Friday, December 10, 2010

உலக மனித உரிமைகள் நாள்

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகள் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

மனிதஉரிமை நாள் - முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை

மனித உரிமை மீறல் நடப்பதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று உலக மனித உரிமை நாள் செய்தியாக முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி, "உலக மனித உரிமை நாள்'' கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதநேய உணர்வோடு, 1973-ம் ஆண்டிலேயே, மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த அரசு, தமிழகத்தில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக் கூடாது எனும் எண்ணத்துடன் 1997-ல் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில், "தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்'' எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது.

சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக சாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலைவாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து, அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக இந்த மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதிமன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்டுவதற்காக, அது தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டு முதல் இதுவரை வரப்பெற்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டிருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 2008-ல் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, அவர்கள் உயர வழிவகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறது இந்த அரசு.

இத்தகைய சூழ்நிலையில், மனிதஉரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுக்கப்பட்டாக வேண்டும் எனும் உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்; "மண்ணில் மனிதம் காப்போம், மனிதநேயம் வளர்ப்போம்'' என இந்த நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


No comments: