Monday, December 6, 2010

உணர்ச்சிகரத் தூண்டுகையும் உயிர்த்தியாக வஞ்சனையும்

வன்முறையின் தோல்வியை இவ்வளவு குரூரமாக அனுபவித்த பிறகும், அதைவிட்டு வேறு வழிமுறைகளை யோசிக்க மாட்டாதவர்களாக அல்லது யோசிக்க விடாதவர்களாக இன்னும் பலர் இருப்பது ஒருவகையில் நம் சமூகத்தின் சாபக்கேடுதான்.

வெறுப்பை ஒருபோதும் வெறுப்பினால் சாந்தப்படுத்த முடியாது. பகையை பகையினால் வெல்வது சாத்தியமில்லை என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்து கொண்டுவிட்டதுதான் என்றாலும், இன்னமும் வன்முறையை நியாயப்படுத்தக் கிடைக்கும் ஊகங்களையும் உணர்ச்சி வேகங்களையும் கொட்டி அழிவதிலேயே முனைப்பாயிருக்கிறோம் நாம்.

வன்முறையை வன்முறையால்தான் நிறுத்த முடியும் என்று நாம் சொல்வது வெறும் ஊகமல்லாமல் வேறென்ன? மிகப் பயங்கரமான சூழல் மாசு நம் மனங்களினுள்ளேதான் மறைந்து கிடக்கிறது. எமது அறியாமையிலும், ஆணவத்திலும், ஆத்திரத்திலும், அடையாளங்களை முன்னிறுத்தி ரோசப்படுவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும், பகை வளர்த்து அழிவதிலும் இதை வெளிப்படுத்தி வருகிறோம். காந்தி சொன்னது போல, திருப்பித் தாக்குவதுதான் உயிர் வாழ்வதற்கான நியதி என்று நம்புவது போல நடிக்கின்றோம்.

எங்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அந்த நெருக்குதல்களிலிருந்து மீள வேண்டிய தேவை உண்டு. இதையெல்லாம் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நமது தீர்வுக்காக நாம் வன்முறை வழியை நாடி அதில் மிகப் பலமும் அடைந்து வருகிறோம் என்று நம்பியது எவ்வளவு பெரிய மாயையாகப் போயிற்று? அந்த வன்முறைப் பலத்தை நசுக்கிவிடக் கூடிய பெரிய வன்முறைப் பலத்தை மிக எளிதாக எதிர்த் தரப்பு திரட்டிக் கொண்டுவிட முடிந்ததைக் கண்டோம். பேரளவிலான அழிவுகளையும், சமூக மனோபலத்தின் வீழ்ச்சியையுமே அந்த வன்முறை வழி மிச்சம் வைத்துவிட்டு முடிந்தது.

மீண்டும் அந்த மிரட்டல் வழியையே கிட்டவோ தூரவோ இலக்காகக் காட்டி அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள் மக்களை முழு முட்டாள்களாயடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவிர வேறொன்றுமில்லை. மக்களுக்கான வாழ்வைத் தேடித்தர வேறெந்த வழியையும் காண முடியாத இவர்கள் வன்முறையையும், பகைவெறுப்பை எரியவிடுவதையும் தவிர மற்றதெல்லாம் பணிந்து போதலே என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்; உசார் மடையர்களாக்குகிறார்கள்.

உலகில் உண்மைகளும் நம்பிக்கைகளும் பலவாறாக உள்ளன. ஒரு உண்மைக்குப் பின்னாலுள்ளவர்கள் இன்னொரு உண்மையை நம்புகிறவர்களோடு ஒத்துப்போக முடிந்தால் முரண்பாடு ஏற்படாது. ஆனால் யதார்த்தத்தில், தங்களது நம்பிக்கைதான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புவதே ஒவ்வொருவரினதும் இயல்பாயிருக்கிறது. தாம் நம்பாத மற்றையதைச் சகித்துக்கொள்ள முடியாமல் போவதால் மோதல் உருவாகிறது. அவரவர் உண்மையை நிலைநாட்ட வன்முறையும் சரி என்றாகிவிடுகிறது. முற்றுண்மை இதுதான் என்ற நம்பிக்கையே வேறுபாடுகளைத் தாங்க முடியாமல் செய்துவிடுகிறது.

ஒவ்வொருவருக்குமோ அல்லது ஒவ்வொரு குழுவுக்குமோ தனித்தனி உண்மை இருக்கும்போது, அந்த இருதரப்பும் வாழ்வதற்குரிய நியாயம் வன்முறையால் எப்படி உருவாகும்? ஒரு உண்மையை அழித்து மறு தரப்பை நிலைநாட்டுதல் எப்படி நாகரிகமடைந்த மனிதகுலத்தின் ஏற்பாடாக இருக்க முடியும்? வன்முறையின் பலவீனத்தையும், மனிதவிரோத பிற்போக்குத் தன்மையையும் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் நம் வாழ்வுக்கு வழிகாண முடியாது.

வன்முறைப் பாதையில் இருந்து விடுபட்டுத் தன் மக்களுக்கு விடுதலை வாழ்வை அளிக்க முடிந்த நெல்சன் மண்டேலா, தனது மனதில் மாற்றத்திற்கான பொறியை ஏற்படுத்திய சம்பவத்தை “விடுதலைக்கான நீண்ட பயணத்தில்” என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். கிராமப்புறமொன்றில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலத்தில், மண்டேலா குருவி ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறார். அவர் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரரின் ஐந்து வயது மகன் இறந்த பறவையைப் பார்த்து கண்ணீர் மல்க, ஏன் இந்தப் பறவையைக் கொன்றீர்கள். அதன் தாய் கவலைப்படுமே என்கிறான். இதைக் கேட்டவுடன் தனது உணர்வில் ஏற்பட்ட மாற்றங்களை மண்டேலா நினைவுகூருகிறார். “எனது கர்வமான மனநிலை உடனடியாக வெட்கமாக மாறியது. இச்சிறுவன் என்னைவிட மனிதாபிமானம் மிக்கவன் என்றுணர்ந்தேன்” என்றெழுதுகிறார். தான் ஒரு அகிம்சாவாதியல்ல, தனது சிந்தனைகளே முற்றுண்மையானவையுமல்ல என்ற தெளிவு அவருக்கு இருந்தது. மக்கள்மீது ஆழமான அன்புடன் பயணப்பட்டவர் என்பதாலேயே குருவியைச் சுட்ட சம்பவத்தில், போராட்ட வெற்றிக்குத் தேவையான பாடத்தைப் படிக்க முடிந்தது.

உயர் இலட்சியங்களுக்காக மரணிப்பதே உன்னதமான மனிதப்பண்பு என்கிற விதமாகக் கட்டப்பட்டிருக்கும் புனைவுகள் எல்லாம் மனிதர்களை உணர்ச்சிவசப்பட வைத்து அவர்களுள் புகுத்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். தத்தம் இன, மத, நிற, மொழி போன்றவற்றின் அடிப்படையில் சீண்டிவிடப்படும் ரோச உணர்ச்சிகளுக்காக உயிர்த்தியாகம் வரை செல்வதை ஊக்குவிப்பதாய் இது அமைகிறது.

மனிதகுலம் மரணவிருப்பத்தினால் வசீகரிக்கப்பட்டிருப்பதற்கு, ஆயுத விற்பனையிலிருந்து அணுவாயுதச் சேமிப்பு வரை நிரூபணங்கள் ஏராளம். இந்த வன்முறைப் போட்டா போட்டி நோக்கி மனிதகுலத்தை இழுத்துச் செல்லும் பணியில் நம் பங்கிற்கும் நம்மால் இயன்ற அளவில் வன்முறை நியாயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதா? பகை உயிர்களை அழித்தொரு சுபிட்ச வாழ்வு என்பது மனிதர்களாக வாழச் சிந்திப்போரிடம் எழுகிற நேர்மையான உணர்வுதானா?

உயர் இலட்சியங்களுக்காக மரணிப்பதைவிட நல்ல வருங்காலத்தில் நம்பிக்கையுடன் வாழவே மக்கள் விரும்புவார்கள் என்று சொன்னால், அதைக் கோழைத்தனம் என்று அடக்குவதா? ‘வாழ்வைத் துச்சமாக மதிப்பவனே வீரன்’ என்ற மன்னர்கால ஏமாற்றுத்தான் இன்னமும் வீரத்தின் இலக்கணமா? உயிர்களைக் காப்பாற்றி வாழ்வதும் வாழ வைப்பதும் அல்லவா வீரம்?

வன்முறைப் போராட்டத்திற்கு இளைஞர் குழு போதும். ஜனநாயக இயக்கத்திற்கே பெண்கள், சிறுவர், முதியோர், இளையோர் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்குதாரராக வேண்டும். நல்ல மாற்றத்திற்கும், நல்ல வாழ்வுக்கும், நல்ல சூழலுக்குமாக எல்லோருமாய் பங்குகொள்வதா? அல்லது எல்லாவற்றையும் வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சாவு நம்மையும் நெருங்கிய பிறகே அவர்களைத் திட்டித் தீர்க்கக் காத்திருப்பதா?

நம் பழைய நினைப்புகளிலிருந்து நாம் மீள வேண்டும். புதிய உலகுடன் பொருந்தியதாய், நாம் மீள்வதற்கு – வாழ்வதற்கு வழிகாணும் பொறுப்பை உணர வேண்டும். பழசுகளைத் திரும்பத் திரும்பக் கிளறிக் கொண்டிருப்பதும், ஒருவரையொருவர் நம்பமுடியாமையை வெளிப்படுத்திக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருப்பதும், எதிர்த்தரப்புப் பிழைகளையே பேச்சுநிரலில் முதன்மையாக்கிக் கொள்வதும் இதற்கு வழிகாட்டாது. எதிர்காலத்தை மையப்படுத்திய சிந்தனையே எங்கள் பழைய சிக்கல்களை எல்லாம் புதிய நோக்கில் பார்ப்பதற்கு உதவும். சிங்களவரும் அவர்தம் அரசாங்கமும் எதையும் செய்யாது; இப்போதைக்கு நமக்கு நல்லதாய் எதுவும் நடக்காது என்னும் விரக்தி – வெறுப்புச் சுழலிலிருந்தும் நாம் விடுபடுவதற்கு முடியும்.

மீள்நல்லிணக்கத்தின் மூலம் தீர்வு வழிமுறைகளைக் கண்டறியும் வகையில் உறவுகளை மேம்படுத்துவதையும், நம்மை விரோதமற்றவர்களாக வெளிப்படுத்திக் கொள்வதையும் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

வாழ்வின்றி, விடுதலை மற்றும் சகல உரிமைகளும் அர்த்தமின்றிப் போகின்றன.

1 comment:

Anonymous said...

சிறந்த தேவையான கட்டுரை.
வன்முறையின் துன்பத்தை குரூரமாக அனுபவித்தவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள். புயம்பெயர்ந்த தமிழர்கள் பலர் அவர்கள் துன்பத்தை வைத்து லாபம் சம்பாதித்தவர்கள். வன்முறையின் துன்பம் தெரியாமல் உணர்ச்சி தூண்டுதலில் துள்ளி குதிப்பவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தோர்.