Monday, December 27, 2010

யாரும் இங்கே வீணாகக் கூடாது


உலகில் எத்தனையோ படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு படைப்பும் உயிர்த் துடிப்பானவை. அதனதன் பிறப்பில் உன்னதமானவை. ஒவ்வொரு படைப்பும் தன் தேடலைத் தேடியே ஜீவிக்கின்றன. ஜீவன் என்றால் உயிர். இந்த உயிர் பயன்படாமல் அழிந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு படைப்பும் கவனமாக இருக்கின்றது. அதனால் அது தன் தேடலைத் தொடங்குகின்றது. ஜீவிப்பதற்காக. ஆம், இந்த உலகில் நல்லவண்ணம் வாழ்வதற்காக.

வாழ்க்கை எப்போதும், எல்லோருக்கும் சொல்வதைப் போல இருப்பதில்லை. இங்கு சோகம்தான் நிரம்பியிருக்கின்றது. போராட்டங்களும், பிரச்சினைகளும்தான் சோகம் நிறைந்த வாழ்வைச் சுகமாக மாற்றுகின்றன. இயல்பாக இருக்கவும் வைக்கிறது.

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...

ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''

இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''

கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-

"அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''

"அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''

"உன் தாத்தா?''

"என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''

"இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''

இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.

"நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''

"உங்க தாத்தா..?''

"அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''

"இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.

பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய நாள். மாடுகள் அடைக்கப்படுகிற தொழுவம், அவர் பிறந்ததால் உயர்த்தப்பட்டிருக்கிறது. தொழுவத்தில் பிறந்த அவரைத்தான் கிறிஸ்தவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

அவர் மனிதகுலம் உயர்வதற்காக எடுத்துரைத்த சிந்தனைகள்தான் பைபிள் என்கிற வேதப்புத்தகம். வாழ்க்கைக்கான, குறிப்பாக இளைஞர்களுக்கான முத்தான மூன்று சிந்தனைகளை உரத்துச் சொன்னவர் இயேசு.

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், இந்த மூன்றும் வெற்றிக்கான விதைகள். சில விதைகள் பயனில்லாமல் சோடையாகிப் போகும். ஆனால் இது நம்பிக்கைச் செடியை வளர்க்கிற நல்ல விதை. கருத்து நிறைந்த விதை.

அழுகின்றவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. இது என்ன முரண்பாடு? அழுகிறவர்கள் எப்படி பாக்கியவான்கள் ஆவார்கள் என்று மனது கேட்கலாம். அழுபவன் எப்பொழுதுமே அழுது கொண்டிருக்க மாட்டான். பிறர் அழுவதையும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கு ஏதேனும் இரண்டு ஆதரவுக் கரங்கள் நிச்சயமாக நீளும். அவர்கள் ஆதரவு பெறுவார்கள். எவரும் இங்கே வீணாகி விடுவதில்லை. அதனால்தான், `என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தருவேன்' என்கிறார்.
 
இனிய இளையோரே! இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். சற்றே இளைப்பாறுதல் தருவேன். சற்று நேரம்தான். அதாவது, சிறிதுநேரம்தான். அதற்குப் பிறகு அவரவரின் தேடலைத் தேடியாக வேண்டும். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்று தெளிந்து சொன்னது இதன் வெளிப்பாடுதான். இதில் நீங்கள் எதை நோக்கித் தேடுகிறீர்களோ அதைக் கண்டடைய முடியும்.

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. ஆம், அது ஒரு தேடல். குழந்தைக்கான உணவு கிடைத்ததும் அதன் அழுகை நின்று விடுகிறது.

விளக்கைத் தேடி அந்த விளக்கை ஏற்றியவர்கள் வெளிச்சத்தை அனுபவிக்கின்றார்கள்.

27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்து கொண்டே வெள்ளையரின் அரசாங்கக் கதவுகளைத் தட்டினார் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் அடைந்தது.

சிந்தனைச் சிறகுகளை விரித்து, வைக்கத்தில் பெரியார் போராட்டத்தைத் துவக்கினார். வைக்கம் ஆலயக் கதவு திறந்தது. சமூகநீதி பிறந்தது.

தேடல்களைத் தொடங்கிய எவரும் வாழ்க்கைப் பயணத்தில் வீணாகிவிடவில்லை. அவர்கள் எல்லோரும் வரலாற்று ஏடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல தேடல் வெற்றியைத் தரும்.

பேராசிரியர்.க.ராமச்சந்திரன் 

No comments: