Tuesday, November 23, 2010

ஆறுவது சினம்; சீறுவது அல்ல

பாதிப்புகளுக்குள்ளான சமூகம் என்ற வகையில், எங்களிடமிருந்து வெளிப்படும் பிரதான குணங்களிலொன்றாக கோபம் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், அந்தக் கோபத்தின் பின்னாலுள்ள நியாயங்களை வெளியுலகம் விளங்கிக் கொள்ளும்படியாக, கொச்சையற்ற விதத்தில் நாம் அதை வெளிப்படுத்தியிருக்கிறோமா என்று யோசித்தால், வெட்கப்படும்படியாக இருக்கிறது.

நம்முடைய நியாயம் என்பது, உள்நாட்டில் மற்றும் சர்வதேச அரங்கில், நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் நேர்மையான மற்றைய இன மக்களின் ஆதரவை பெறுவதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய கோபத்தில் உள்ள நியாயம், மற்றவர்களினது மனசாட்சியை சென்று உலுக்குவதாக இருக்க வேண்டும். மாறாக, அவர்களது ஆதரவுணர்வையே உலுக்கிவிடும் வன்முறை, வீராவேச கோமாளித்தனங்களாய் ஆகிவிடக் கூடாது.

“யார் வேண்டுமானாலும் கோபம் கொள்ளலாம். அது மிக எளிதானது. ஆனால், சரியான நபரிடம், சரியான நேரத்தில், சரியான காரணங்களுக்காக, சரியான விதத்தில் கோபம் கொள்வது என்பது எளிதானது அல்ல; அது எல்லோராலும் முடியக் கூடியதும் அல்ல” என்று அரிஸ்ரோற்றிலோ யாரோ சொல்லியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதி உணர்ந்தே பெரியோர் பலரும் ‘கோபம் தவிர்! கோபம் தவிர்!’ என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் ‘பழகு’ என்றுதான் சொல்கிறான். பழக்கமில்லாவிட்டால் ஏடாகூடமாய்ப் பாய்ந்துவிடும்; நம்மையும் சேர்த்தே குதறிவிடும் என்பதுதான். அதனால்தான் ‘சீறுவதல்ல, ஆறுவதே சினம்’ என்றிருக்கிறார்கள். ஆனாலும், சுந்தர ராமசாமியின் ஜேஜே சொல்வது போல, என்னதான் நாம் எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்றே ஆசைப்பட்டாலும், அன்றைக்கு முதலில் எதிர்ப்படும் நபரே நம் உணர்வுகளை நாசப்படுத்திக் கீறிக் கோபமூட்டிவிட்டுப் போய்விடுகிறார்.

அடுத்த வீட்டுக்காரனிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகள் வரை நமது கோபத்துக்குத் தீனி போடப் பலப்பல உண்டு. அந்த நெருப்பினால் நாமும் நம்மோடு பிறரும் வெந்து விடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிய வேண்டும். தனிப்பட்ட கோபமாக இருந்தாலும் சரி சமூகக் கோபமாக இருந்தாலும் சரி அதன் பாதிப்புகள் விளைவுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

இலக்கிய உதாரணங்களில் பார்த்தால் கூட, கோபம், அதற்கு ஆளாகியவர்களையும் அழித்து, கோபப்பட்டவர்களையும் அழித்தே அடங்கியிருக்கிறது. அப்படியொரு முதுசமாக நமக்குள் வந்திருக்கும் கோப-வன்முறை உணர்வுகளை, மனிதர்கள் இன்று அடைந்திருக்கும் நாகரிக வளர்ச்சியுடன் பொருத்தி ஆராய்ந்த பிறகே பொங்க வேண்டும். அதே பழைய ‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்’ வகையறாக்களுடன் வீர, ரோச வெறிகளைப் பொங்க விடுவது.... பத்தாயிரம் வருட நாகரிக வளர்ச்சிக்குப் பின்னான இன்றைய மனிதனுக்குரிய இயல்போ விவேகமோ அல்ல.

“போர்த் தொழில் விந்தைகள் காண்பாய், ஹே! பூதலமே” என்ற பார்த்தனின் முழக்கத்தோடு எழுந்த பாண்டவர்களின் கோபம் கௌரவர்களை மட்டும் அழித்து அடங்கிவிடவில்லை. பாண்டவர் தரப்பையும் மிச்சம் விடாமல் அழித்துவிட்டே ஓய்ந்தது என்பதே உண்மை. போர் முடிந்து கௌரவர் தரப்பில் மிஞ்சியது நாலு பேர்; பாண்டவர் தரப்பில் மிஞ்சியது ஏழு பேர். ஆக, வித்தியாசம் மூன்றே பேர்!

“பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையும்….” என்று பொங்கிய கண்ணகியின் கோபம் ஒரு நகரையே அழித்துவிட்டே ஓய்ந்தது.

“….உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை” என்று கோபத்தில் உலகை அழித்துவிடத்தான் துடிக்கிறது ராமனின் வீரமும்! “ஆராயாமல் மாயமானின் பின் சென்ற குற்றம் உங்களுடையது. குலத்துக்கே நாசம் உண்டாக்கியதில் பாதிப்பங்கு குற்றத்தை உங்களிடமே வைத்துக்கொண்டு சும்மா கோபவெறி கொள்ளுதல் தப்பு” என்று சடாயு எடுத்துரைப்பதாகக் கம்பன் பாடுகிறான்.

குலத்துக்கே நாசம் விளைவிக்கும் கோபத்தை யாரும் சரி என்று கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுதல் முழுக்க முழுக்க சுயநலத்தின் பாற்பட்டதே.

கோபமும் வீரமும் வெகுமக்களின் அழிவைக் கொண்டுவருவதாக அமையும்போது, அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோபமாக இருந்தால் கூடப் பாராட்டப்பட முடியாத ஒன்றே. மக்களைக் காக்கின்ற வகையில் அந்தக் கோபத்தை ஒத்திவைப்பதோ அல்லது வேறுவழியில் சாதித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதோதான் நெஞ்சில் சமூக அக்கறை இருப்பவர்களின் எண்ணமாக இருக்கும். இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில், இந்த நிலையை வந்தடைய முடியாதவர்கள் வெறும் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுவாகவே ரோசத்தில் தீய்ந்தழிவதைத் தடுக்க முடியாமற் போகும்.

கோபத்தில் நல்ல கோபம் கெட்ட கோபம் என்பதெல்லாம், அழிவுகளை ஏற்படுத்தாத விவேகமுடன் அதை நாம் கையாளுகிறோமா என்பதிலேயே தங்கியிருக்கிறது.

இந்த ‘நல்லது’ ‘கெட்டது’ என்பதுபற்றிய ஒரு நுண்மையான விவாதம், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ‘அக்னி’ நாவலில் இரண்டு பேரின் பேச்சின் நடுவே வருகிறது.

“நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று உரையாடலின் இடையே ஒருவர் கேட்கிறார். “சில லட்சியங்களை வகுத்துக் கொண்டு, அதற்கேற்ப வாழ முயல்வது, தம்மால் பிறருக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று மிகக் கவனமாக இருப்பது – இதுதான் நல்லவர்களுக்கு அடையாளம். சமூகத்தில் பதவியும் அந்தஸ்தும் பெற வேண்டுமென்ற விலங்கினப் போராட்டத்தில் வெற்றி பெறுகின்றவர்கள் கெட்டவர்கள்” என்று அதை வரையறைப்படுத்திச் சொல்ல முயல்கிறார் மற்றவர்.

முதலாமவர் திரும்பக் கேட்கிறார், “நீங்கள் வகுத்துக் கொள்ளும் லட்சியங்களினால் பிறர் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால்?”

“நான் எனக்கென்று வகுத்துக் கொள்ளும் லட்சியங்களினால் பிறர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்கிறார் மற்றவர்.

“உங்கள் லட்சியங்களையும் கொள்கைகளையும் பிறர் மீது சுமத்த முயலும்போது?” என்று விடாமல் கேட்கிறார் முதலாமவர்.

“நான் எது நல்லது என்று நினைக்கிறேனோ, அதைச் சொல்லுகிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் பிறருடைய உரிமை” என்கிறார் மற்றவர்.
இப்போது முதல்வரின் கேள்வி: “அந்த உரிமையைக் கொடுக்காதவர்களை நல்லவர்கள் என்று சொல்ல முடியுமா?”

நல்லது – கெட்டது என்பதையும் ஒருபடித்தானதாக வரையறுத்துவிட முடியாது என்றே தெரிகிறது. நபருக்கு நபர், இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் பின்னணிகளையும் விளைவுகளையும் வைத்தே நாம் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. வெறுமனே பாதிக்கப்பட்டவர்களின் கோபமும் பொங்குதலும் நல்லதே என்று தீர்மானித்துவிட முடியாது. நல்லவர்களின் கோபம், உயிரழிவுகளையோ சமூகப் பின்னடைவையோ ஏற்படுத்தாது, ஏற்படுத்தினால் அந்தக் கோபம் நல்லதல்ல என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கோபத்தை நல்ல விளைவுகள் தரும் திசையில் மடைமாற்றியோ குறைத்தோ, சமூகத்தை அழிவுக்குத் தூண்டிவிடாமல், ஆராய்ந்து வழிநடத்துவதே தலைமைகளினதும், புத்திஜீவிகளினதும், சமூக அக்கறை கொண்டவர்களினதும் முன்னே இருக்கும் சவால். கோபத்தை உணர்ச்சிகர ஆவேசமாகப் பற்றி எரிய வைத்து, பதவியும் அந்தஸ்தும் பெற்று சமூகத் தலையாடுகளாக வலம்வருகிறவர்கள் – அந்த ஆசைப் போட்டியில் இருக்கிறவர்கள் முதற்கண்ட வகைமைகளுக்குள் அடங்கார்.


2 comments:

Anonymous said...

நல்ல அறிவுரை. பின்பற்றுவதோ கடினமாக உள்ளது. சில வினாடிகளில் எதிர்த்தவனை எரித்துவிட நினைக்கிறது முட்டால் மனம். தொடர்ந்து எழுதுங்கள்.

நடராஜன் said...

k.natarajan7@gmail.com

சினம் பற்றி சொன்னதில் சுருக்கமாக சொல்வதென்றால் இது கட்டளை வாக்கியம் அல்ல . கோபம் ஆறக்கூடிய தன்மை உள்ளது என்பதே . சினம் கொள்ளாதே என்று சொல்லாதது சிந்திக்க தக்கது