Tuesday, November 30, 2010

என்ன செய்ய வேண்டும் என்று நம்மையே நாம் கேட்டாக வேண்டும்


முதலில், இரண்டாம் உலகப் போரின் பிறகு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு மேலே செல்லலாம். Judgement at Nuremberg - இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் (1961) இயக்கியவர் ஸ்டான்லி கிராமர்.

இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர், யுத்த முடிவில் இறந்து போகிறான். வழக்கம் போல எதேச்சாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகே நடந்த அநீதிகள் பற்றி கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனால், அந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? யாரைக் குற்றவாளி என்று விசாரணை செய்வது என்ற கேள்வி எழுகிறது. யூதர்களைப் படுகொலை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி ஹிட்லரின் அரசாட்சியில் முக்கிய நீதிபதிகளாக இருந்த நான்கு பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. ஜெர்மனியில் உள்ள நியூரம்பேர்க் நகரில் நடைபெற்ற விசாரணையும் அங்கு நடந்த வாதப் பிரதிவாதங்களுமே இத்திரைப்படம்.

நீதிபதிகள் விசாரிக்கப்படுகிறார்கள். தேசத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஹிட்லர். அவரது உத்தரவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் வேலை என்கிறவர்களிடம், லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லையா என்று கேட்கப்படுகிறது.

உண்மையில் தாங்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மை ஜெர்மானியர்களுக்கும் அவ்வாறான உட்படுகொலைகள் பற்றி குரூரமான வதைமுகாம்கள் இருந்தது பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் தேசபக்தித் திரையைத் தாண்டி அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருந்தது குற்றம்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஹிட்லர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை நாஸி கட்சியில் கட்டாயமாக இணைத்துக்கொண்ட காரணத்தால் மட்டுமே தாங்கள் அந்த கட்சி உறுப்பினர்கள் ஆனோம் என்பதை சொல்கிறார்கள்.

தங்களின் உத்தரவு என்ன பாதிப்பை உருவாக்குகிறது என்பதை அறியாமல் எப்படி உத்தரவிட்டீர்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் அது ஹிட்லரின் கட்டளை@ அதை மீறினால் தாங்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதை எல்லோருமே புரிந்துகொண்டிருந்ததாகச் சொல்லி நிறுத்திக் கொள்கிறார்கள்.

விசாரணையின் இறுதியில், ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை; தேசத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நடைபெற்ற மூர்க்கங்களுக்கு குற்றங்களுக்குப் பங்கு பலருக்கும் இருந்தது பற்றி சொல்லப்படுகிறது. ஹிட்லரைப் புகழ்ந்து கொண்டாடி அவரைப் போன்ற ஒருவர் இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தால் இங்கிலாந்து வளர்ச்சி பெற்ற நாடாகியிருக்கும் என்று பேசிய சர்ச்சில், ஹிட்லருக்குத் துணைநின்ற நாடுகள், ஆதரவு தந்த தொழில் அதிபர்கள், தேச விடுதலைக்கான களையெடுத்தல்கள் என்று நியாயப்படுத்திய அல்லது கண்டிக்காமல் விட்ட புத்திஜீவிகள் - பத்திரிகைகள், அவரது கட்சிச் செயற்பாட்டை விருப்பத்துடன் மேற்கொண்ட மக்கள் யாவருமே குற்றவாளிகள்தான் என்று குறிப்பிடப்படுகிறது.

அவர்கள் மனசாட்சியோடு நடக்கத் தவறியிருக்கிறார்கள். உயிர்ப் பயத்தில் அவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களைக் குற்றவாளி இல்லை என்று விடுவிக்க முடியாது. குற்றம் அவர்கள் அறிந்தே நடந்திருக்கிறது. ஆகவே குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜெர்மனிய நீதிபதிகள், படத்தின் இறுதியில் தண்டனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்று விருப்பப்படுகிறவர்கள் - அவர்கள் எந்தத் தரப்பினராயிருந்தாலும் - செய்ய வேண்டியது என்ன? நடைபெற்று முடிந்த தவறுகளிலெல்லாம் தாங்கள் நேரடியாகப் பங்குபெற்றிருக்காவிட்டாலும், அவற்றுக்காகப் பரஸ்பரம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முதலில் முக்கியம். மற்றவர் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக முதலில் அவரவர் தத்தம் தரப்பிலுள்ள தவறுகளை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள முன்வருதல் வேண்டும். அதுவே நல்லிணக்கத்திற்குத் திரும்பும் ஒரே வழி. இதில் பெரிய குற்றவாளிகள் சிறிய குற்றவாளிகள், முதலில் யார் வரவேண்டும், யாருக்குக் கூடுதல் பொறுப்பு என்று யோசிப்பது கூட, வழியை முடக்குவதுதான்.

அதேபோல, நாம் நேரிடையாகச் செய்யாத குற்றங்களுக்கு நாம் பொறுப்பில்லை என்று இருந்துவிட முடியாது. குற்றம் நடந்த போது கண்டிக்காமல் இருந்தது, அல்லது அவற்றை அறிந்து கொள்ளாமல் இருந்தது, அவையெல்லாம் நம் விடுதலைக்கும் சுதந்திரத்திற்குமாகச் செய்யப்படும் அவசியங்கள் என்று விபரிக்கப்படுவதை மறுத்துப் பேசாமலிருந்தது கூட எல்லாமே குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமைதான் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். கொலைகள், அழிவுகள் எல்லாவற்றையும் அற-அழிப்பு, நியாயமிழப்பு, மனித அவலம், சமூகச் சிதைவு என்ற நிலையில் எல்லாவற்றுக்கும் நம் தரப்பிலும் காரணங்களை ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துக்கொண்டு வருத்தத்தைப் பகிர வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் முன்கையெடுப்பதில் இழிவொன்றுமில்லை. மற்றவர்களையும் அதுபோல் நடக்கத் தூண்டும், வெட்கவுணர்வை வெளிக்கொணரும் முன்னுதாரணமாக அது அமையும்.

படைபல வன்முறை ஆற்றல்களினால் எமக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று முனைந்ததில், நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை என்பதைக் கறாராக ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவேனும் கேட்டுக் கொள்ள வேண்டும். அவசரமான தேவை இது. கடந்த முப்பது வருடங்களாக நாம் நடந்துகொண்ட அதேவிதத்தில், நம் விருப்பம் இருக்குமிடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட ஏதோ ஒரு வழியை யார் அழுத்தி உரத்துச் சொல்கிறார்களோ அவர்களை அப்படியே நம்பிப் பின்செல்ல வேண்டியதுதான் என்ற ‘கோவிந்தா’ மனநிலையிலிருந்து நாம் மீண்டாக வேண்டும். உலக யதார்த்தம், கள யதார்த்தம், நம் வலி, மாற்றான் வலி எதைப்பற்றியும் அலசி யோசிக்க சோம்பல்பட்டு அல்லது அச்சப்பட்டு, வெறுமனே குழுத்திரள் ஆவேசப் பொங்குதலின் கிறுகிறுப்பில் மிதந்து போய்க் கொண்டிருந்தால், நிதர்சனம் எப்படி வந்து முகத்தில் அறையும் என்பதை இப்போது யாரும் நமக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.

நடப்புநிலையை உணரச் சோம்பல்பட்டு, அண்ணாந்து பார்த்தபடி சாக்கடையில் இறங்கிச் செல்லும் கனவு மிதப்புக்குத் தீனிபோடும் வெற்றாவேசப் பேச்சுக்களிலேயே இனியும் நம்மைத் தொலைப்பதா? உள்ளபடி நிலைமைகளை நாம் ஒவ்வொருவரும் மனம்திறந்து அலச வேண்டும்@ கனவை விலக்கித் தெளிவுகொள்ள வேண்டும்@ யதார்த்தமற்ற ஆவேசங்களின் ஏமாற்றை விளங்க வேண்டும். கால்தேய நடந்து கொண்டிருக்கும் நிலைமையையும் பாதையையும் கவனிக்காமல் நினைப்பைப் பல்லக்கில் வைத்திருப்பது போல ‘வீரநினைவு’களிலேயே மூழ்கிக் கிடந்தால், நிலம் உள்ளிட்ட உரிமைகள் பலவற்றையும் மேலும் மேலும் இழந்துகொண்டிருப்பதை நாம் தடுக்கப் போவதில்லை. நம் வெற்றுமுழக்கங்கள், இன்னுமின்னும் இழப்பதற்கான வாய்ப்புகளையே ஏற்படுத்தித் தந்துகொண்டிருப்பதை நாம் உணரவில்லையா? யதார்த்தத்தைக் காண மறுக்கும் உசார்மடத்தனச் சமூகமாக நாம் தொடர்ந்தும் தேய்ந்து கொண்டிருப்பதை நிறுத்தப் போகிறோமா இல்லையா?


நாம் வாயிலும் வயிற்றிலுமடித்து முழங்கிக் கொண்டிருக்கிற நம் பிரச்சினைகளை வேறு யாரும் வந்து தீர்க்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று நம்மையேதான் நாம் கேட்டாக வேண்டும்.

அதற்கு, நம் பழைய நினைப்புகளிலிருந்து நாம் கூடிய விரைவுடன் மீண்டாக வேண்டும். நம்மிடம் எந்தத் திட்டமுமின்றி, எதிரி மீதான குற்றச்சாட்டுகளைப் புலம்புவதால் எங்கேனுமிருந்து மீட்பர்களைக் கொண்டுவந்து விடலாம் என்ற மாயை…. அதை இன்றும் மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்றும் அயோக்கியத்தனமும் ஆகும். முட்டாள்த்தனமான எதிர்ப்புப் பழியுணர்ச்சிப் பேச்சுக்களால் நம்மை மேலும் மேலும் தளைப்படுத்திக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்தியாக வேண்டும்.

புத்திசாலித்தனத்தை நிரூபிக்க வேண்டிய அவசரகாலப் பரீட்சை நம் சமூகத்திற்கு முன் உள்ளது. நமது பிரதேசம் முறைப்படி ராணுவ முற்றுகைக்குள் வருவதையும் நிலங்கள் பறிபோவதையும் பாமரத்தனமாகப் புலம்பி வெளியுலகச் சக்திகளை எதிர்பார்ப்பதில் எந்த விவேகமுமில்லை. வீரச் சவடால்களும் எதிர்மறையான ஆபத்துகளையே அதிகரித்துக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ளக் கூரறிவு வேண்டியதில்லை. நமக்குப் பாதகமான நகர்வுகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக நமது பேச்சையும் செயல்களையும் மாற்றிக் கொண்டாக வேண்டும். சட்டபூர்வமாக குறைந்தபட்ச அதிகாரத்தையேனும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள வழிகளை உருவாக்கிக்கொண்டு மேல்நகர வேண்டும். இதற்குத் தேவை வீரமும் ரோசமுமல்ல; விவேகம்!

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறான் உளறுவாயன்

No comments: