Friday, December 24, 2010

இதெல்லாம் தற்செயலா?

'அது என்னவோ தற்செயலாக நடந்தது' என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். ஆனால் சில சம்பவங்களைத் தற்செயலாக நடந்தது என்று சொல்ல முடியாது. இறைவனின் திருவிளையாடல் என்று வேண்டுமானால் சொல்லலாம். அத்தகைய நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் உமா ஜலபதி என்ற வாசகர்.

பெயரில் என்ன இருக்கிறது?

அமெரிக்காவில் பாட்ரீஷியா என்ற பெயர் கொண்ட இரண்டு பெண்களுக்கு அரசாங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அதில் இருவருக்கும் ஒரே எண் தரப்பட்டிருந்ததால் அந்த பிழையைத் திருத்திக் கொள்வதற்காக இருவரும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்றார்கள். இரண்டு பெண்களும் சந்தித்த போது -

அவர்கள் இருவருக்கும் முழுப் பெயர் பாட்ரீஷியா ஆன் காட்பெல் என்பதும்; இருவருடைய தந்தையின் பெயர்களும் ராபர்ட் காம்பெல் என்பதும்; இருவருடைய பிறந்த தேதியும் 1941 மார்ச் 13 என்பதும்; 1959 ம் வருடம், பதினொரு நாட்கள் முன்பின்னாகத் திருமணம் நடந்திருக்கிறது என்பதும்; இருவருடைய ஒரு குழந்தை 19 வயது, மற்றது 21 வயது என்பதும்; இருவரும் வண்ண ஓவியங்கள் தீட்டுவார்கள் என்பதும்; இருவரும் அழகுக் கலையைப் பயில்கிறவர்கள் என்பதும்; இருவரும் வர்த்தக நிறுவனங்களில் கணக்காளராக வேலை செய்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

ஒரு தோட்டாவின் வரலாறு

1893ம் ஆண்டு ஹென்றி ஜீக்லண்ட் என்பவர் தன் காதலியை மணக்க மறந்துவிட்டார். அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள். அவளுடைய சகோதரனுக்கு ஹென்றியின் மீது கடும் கோபம் ஏற்பட்டது. அவரைக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்கு சென்றான். ஹென்றி அப்போது ஹென்றி அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் துப்பாக்கியால் சுட முயன்றான். அதிர்ஷ்டவசமாகக் குறி தப்பி, தோட்டா ஹென்றியின் முகத்தை மட்டும் உரசியபடி அருகில் இருந்த ஒரு மரத்தில் பாய்ந்து புதைந்து விட்டது.

1913ம் ஆண்டு ஹென்றி அதே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு மரத்தை வெட்ட முடியாததால் வெடியை வைத்தார். அந்த வெடி ஏற்படுத்திய அதிர்ச்சியில் மரத்தில் புதைந்திருந்த தோட்டா சீறிக் கொண்டு பாய்ந்து ஹென்றியின் தலையில் தாக்கியது. அந்தக் கணமே ஹென்றி உயிரிழந்தார்.

மரணம் ஒன்று சேர்ந்தது

1996ம் ஆண்டு பாரிஸ் நகரில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு கார்கள் பயங்கர வேகத்தில் ஓடி ஒன்றோடொன்று நேருக்கு நேராக மோதிக் கொண்டு அப்பளமாய் (பாரிஸில் அப்பளம் இருக்கிறதா?) நொறுங்கின. போலீசார் விசாரித்த போது ஒரு காரை ஒட்டி வந்தவர் கணவர் என்றும் எதிராகக் காரை ஒட்டி வந்தவர் அவருடைய மனைவி தெரிந்தது. இருவரும் ஏதோ தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று போலீஸ் முதலில் சந்தேகித்தது. ஆனால் இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று தெரிய வந்தது. அன்று இரவு கணவன் கார் ஓட்டி வருவான் என்று மனைவிக்குத் தெரியாது; மனைவி கார் ஓட்டி வருவாள் என்று கணவனுக்கு தெரியாது.

காணாமல் போன மகள்

மைகேல் டிக் என்பவர் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குத் தன் குடும்பத்துடன் வந்தார். அவருடைய நோக்கம் உல்லாசப் பயணம் அல்ல. பத்து வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் காணமல் பொய் விட்ட தன் மகளைத் தேடிக் கண்டுப்பிடிப்பது தான்.

பல ஊர்களில் விசாரித்தும் மகளைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நாடு திரும்பும் நேரத்தில் 'ஸஃபோக் ஃப்ரீ ப்ரெஸ்' என்ற பத்திரிகையில் தன் துயரத்தைக் குறித்து ஒரு பேட்டி கொடுத்தார். அவரைப் புகைப்படம் எடுத்துக் கட்டுரையையும் வெளியிட்டது அந்தப் பத்திரிகை.

இந்த செய்தியை மைகேல் டிக்கின் மகள் பார்த்தாள். தந்தை தங்கியிருந்த இடத்துக்கு சென்று அவருடன் சேர்ந்து கொண்டாள்.

இதில் என்ன விசேஷம்? மைகேல் டிக்கை அந்தப் பத்திரிகை படம் பிடித்த போது அவருக்குப் பின்னே பலர் நின்றிருக்கிறார்கள். அவர்களில் அவருடைய மகளும் ஒருவர்! இருவருக்கும் அப்போது அது தெரியாது.

எந்த நேரமும்...

டேனி டி டாயிட் என்ற பிசினஸ் புள்ளி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஊரில் அவரை சொற்பொழிவாற்ற அழைத்தார்கள்.

தலைப்பு: 'எச்சரிக்கையாக இருங்கள். மரணம் என்பது எந்த நேரத்திலும் நிகழலாம்'.

சொற்பொழிவை முடித்துக் கொண்டு உட்கார்ந்தவர் ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அது தொண்டையில் அடைத்துக் கொண்டது. மூச்சுத் திணறி இறந்து போனார்.

மின்னலுக்கென்மேல் என்னடி கோபம்?

முதலாவது உலகப் போரின் போது மேஜர் ஸம்மர்ஃபோர்ட் என்ற குதிரைப் படை அதிகாரியை ப்ளாண்டர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரின் போது ஒரு மின்னல் தாக்கியது. குதிரையிலிருந்து விழுந்தார். பக்கவாதத்தினால் இடுப்புக்குக் கீழே செயலாற்றுப் போனார்.

ஆறு வருடங்கள் கழித்து கனடாவுக்குப் போனார். வான்கூவர் நகரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீண்டும் ஒரு மின்னல் தாக்கியது. உடலின் வலது பக்கம் செயலிழந்தது.

இரண்டு வருடங்கள் சிகிச்சை பெற்றபின் ஒரு பூங்காவில் காற்றாட உட்கார்ந்திருந்தார். அது ஒரு கோடை நாள். திடீரென்று ஒரு சூறைக் காற்று அடித்து அவரை வீழ்த்தியது. தேகம் மொத்தமும் செயலிழந்தது. அதன் பின் இரண்டு உயிரோடு இருந்து இறந்து போனார். நாலு ஆண்டுகள் கழித்து அவருடைய கல்லறையின் மீது ஒரு மின்னல் தாக்கி அவருடைய பெயர் பொதித்த நினைவுச் சின்னம் நொறுங்கி விழுந்தது.

உயிருக்கு உயிர்

1965ம் ஆண்டு சலேம் என்ற அமெரிக்க நகரில் ரோஜர் லாஸியர் என்ற நான்கு வயது சிறுவன் கடலில் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு அபாயமான இடத்தை அடைந்தவன் முழுகிப் போகவிருந்தான். அலைஸ் ப்ளெய்ஸ் என்ற பெண் அவனைக் காப்பாற்றினாள். 1974ம் ஆண்டு அதே கடற்கரையில் அவன் ஒரு சிறு படகில் உல்லாசப் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒருவர் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைக் கை கொடுத்துக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான்.

அந்த மனிதர் அலைஸ் ப்ளெய்ஸின் கணவர்.

ரா.கி.ரங்கராஜன்                         

1 comment:

yazarshareek said...

first... :)