Friday, December 3, 2010

இன்று ஒரு தகவல்

ரூபாய் நோட்டு வந்த விதம்

இன்றைய உலகில் மதிப்பு என்பது பணம் சார்ந்ததாகவே இருக்கிறது. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்பது போல, பணம் இருப்பவர்களையே உலகம் மதிக்கிறது. இந்தப்பணம் காகிதங்களாகவும், உலோக நாணயங்களாகவும், பிளாஸ்டிக் கரன்சி என்ற கிரடிட் கார்ட், டெபிட் கார்டாகவும் உள்ளன.

பணத்தை செலாவணி என்று அழைக்கிறார்கள். செலாவணி என்பது பணப்புழக்கத்தையே குறிக்கும். பலவகை பொருட்களை வாங்க பயன்படும் உலோக நாணயங்களும், காகித நோட்டுகளும் செலாவணி எனப்படுகின்றன. வர்த்தகத் துரையின் அஸ்திவாரமே இந்த செலாவணிதான்.

நாகரீகம் வளரத் தொடங்கிய காலங்களில் மக்கள் தம்மிடமுள்ள தானியங்கள், புகையிலை, தோல், உப்பு இவற்றை பண்ட மாற்றாக கொடுத்தனர். சில கிராமங்களில் இன்றைக்கு கூட தானியங்களை கொடுத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முறை உள்ளது. ஆனால், இந்த முறையில் பல இடர்பாடுகள் உள்ளன. இதைத் தவிர்க்க மனிதன் தங்கம் அல்லது வெள்ளிக் கட்டிகளைக் கொடுத்துப் பொருட்களை வாங்க ஆரம்பித்தான். இதிலும் சிக்கல் இருந்தது. அந்த உலோகங்கள் எந்த அளவுக்கு தூய்மையானவை என்பதை கண்டறிவது சிரமமாக இருந்தது.


கி.மு.700 -ம் ஆண்டில் லிடியா என்ற நாட்டை ஆண்டு வந்த மன்னன் கயிஜாஸ், 'எலக்ட்ரம்' என்ற நாணயத்தை அறிமுகப்படுத்தினான். இதில் 75 சதவீதம் தங்கமும், 25 சதவீதம் வெள்ளியும் இருந்தன. இந்த நாணயம் அவரை விதையின் வடிவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இது வசதியாக இருந்தது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நாணயத்தை பயன்படுத்தினர். குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கு நாணயமுறை பரவியது. காலங்கள் செல்லச்செல்ல தங்கத்தை பயன்படுத்தி நாணயம் தயாரிப்பதற்கு பதிலாக செம்பு பயன்படுத்தப்பட்டது.

வர்த்தக உலகில் நாணயங்கள் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தன. ஆனாலும், நாணயங்கள் கனமான பொருளாக இருந்ததால் நிறைய நாணயங்களை தூக்கிச் செல்வதில் கஷ்டம். அதோடு வழிப்பறி திருடர்களுக்கும் நாணயங்கள் அடங்கிய பெரிய மூட்டை, நிறைய பணம் இருக்கிறது என்பதை காட்டிக் கொடுத்தது. இதைத் தவிர்பதற்காக காகிதத்தில் அச்சடித்து வெளியிடும் முறையை கொண்டு வந்தனர், சீனர்கள். கி.மு. 119 -ம் ஆண்டிலேயே காகித நாணயங்களை பணமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையைத் தருவதாக வங்கி அளிக்கும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகிதப்பணம் புழக்கத்திற்கு வந்தது. கி.பி.1661 -ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக் ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் இன்றைய முறையில் முதன் முதலில் காகித நோட்டை வெளியிட்டது. இன்று காகித நோட்டுகள் மட்டுமின்றி காசோலைகள், கிரடிட் கார்டுகள், இணையத்தளத்தில் பணமாற்றம் என்று பல வகைகளில் வர்த்தகம் நடைப்பெறுகிறது.                

No comments: