Saturday, December 11, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உதயம்!

காலை நேரம்...
கண் விழித்ததும் தினசரி காலண்டரை பார்க்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள் கழிந்து விட்டது. பலரும் காலண்டர் தாளை படக்கென்று கிழித்துக் கசக்கிப் போடுவார்கள். எனக்கோ கிழித்துப் போட மனமில்லை. காரணம் அந்த நாளை நான் அர்த்தத்தோடு வாழ்ந்திருக்கிறன். அந்த நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளையும் அர்த்தத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

காலண்டரில் புதிய நாளைப் பார்க்கிறேன்.

டிசம்பர் 11 மகாகவி பாரதியின் பிறந்தநாள் கண்ணில் படுகிறது. பாரதி... அந்த முண்டாசுக் கவிஞன்தான் முடங்கிக் கிடந்த தமிழ்ச் சொற்களுக்குப் புதிய ரத்த ஓட்டம் பாய்ச்சியவன். எழுத்துக்கும், பேச்சுக்கும் மத்தியில் சுவர் எழுப்பிக் கொள்ளாத சுத்தக் கவிஞனவன். சுயமரியாதைக் கவிஞனவன். தாலாட்டுப் பாடித் தூங்க வைக்காமல் திருப்பள்ளியெழுச்சி பாடி சோம்பல் மனிதர்களின் உறக்கம் போக்கியவன்.

'எண்ணுவது உயர்வு, ஏறுபோல் நட, நன்று கருது, நாளெல்லாம் வினை செய்' என்பன போன்ற தன்னம்பிக்கைச் சிந்தனைகளை புதிய ஆத்திச்சூடியில் பதிவு செய்த மகாகவியின் பிறந்த நாள் (இன்று).
ஒவ்வொரு தேதியும் இப்படி ஏதேனும் ஒரு சேதியை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு காலைப் பொழுதும் வாழ்க்கைக் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்கிறது.

இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் ஒரு ரகசியம் மறைந்திருக்கின்றது. காலை உதயம் உன்னதமானது. அதுவும் அதிகாலை உதயம் ஆனந்தம் தருவது.

ஒரு காலை நேரம். திரைப்படத்தின் வழி திசைகளெல்லாம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் சத்யஜித்ரே. எட்டு வயதாக இருக்கும்போது தாகூரின் சாந்திநிகேதனத்தைப் பார்ப்பதற்காகத் தன் தாயாருடன் சென்றார் அவர். அப்போது ஒரு நோட்டு புத்தகத்தை தாகூரிடம் நீட்டி, "உங்களுக்குப் பிடித்த ஒன்றை எழுதிக் கொடுங்கள்'' என்று வேண்டினார்.

'நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன். நதிகளையும், மலைகளையும் கண்டு வந்தேன். அதற்காக மிகுதியான பணத்தைச் செலவழித்தேன். ஆனால் என் வீட்டு வாசலுக்கு அருகில் முளைத்திருக்கும் ஒரு புல்லின் நுனியில் படர்ந்திருக்கும் பனித்துளி ஒன்றில் உலகம் தெரிவதைக் காண மறந்தேன்' என்று எழுதிக் கொடுத்தார்.

ஆம்! உலகம் விடிகாலையின் பனித்துளியில் இருக்கின்றது என்பதை எத்தனைபேர் பார்த்திருப்போம்? அந்த அழகின் சிரிப்பில் எத்தனை பேர் மனதைப் பறிகொடுத்திருப்போம்? ஒவ்வோர் உதயத்திலும் ஓர் அழகு இருக்கிறது.

இன்னொரு உதய நேரம்... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம். அவர் மனிதநேயத்தின் இருப்பிடம். அவர் சொன்ன ஒரு செய்தி-

ஒருநாள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தில் ஒரு மல்லிகைக் கொடியை நட்டு வைத்தேன். அது நன்றாக வளர்ந்து விட்டது. பூக்களும் பூக்கத் தொடங்கின. ஒருநாள் நான் நடந்து வந்தபோது அந்தச் செடி கீழே சாய்ந்து பாதையில் கிடந்தது. நான் அதன் மேல் கால் வைக்க இருந்தேன். நல்லவேளை கவனித்து விட்டேன். அப்படியே திரும்பி விட்டேன். அப்போது எனக்கு ஒரு கவிதை தோன்றியது...  

சிறிய பூ
பெரிய பூவிடம் கேட்டது
நாம் ஏன் மலர்கிறோம்
பெரிய பூ சொன்னது
சூரியன் உதிக்கிறது
மயில் ஆடுகிறது
குயில் பாடுகிறது
மழை பெய்கிறது
அதைப் போலத்தான்
நாமும் மலர்கிறோம்
இது இயற்கையின் விதி
நம்மைப் பார்த்து
மனிதன் மென்மை அடைகிறான்
அதற்காகத்தான்
நாம் மலர்கிறோம்.

ஆம்! இப்படித்தான் ஒவ்வொரு காலை உதயமும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. உதயத்தில் மலரும் பூக்களிடமிருந்துகூட கற்றுக் கொள்வதற்கான ஓர் அருமையான பாடம் இருக்கின்றது. மென்மையாக இருப்பதற்கான பாடம் இருக்கிறது.
 பேராசிரியர் க.ராமச்சந்திரன்

No comments: