Saturday, December 11, 2010

வீரப் புளுகுகளை விலக்குதலும் வாழ்வின் வழிக்கு நகருதலும்

ஜெயமோகன் உரையொன்றில் சொல்லியிருக்கும் ஒரு சீனக் கதை.

கொடுமையே உருவான செங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்துச் சென்றான். குதிரைப் படையினர் துரத்த குழந்தைகளை அள்ளிக்கொண்டு ஓடும் பெண்களைக் கண்டான். இடையில் ஒரு குழந்தையைத் தூக்கி மூத்த குழந்தையை ஓடவிட்டு ஓடிய ஒரு தாயை அவன் கண்டான். ஓடிய குழந்தை காலிடறி விழுந்தது. இடையிலிருந்த குழந்தையைக் கைவிட்டு பெரிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடினாள்.
அவளை இழுத்துவரச் சொன்னான் செங்கிஸ்கான்.

“நீ விட்டுவிட்டு ஓடியது உன் பக்கத்துவீட்டுப் பெண்ணின் குழந்தையைத்தானே? உண்மையைச் சொல்” என்றான் மன்னன் கத்திமுனையில்.

“இல்லை அரசே! நான் விட்டுச் சென்றதுதான் என் குழந்தை. இது இறந்துபோன பக்கத்து வீட்டுக்காரியின் குழந்தை. அவளுக்கு நான் வாக்குறுதி அளித்திருந்தேன்” என்றாள் அப்பெண். “என் குழந்தை கடவுள் அளித்தது. இந்தக் குழந்தையை அளித்தது தர்மம். கடவுளை விடப் பெரியது தர்மம்.”

“தாயே” என்று செங்கிஸ்கான் தலைவணங்கினான். “இந்த மண்ணை நான் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று அவன் திரும்பிச் சென்றதாகக் கதை.

இந்த அறத்தை தர்மத்தை எங்கோ நாம் தவற விட்டிருக்கிறோம். மற்ற இனத்தவரை, நாம் நம்பிய விடுதலைக்கு தடையாக இருப்பார்கள் என்று கருதியவர்களை போட்டுத் தள்ளிவிட்டு நம் வாழ்வை ஏற்படுத்திக் கொள்வதில் முனைப்புடனிருந்தவர்கள் நாம். நமது விடுதலையின் பெயரால் சாதாரண சனங்களும் அப்பாவிகளும் கொல்லப்படுவதை எதிர்க்காதிருந்தவர்கள். அதற்குரிய நியாயமாக நம்முடைய இழப்புகளை இறப்புகளைச் சொல்லிச் சமாதானமடைந்து கொண்டவர்கள். நாம் எப்படி வெல்லப்பட முடியாதவர்கள் ஆகமுடியும்?

புலிகள் சிங்கள அப்பாவி சனத்தைக் கொல்லக் கொல்ல, நாங்கள் எதிரியின் பதில் தாக்குதலுக்குத் தப்புவதற்கான பதுங்கு குழிகளை வெட்டிக் கொண்டிருந்தோமே தவிர, அப்பாவிகளைக் கொல்லுவது பிழை என்று எங்களது படித்தோரும் சொல்லவில்லை@ பத்திரிகைகளும் சொல்லவில்லை. எங்களுடைய மக்கள் மீதான எதிரியின் விமானக் குண்டுத் தாக்குதல்களை நிறுத்தும் வழி அது ஒன்றுதான் என்ற மௌன அங்கீகரிப்பும் மறைமுக ஊக்குவிப்புமே நம்மவர்களிடம் காணக்கிடைத்த ‘அற ஞாய’மாயிருந்தது.

80 ஆயிரம் முஸ்லிம்களை அவர்கள் வாழிடத்தை விட்டு ஒரே இரவில் துரத்திய போதும், நாம் மகா தவறொன்றுக்கு மௌன சாட்சிகளாயிருக்கிறோம் என்ற குற்றவுணர்வை ஒளித்துக்கொள்ள ‘விடுதலை ஞாய’த்தைப் போர்த்து மூடிக்கொண்டு பொங்கி நடந்தோம். நம் போராட்ட வீறு தமிழ், முஸ்லிம், சிங்கள அப்பாவி மக்கள் மீதெல்லாம் பாய்ந்தபோது அவற்றைக் கண்டுகொள்ளாமல் - கண்டிக்காமல் இருக்க, நாம் நமது கவலைகளை இழப்புகளைப் பெரிதாக்கி வைத்துக் கொண்டோம். ‘எதிரியின் அரக்கத்தனமும்... எங்களது அவலங்களும்..’ என்பதற்கப்பால் எங்களுக்கு வேறெந்த அற நியாயங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை.

பொதுசனங்களின் மீதான எங்கள் போராட்டப் பாய்ச்சல்களை கொலைத் தாக்குதல்களை முளையிலேயே நாம் கண்டித்துப் பேசியிருந்தால் அல்லது மனப்பூர்வமாகவேனும் வெறுத்து ஒதுக்கியிருந்தால், அந்த நீதி ஒன்றுக்காகவேனும் நாம் பயப்படாமல் நிமிர்ந்து நின்றிருக்கேலும்.
அல்லாமல், தமிழ் மக்களை ராணுவம் கொல்லுறதுக்குப் பதிலடியாக, சிங்கள மக்களைக் கொல்லாமல் எங்களுக்கு வேறுவழியில்லை என்றொரு ‘நியாயத்தைப்’ பேசிக்கொண்டிருந்ததன் பலனையே கடைசியில் நாம் கண்டது. ஒரு தொகை தமிழ்மக்கள் அழிந்தாவது அந்த நியாயத்தின் கெடுதியைப் புரிந்துகொள்ளட்டும் என்று உலகம் முழுவதுமே நம்மைக் கைவிட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

இப்போதும், எமது பக்கம் அறமும்-நியாயமும்-சரியும் இருக்க நாம் தோற்றுப் போனோமே@ உலகம் முழுவதும் அநியாயத்தின் பக்கமிருந்துவிட்டதே என்ற கழிவிரக்கத்திற்கு அப்பால், நாம் தொலைத்துவிட்டிருந்த அறவுணர்வை – நியாயமனத்தை முழுமையாக ஒப்புக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. நமது துயரங்களுக்குக் காரணமாக நமக்கு வெளியே உள்ள காரணிகளைத் திட்டிப் பிரமாண்டப்படுத்துவதிலும், அந்த வெறுப்புணர்ச்சியை உயர்த்திப் பிடிப்பதிலும் நம் தரப்புப் பிழையை ரகசியமாக்கிவிட அல்லது புறக்கணித்துவிட முயல்கிறோம். இதுவே நம்மை ‘வாழச் செய்யும் வழிக்கு’ நகர விடாமல் வழிமறித்து நிற்கிறது.

உலக வல்லரசுகளின், அரசு அதிகாரத்தின் பெரும் பெரும் பிழைகளுக்கு முன்னால், நமது பிழைகள் கண்டுகொள்ளத் தக்கவையல்ல என்பதைச் சொல்லி எப்படி நம்மை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்? எப்படி நம் அழிவைத் தடுத்துக்கொள்ள முடியும்? இன்றைய உலகுக்கு மனசாட்சியே இல்லை என்று சொன்னால், அதை எதிர்த்தழிய நம்மைத் தேர்ந்தெடுத்தது எது? மனசாட்சியற்ற உலகின் எல்லா அதிகாரம்நிறை மக்கள்விரோத அரசுகளின் கீழும் மக்கள் பேரழிவுகள் தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பது எப்படி? நம்மிடம் வீர எழுச்சியை வேண்டிநின்ற வெளியார் யாரும் நமது முட்டாள்தனங்களை நமக்கு உணர்த்த மாட்டார்@ அதையெல்லாம் நாமேதான் விளங்கி நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பகைவெறுப்பு நியாயப்படுத்தல்களும், வீரப்புளுகுகளும் விலக்கி நாம் வெளியே வரவேண்டும்!

உலகின் மனசாட்சியை அருட்டுவதற்கு, நமது கோரிக்கைகளிலும் போராட்ட முறைகளிலும் அறமும் நியாயமும் இருக்க உறுதிசெய்திருக்க வேண்டுமென்பதை எப்படி மறந்தோம்? எதனால் அதையெல்லாம் புறக்கணித்தபடியே எதிரிகளை வென்றுவிடலாம் என்று நம்பினோம்? நம்புகிறோம்?

மக்கள் மீதும் உயிர்கள் மீதும் அன்பு கொள்ளுதல் என்பது – அவர்களது அவலங்களும் வாதைகளும் தவிர்க்க முடியாதவை, உலக எதிரிகளின் குரூரத்திற்கு முன்னால் பாதுகாக்க எந்த மார்க்கமுமில்லாதவை என்ற கையறுநிலைப் புலம்பல் மட்டும்தானா?

அதுதான் முழுக்க முழுக்க உண்மையா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். தமிழ் மக்களின் பாடழிவை, பல்லாயிரம் உயிர்களின் வாதையைத் தடுத்திருக்கக் கூடிய – குறைத்திருக்கக் கூடிய எந்த வழிமுறையும் எம் கையில் இருந்திருக்கவில்லையா? முன்கூட்டியே இந்த விளைவையும் முடிவையும் நாம் உணர்ந்திருக்கவில்லையா? அதுகுறித்துப் பேசுவதை, அப்பாவி மக்களுக்கு உணர்த்துவதை நாம் ஒத்திப் போட்டபடியே வந்தது நம் தரப்பிலிருந்த குரூரம் அல்லவா?

இப்போதும் வெறுப்பையே விதைப்பதல்லால் வேறென்ன செய்துவருகிறோம் நாம்? எதிரிகளை அழித்தொழிக்காமல் நமது வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியாது என்பதுதான் நம்முன்னாலிருக்கும் ஒரே உண்மையா? சிங்கள சமூகம் உண்மையில் அவ்வளவு குரூரமானதுதானா? ஏனைய சமூகங்களுடன் இந்த நாட்டில் ஒன்றாகச் சேர்ந்து வாழும் சூழலை ஏற்படுத்த நம்தரப்பு முன்முயற்சியை நாம் சரியாகச் செய்கிறோமா? சிங்களவனும் சரிவர மாட்டான்; முஸ்லிமும் சரிவர மாட்டான்; பறங்கியும் சரிவர மாட்டான் என்பதுதானா அது?


No comments: