Wednesday, December 8, 2010

இன்றும் ஒரு தகவல்

நிகரற்ற நிஞ்சாக்கள்

நமது தமிழ் சினிமாக்களில் வில்லனின் அடியாட்கள் முதுகுக்குப் பின் மறைத்து வைத்திருக்கும் நீண்ட வாளை உருவி எதிரியை பயமுறுத்துவார்கள். இந்த பழக்கம் வந்தது நிஜாக்களிடம் இருந்து... நின்ஜாக்களின் முதுகில் எப்போதும் எதிரியை பதம் பார்க்க வாள் தயாராக இருக்கும்.

நிஞ்சாக்கள் 14 -ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள். ஜப்பானியர்கள். இகா, கோகோ வம்சங்களில் தான் முதல் நிஞ்சாக்கள் தோன்றினார்கள். ஜப்பானில் வீரம் என்றால் எல்லோர் நினைவிலும் வருபவர்கள் சாமுராய்கள். அதே போல் 'உளவு' என்றாலே எல்லோர் மனதிலும் வந்து நிற்பவர்கள் நிஞ்சாக்கள். நிஞ்சாக்களுக்கு எந்த போர் முறையும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் எதிரியை தாக்குவார்கள். இவர்களுக்கு கருணை, இரக்கம் என்பதெல்லாம் தெரியாது. கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும் கைவந்த கலை. உளவோடு சேர்ந்து எந்த சதியும் செய்யத் தயங்காதவர்கள். தங்களை உலகுக்கு உணர்த்தாமல் மறைந்து வாழ்வார்கள். சிறு வயதிலே நிஞ்சாவுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து விடும். திருடனைப்போல் நடப்பதும், யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொள்வதும் தான் முதல் பயிற்சி. அதற்கடுத்த பயிற்சி, எப்படி மனிதனை கொல்வது? மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி? என்று கற்றுத்தருவார்கள்.

ஜப்பானின் அரச குடும்பத்துக்கு எதிராக யாரவது மூச்சு விட்டால் கூட இந்த நிஞ்சாக்கள் மூக்கு வியர்ந்து விடும். அவர்களை கொன்று விடுவார்கள். அல்லது அவர்களது சொத்தை முழுவதுமாக கொள்ளையடித்து நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள்.

அரசுக்கு எதிராக செயல்படத் துணிந்த இருவரை யமாரோ ஷிமிடகோ என்ற நிஞ்சா, பெண் வேடமிட்டு ஏமாற்றிக் கொன்றதை ஜப்பானியர்கள் இன்றைக்கும் குழந்தைகளிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் சொத்துக்காகவும், வாரிசுக்காகவும் பல கொலைகள் மர்மமான முறையில் நடந்தன. எங்கு கொலை நடந்தாலும் அதை செய்தவர்கள் நிஞ்சாக்கள் என்றே மக்கள் கருதினார்கள். நிஞ்சாக்கள் மீது பழிபோட்டு தங்கள் எதிரிகளை தீர்த்துக்கட்டிய பிரபுக்களும் உண்டு.
நிஞ்சாக்கள் எப்போது ஒரு கூட்டமாகவே இருப்பார்கள். நிழல் போல செயல்படுவார்கள். பகைவர்களுடன் சண்டையிடும் போது எதிரிகளைப் போலவே உடையணிந்து அவர்களில் ஒருவராக கலந்து விடுவார்கள். எதிரிகளுக்கு உண்மை தெரிந்து சுற்றி வளைப்பதற்குள் அவர்களில் பாதிப்பேரையாவது கொன்று இருப்பார்கள்.

சாதாரண வேளைகளில் ஒரு கறுப்பு உடையை உடல் முழுவதும் மறைத்து கண் மட்டும் வெளியில் தெரியும் படி உடை உடுத்தி இருப்பார்கள். திடீரென்று நிஞ்சாக்கள் வந்து விட்டால் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே பணக்கார பிரபுக்கள் தங்கள் அரண்மனைகளில் ரகசிய பதுங்கு குழிகள், சுரங்கப்பாதைகள், எச்சரிக்கை மணிகளை அமைத்திருந்தனர். ஏனென்றால் நிஞ்சாக்களை பார்த்த பின் பிரபுக்கள் உயிரோடு திரும்பியதாக சரித்திரம் இல்லை.

நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதி நிலவும் நேரங்களில் அரசின் திட்டங்கள் கடைசி குடிமகன் வரை போய்ச் சேருகிறதா என்பதையும், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் செயல்படுகிறார்களா என்பதையும் உளவு பார்ப்பது தான் இவர்களது வேலை.

இப்படி அரசர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நிஞ்சாக்கள் 17 -ம் நூற்றாண்டோடு அழிந்து விட்டனர். பிரபுக்களின் குடும்பங்களில் இருந்து வந்த சாமுராய்களை விட பலமடங்கு வீரம் நிறைந்த நிஞ்சாக்களை யாரும் பெருமையாக கொண்டாடவில்லை. அவர்களின் தியாகம் அங்கீகரிக்கப்படவில்லை. மக்களிடம் போய் சேரவில்லை. காரணம் நிஞ்சாக்கள் ஜப்பானின் ஜாதிய முறையில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவில் தான் ஜாதிய கொடுமை என்றால், ஜப்பானிலுமா...?                             

No comments: