தையும் குற்றவுணர்வுச் சித்திரவதையையும் நம் மத்தியிலும் பலர் அனுபவித்திருக்கக் கூடும். அவர்களில் கோர்க்கியைப் போலவே முடிவெய்தியவர்கள் போக, இன்று மீந்திருக்க வாய்ப்புப் பெற்றவர்கள் தங்களைத் தாங்களே கடைந்து பார்த்துக் கொள்ளவும், தங்களுக்குள்ளேயேனும் உண்மையை ஒப்புக்கொள்ளவும் முன்வர வேண்டும்.

அல்லாமல், எங்கள் தவறுகள் எல்லாவற்றையும் எதிரியின் இமாலயத் தவறு நியாயப்படுத்தி விடும் என்ற அதே யுக்தியுடன் எதிரியைப் பிரமாண்டப்படுத்திக் கொண்டிருப்பது, மக்களைப் புரக்கும் நேர்மையான அரசியல் வழியாகாது. முரண்களைச் சொல்லியபடி மக்களை விகாரப்படுத்தி வீறுபுகட்டி அரசியல் செய்வது நம்மை இன்னுமின்னும் சீரழிவுக்கே உட்படுத்தும்.

பேசுவதற்கும் இணக்கமுடன் சாதிப்பதற்கும் வேண்டிய சகிப்புத்தன்மையே இப்போது நம் தேவை.

1 comment:

செந்தில்குமார் said...

உளறுவாயன்
பட்டாசு போல வெடிக்கிரது வார்த்தைகள்....