Friday, December 3, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

வெர்ச்சுவல் ஆக்ஷன்

இரண்டில் ஒன்றுதான் நடக்கப் போகிறது. ஒன்று, 'மச்சான்... இது படம் டா... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ல என்னமா புகுந்து விளையாடியிருக்கான்?' என்பார்கள். அல்லது 'மவனே இவ்வளவு தூரம் கிராபிக்ஸூக்காக உழைச்சவன் கொஞ்சூண்டு கதைக்காக உழைச்சிருக்க வேண்டாமா?' என சட்டையை பிடிப்பார்கள்.

ஆனால், மூன்றாவது தரப்பாக எதுவுமே இருக்கப்போவதில்லை. ஆறறிவு படைத்த உயிரினங்கள் அனைத்துமே மாய்ந்து மாய்ந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகப் போகும் 'ட்ரான் லிகஸி' - TRAN LEGACY ஹாலிவுட் படத்தை பார்க்கத்தான் போகிறது. இத்திரைப்படம் குறித்து மணிக்கணக்காக உரையாடி பிரித்து மேயத்தான் போகிறது.

கற்பனையான உலகைப் படைத்து அதில் வாழ வேண்டுமென்பதே கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த கற்பனை. சரியாக, 28 ஆண்டுகளுக்கு முன் 'ட்ரான்' ஹாலிவுட் படம் பிரபெஞ்சமெங்கும் வெளியாகி அக்கற்பனைக்கு உயிர்கொடுத்தது. உலகமும் அதிர்ந்து குலுங்கியது. எறும்பாக ஊரும் அச்சு எழுத்துக்களில் மட்டுமே வலம் வந்த வெர்ச்சுவல் உலகம் 1982ம் ஆண்டுதான் செல்லுலாயிடில் முதன்முறையாக மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, முழுக்க கிராபிக்சில் தயாரானப் படத்தை உலகெங்கும் விநியோகம் செய்ததும் அப்போதுதான். அந்தப் பெருமையை வால்ட் டிஸ்னி பெற்றது.

கல்லா கட்ட புதிய வாசல் கிடைக்கவே, வெர்ச்சுவல் உலகை மையமாக வைத்து அடுத்தடுத்து ஏராளமான கம்ப்யூடர் கேம்ஸ்களும், சின்னத்திரை தொடர்களும் வெளியாகி சக்கைப் போடு போட்டன; இன்றும் போடுகின்றன; இந்தப் புதிய ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட 'ட்ரான்' படக் கலைஞர்களும், மற்ற தயாரிப்பு நிறுவங்களும் சும்மா இருக்குமோ? இதோ 'ட்ரான்' படத்தின் தொடர்ச்சி வரப்போகிறது... அதோ வரப் போகிறது... என கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருந்தன. ஆனால், எதுவுமே செயல் வடிவம் பெறவில்லை.

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்த வால்ட் டிஸ்னி, 'அட போங்கப்பா... நாங்களே தொடர்ச்சியை வெளியிடுகிறோம்...' என்று களத்தில் குதித்துவிட்டது. இதுதான் 'ட்ரான் லிகஸி' ஹாலிவுட் படத்தின் முன் கதை.

முந்தைய 'ட்ரான்' படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாக நடித்த ஜேஃப் பிரிட்ஜஸ்ஸூம், ப்ரூஸ் பாக்ஸ் லீடனரும் அதே கதாபாத்திரத்தில் இந்த 'ட்ரான் லிகஸி' யிலும் வருகிறார்கள். முந்தைய படத்தை எழுதி இயக்கிய ஸ்டீவன் லெஸ்பர்க், இப்படத்தை தயாரிக்க மட்டும் செய்கிறார். கதையிலோ, திரைக்கதையிலோ அவர் தலையிடவில்லை. வேறு நான்கு பேர் உட்கார்ந்து யோசித்து கதையை எழுதியிருக்கிறார்கள். அதை இரண்டு பேர் ரூம் போட்டு திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால், எண்ணற்ற கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் விளம்பரங்களையும், சின்னத்திரை தொடர்களையும் இயக்கிய அனுபவம் உண்டு.

சரி, கதை? காணாமல் போன தந்தையை மகன் கண்டுபிடிப்பதுதான் ஒன்லைன். ஆனாலும், இதற்கான பேக் ட்ராப் செமத்தியானது. யெஸ், வில்லன் கோஷ்டி அப்பாவை மறைத்து வைத்திருப்பது பூவலகில் அல்ல. அவரே உருவாக்கிய கம்ப்யூட்டர் கேம் புரோக்ராமுக்குள்! எனவே மகன் தன் தந்தை உருவாக்கிய புரோக்கிராமுக்குள் நுழைந்து, தந்தையின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, வில்லனை அழித்து தன் அப்பாவை மீட்கிறான்.

முந்தைய படம் போலவே இதிலும் 'ட்ரான்' என்பது வில்லன் உருவாக்கிய கம்ப்யூட்டர் புரோக்ராம். ஆக, கம்ப்யூட்டர் புரோகிராமுக்கும் கம்ப்யூட்டர் புரோகிராமுக்கும் நடக்கும் சண்டைதான் முழுபடமும்.

இப்படத்தை டுபாக்கூர் திரையரங்கில் பார்த்தால் நவதுவாரங்களில் இருந்தும் புகை வெளியேறும். காரணம், படத்தின் களம் வெர்ச்சுவல் வேர்ல்ட். ஸோ, நல்ல ஒலி ஒளி அமைப்புள்ள திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் தங்களைத் தாங்களே அதிர்ஷ்டசாலிகள் என நினைத்துக் கொள்ளலாம்.

கே.என்.சிவராமன்.                                 

No comments: