Saturday, November 27, 2010

நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!

இந்தச் சொல் நான்கு எழுத்துகளால் ஆனது. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். ஆம்! வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக, பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

பொருளை ஆங்கிலத்தில் CASH என்கின்றோம். இதுவும் நான்கு எழுத்துக்கள் கொண்டதுதான். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கின்றபோது சில நேரங்களில் உரிமை யோடு என்ன எவ்வளவு CASH வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றோம். தமிழில், எவ்வளவு காசு வைத்திருக்கின்றீர்கள் என்கிறோம்.

இந்த CASH -ஐப் பெறுவதற்கு KASH இருந்தால் போதும். இது என்ன? புதிதாக இருக்கின்றதே என்கிறீர்களா? ஆம். இந்த KASH என்ற நான்கு எழுத்துகளிலும் நல்ல வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கின்றது.

K & Knowledge - அறிவு
A & Attitude - மனப்பான்மை
S & Skill - திறமை
H & Habit - பழக்கம்

இவை வெறும் சொற்களல்ல, வெற்றிக்கான மந்திரங்கள். அறிவு, மனப்பான்மை, திறமை, பழக்கம் என்ற இந்த நான்கு சொற்களின் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். அந்த பொருள் தானாகவே உங்கள் கைகளுக்கும், பைகளுக்கும் வந்து சேரும். வாழ்க்கையும் வளமானதாகும்.

இனிய இளைஞனே!

வாழ்க்கை, நான்கு எழுத்துகள் கொண்டது என்றேன். எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் நான்குவிதமானது. அவை:

1. தனிப்பட்ட வாழ்க்கை, 2. குடும்ப வாழ்க்கை, 3. தொழில் வாழ்க்கை,

4. சமூக வாழ்க்கை அல்லது தொண்டு வாழ்க்கை.

இந்த நான்கு விதமான வாழ்க்கையை யார் முழுமையாக வாழ்கின்றார்களோ, அவர்கள்தான் முழுமை பெற்றவர்கள். முழுமையாக வாழ்ந்தவர்கள்.

பொதுவாக இந்த முதல் மூன்று வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கும். அது பொதுவானதும் கூட. ஆனால் நல்ல வாழ்க்கை நான்காவது வாழ்க்கைதான். அதுதான் தொண்டு செய்து வாழ்கின்ற தூய வாழ்க்கை. இந்த தொண்டு வாழ்க்கை தான், முன்னர் குறிப்பிட்ட மூன்று வாழ்க்கைகளுக்கும் அங்கீகாரத்தைக் கொடுப்பது. உங்களது முகத்தை, முகவரியை ஊருக்கும், உலகுக்கும் காட்டுவது.

'ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்கும் அளவுகோல், அதன் ஜனத்தொகையோ, நகரங்களின் விசாலமோ, செல்வத்தின் மிகுதியோ அல்ல. அங்கு பிறக்கும் மனிதர்களின் குணங்கள்தான்' என்பார் சிந்தனையாளர் எமர்சன்.

உங்களது குணத்தை வெளிப்படுத்துவது சேவைதான். பிறருக்காகச் செய்கின்ற சேவையில்தான் மகத்தான சக்தி வெளிப்படும். மனிதநேயத்தின் திறவுகோல், சேவையில்தான் இருக்கின்றது. உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை.   
ஒருநாள் சுவாமி விவேகானந்தர் தமது குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "குருவே, தொடர்ந்து தியானத்தில் அமர்ந்து கண்களை மூடிய வண்ணமே இருந்து கடவுளை நான் காண வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள்புரிய வேண்டும்'' என்று கேட்டார்.

அதற்கு அவர், "ஏன் கண்களை மூடிக் கொண்டு கடவுளைக் காண வேண்டும் என்று விரும்புகிறாய்? இந்த மண்ணில் இருக்கும் ஏழை எளிய ஜனங்களை கண் திறந்து பார். அதுதான் கடவுள் காட்சி'' என்று பதிலுரை கூறினார்.

அந்தப் பதில்தான் விவேகானந்தரின் அகக்கண்களைத் திறந்து, சேவையின் பக்கம் திசை திரும்பச் செய்தது.

'நடமாடும் கோவில்களாம் ஏழைகளுக்குக் கொடுப்பது, இறைவனுக்குக் கொடுப்பதாகும்' என்றார் திருமூலர்.

'அடுத்த வீட்டார் பசியோடு இருக்கும்போது தான் மட்டுமே உண்பவன் உண்மையான கடவுள் பற்று உடையவன் அல்லன்' என்றார் நபிபெருமான்.

'பிரார்த்தனை செய்யுங்கள், கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். சேவை செய்து பாருங்கள், கடவுளே உங்கள் அருகில் வருவார்' என்றார், சமூகப் பணியால் நோபல் பரிசு பெற்ற அன்னைதெரசா.

படித்தீர்களா? இவர்களின் சிந்தனைகள் எல்லாமே சேவைதான், சேவை செய்வதன் மூலமாக இறைவனை அடையலாம் என்பதுதான். சேவைக்கு அத்தகைய ஆற்றல் உண்டு. அதனால்தான் மகாகவி, `ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றான்.

அன்பான இளையோரே!

உங்களைச் சுற்றிப் பாருங்கள். இந்தச் சூழல்தான், இந்த உலகம்தான் உங்களை உருவாக்குகிறது. ஒட்ட வைக்கிறது. உயரத்தில் உட்கார வைக்கிறது. ஊதியம் பெற உதவும் கல்வியை விட உயிர்வாழ உதவும் கல்வி உயர்ந்தது அல்லவா? அந்த உயர்ந்த கல்விதான் நல்ல வாழ்க்கையைத் தரும். அதனால்தானே படிக்கின்ற போதே நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை போன்ற சமூகப் பணிகளிலும் உங்களை இணைத்துக் கொள்ள பாடத்திட்டமும் வகுக்கப்படுகிறது? காரணம் ஒரு நாட்டின் சொத்து மலைகள் அல்ல, மகாநதிகள் அல்ல, நாட்டுப்பற்று மிக்க நற்பண்புகளைக் கொண்ட இளைஞர்கள்தான். அத்தகைய இளைஞர்கள் பொது வாழ்க்கையில் நுழைகிறபோது இந்தத் தேசத்தின் புனிதம் காப்பாற்றப்படும். அந்தப் பொது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

'இளமையில் கல்' என்றார் அவ்வையார். ஏன்தெரியுமா? இளமையில் கற்பது எப்போதும் கல்வெட்டாய் அழியாமல் பதிந்திருக்கும் என்பதனால்தான். நினைவில் நிறுத்துங்கள். நான்காவது வாழ்க்கை, சமூகத்திற்கான சேவை வாழ்க்கை. அந்த வாழ்க்கை தூய் மையானதாக, நேர்மை யானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் போற்றுதலுக்குரிய நல்ல வாழ்க்கையாக இருக்கும்.

பேராசிரியர்
க. ராமச்சந்திரன்
 

1 comment:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி