Friday, December 17, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

 
இந்தப் படத்தை பார்க்காதீங்க...

லைப்பிலுள்ள வாசகத்தை சொல்லிச் சொல்லித்தான் மேற்கத்திய விமர்சகர்கள் ஒரு ஹாலிவுட் படத்தின் டிரவுசரை அக்கு வேறு ஆணி வேறாக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படம், 'தி வாரியர்ஸ் வே' பக்கா கொரியன் நேட்டிவிட்டி என்பது விமர்சகர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க காரணமென்றால், கொரியன் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஜாங்டன் கண், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது அவர்கள் பற்களை அழுத்தமாக கடிக்க மற்றொரு காரணம். போதும் போறாததற்கு ஸ்னக்மோ லீ என்ற கொரியன் இயக்குநரே இப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். என்ன, தயாரிப்பாளர் மட்டும் எந்த சாங் சூன் லீ-யும் இல்லை. அதாவது கொரியன் இல்லை. பதிலாக, 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' படத்தை தயாரித்து கல்லாவை நிரப்பிக் கொண்ட அமெரிக்கரான பேரி.எம்.ஆஸ்போர்ன்.

இப்படி கிழக்கத்திய கலைஞர்களை வைத்து மேற்கத்திய தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்திருப்பதே விமர்சகர்களின் புகைச்சலுக்கு காரணம் என செல்லுலாயிட் அம்மன் முன்னால் கற்பூரம் ஏற்றி சிலர் சத்தியம் செய்கிறார்கள். இதை ஏற்பதும், துறப்பதும் அவரவர் ரசனையை பொறுத்த விஷயம்.

ரைட். கதை?

கருவில் உருவாகும் சிசுவுக்கே தெரிந்த ஒரு கதையில், மகாபாரத இதிகாசத்தின் கிளைக் கதை ஒன்றை மிக்ஸ் செய்தால் வரும் ஒன்லைந்தான், 'தி வாரியர்ஸ் வே' படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

மார்ஷியல் ஆர்ட்ஸில் கரை கண்ட இரு குழுக்கள் கொரியாவில் மோதுகின்றன. ஒரு குழு ஜெயிக்கிறது. தோற்ற குழுவை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என வெற்றி பெற்ற குழுவின் தலைவர் கட்டளையிடுகிறார். ஆனால், இந்தக் கட்டளையை அக்குழுவின் தளபதி மீறுகிறான். காரணம், தோற்ற குழுவில் எஞ்சி நிற்பது ஒரேயொரு பச்சிளங் குழந்தைதான். அக்குழந்தையை கொல்ல அவனுக்கு மனமில்லை. அதற்காக குழந்தையை அப்படியே விட்டு விட்டாலோ, வேறு யாரவது கொன்று விடுவார்கள்.

எனவே குழந்தையுடன் தப்பித்து மேற்கு அமெரிக்காவுக்கு வருகிறான். அவன் வந்து சேர்ந்த கிராமம் சொல்ல முடியாத சோகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வற்புறுத்தியும் யாரும் அவனிடம் சோகத்துக்கான காரணத்தை சொல்லவில்லை. அதே கிராமத்தில் கண்களில் வெறுமை வழிய வாழும் அழகான இளம் பெண்ணுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அவளும் அவனிடம் தன் வெறுமைக்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. பதிலாக மார்ஷியல் ஆர்ட்ஸில் வித்தகனான அவனிடமிருந்து அக்கலையை கற்றுக் கொள்கிறாள். அவனும் தனது வித்தை எந்த வகையிலாவது அவளுக்கு பயன்பட்டால் சரிதான் என கசடற கற்றுத் தருகிறான்.

ஒன் ஃபைன் மார்னிங், அந்தக் கிராமமே ஏன் சோகத்தில் மிதக்கிறது என்ற காரணம் அவனுக்கு தெரிய வருகிறது. பக்கத்து கிராமத்தை சேர்ந்த வில்லன். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தக் கிராமத்துக்கு வந்து வயதுக்கு வந்த இளம்பெண்களை தூக்கிச் சென்று வன்புணர்ச்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். அடுத்தமுறை வில்லன் வரும்போது உடன் செல்ல வேண்டியவள், அவன் மனம் கவர்ந்த இளம் பெண். அதனால்தான் அந்தப் பெண்ணின் கண்களில் வெறுமை.

இந்த 'கிழக்கத்திய' கதையைத்தான் 'மேற்கத்திய' விமர்சகர்கள் அடித்து, துவைத்து காயப்போடுகிறார்கள்.

ஆனால், லேட்டஸ்ட் டெக்னாலஜியில் சீட்டின் நுனியில் அமர வைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளை பாராட்ட மட்டும் அதே விமர்சகர்கள் தவறவில்லை.

விமர்சகர்களின் பேச்சை மீறி ரசிகர்கள் திரையரங்கு செல்லவும் அதுவேதான் காரணம்!
கே.என்.சிவராமன்                              

No comments: