Monday, November 22, 2010

தேசபக்தியும் மரணவிதைகளும்

‘கொலையும் ஒரு கலை’ என்று மந்திரிகுமாரி படத்தில் கருணாநிதி வசனம் எழுதினார். கடந்த முப்பது வருடங்களாக நமது மக்கள் கைதட்டி விசிலடித்து ரசித்து வந்தததைப் பார்க்கும்போது, அது மக்களபிமானம் பெற்ற கலைகளில் தலையாயது என்றே தோன்றுகிறது.

எதிர்த்தரப்புத் தலைகள் உருளுவதைப் பார்த்து வெறியும் ஆவேசமுமாகத் திருப்திப்பட்டுக் கொள்ளும் மனநிலை குகைமனிதர் காலத்தையதுதான் என்று ஒரேயடியாகச் சொல்ல முடியவில்லை. அறம், நீதி, மனிதப்பண்பு, நாகரிகம் என்று எவ்வளவோ வளர்ச்சி நிலைகளைக் கண்டு தாண்டி வந்த பின்னாலும், இன்றும்கூட மனிதர்களை மனிதர்களே கொல்லுவதற்குச் சொல்லிக்கொள்ளும் நியாயங்களை விட்டுவிட முடியவில்லை.

கொலைப் பழியை கொலை செய்கிறவர்களிடம் மட்டுமே சுமத்திவிட்டு மற்றவர்கள் தப்பிவிடவும் இயலாது. எத்தனை எத்தனையோ அற நீதிகள், அகிம்சா போதனைகளுக்கு மத்தியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது எல்லா மனிதர்களுமே கொலைக்கருவிகளைத் தமக்குள் எங்கோ ஒளித்து வைத்துக்கொண்டு நடமாடி வருவதாகத்தான் படுகிறது.

ஜோர்ஜ் லூகாச் 1919-ல் எழுதிய ‘நடைமுறைத் தந்திரமும் அறவியலும்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளதாவது: “சமத்துவத்துக்கான போராட்டத்தின் பக்கம் நிற்க முடிவு செய்திருக்கும் ஒவ்வொருவரும் போராட்டத்தில் மடிகின்ற ஒவ்வொரு மானுடஜீவியின் மரணத்திற்கும் தானே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் – அவர்கள் அனைவரையும் தானே கொன்றுவிட்டதாகக் கருதி. அறவியல் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், யாருமே இந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அதாவது, தான் ஒரு தனி மனிதன், எனவே உலகத்தின் தலைவிதி தன்னைச் சார்ந்திருப்பதில்லை என்னும் சாக்கைச் சொல்லி இந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது.”

எதிர்க்க வேண்டும் என்று தோன்றினாலும் எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனமும் குற்றவுணர்ச்சியைத் தரும் சோர்வும் ஒருபுறமிருக்க, தாமே கருதிக்கொள்ளும் நியாயத்துக்காக கொலைகளை எதிர்க்காதிருக்கும் மனிதர்களின் குற்றம் இன்னும் பெரிதாகவே இருக்க வேண்டும். தங்களிடமிருக்கும் நியாயத்தையும் தர்மத்தையும் கொண்டு மற்றவர்களின் அதர்மத்தை அழித்தல் என்பதைச் சொல்லியே எல்லாப் போர்களும் நடந்தேறுகின்றன. அதாவது, போரில் குதிக்கும் ஒவ்வொரு தரப்புமே தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடனேயே குதிக்கிறது. எதிர்த் தரப்பின் பார்வையை மறுதரப்பு உணர்வதில்லை. மற்றவர்களின் வலியை, துக்கத்தை, அழுகையை அறியவோ ஆராயவோ முன்வருவதில்லை. நமக்குள் அதைத் தேடிப் பார்க்க அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை. நாம் கருதிக்கொள்ளும் நியாயத்திற்கான பொங்குகை மட்டுமே போதுமாயிருக்கிறது.

யோசித்துப் பார்த்தால், தங்களிடமிருக்கும் நியாயமும் தர்மமுமே மற்றவர்களின் அதர்மத்தை அழித்துவிடப் போதும் என்று நம்புபவர்களே மனிதகுலத்திற்குப் பெரிதும் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது. “தேசபக்தி முழக்கங்களோடு மரண விதைகளைத் தூவ வந்திறங்கியிருக்கிறார்கள் இன்றைய புதிய மனிதர்கள்” என்றெழுதினார் கமலாதாஸ். உண்மைதானே! தேசத்துக்காக மரணிப்பது பெருமைக்குரியது@ மக்கள் அவனைக் கொண்டாடுவார்கள் என்ற ஆசை புகுத்தப்பட்ட ஒருவனுக்கு மரணம் விருப்பத்துக்குரியதாகி விடுகிறது. சாவது விருப்பத்துக்குரியது என்றாகிவிட்டால், கொலைகள் செய்வதும் எளிதாகி விடுகிறது.

நம் தரப்பை ஏற்காதவர்களைக் கொன்று, நாம் வாழ்வது என்கிற ஏற்பாடு அல்லது நமது தர்மத்துக்குப் புறம்பாக உள்ளவர்களை அழித்து நாம் ஜெயித்தல் என்பதுதான் இன்றைக்கும் நம்மிடமுள்ள ‘வாழ்தல்’ அறமா? மொழி, இனம், தேசியம் போன்ற இன்னோரன்னவை அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அழியலாம் என்பது சரிதானா?

வாழ்வு, சுதந்திரம், இன்பம் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அமெரிக்கர்களுக்குத் தேவைப்பட்டவை பழங்குடிகளாயிருந்த செவ்விந்தியர்களின் 75 மில்லியன் மண்டையோடுகளும், ஆபிரிக்க மக்களின் 15 மில்லியன் சங்கிலி பூட்டிய உடல்களும் என்பதை நாமறிவோம். இதுவே இன்னும் விரிவடைந்து உலக அமைதிக்கு உலக சுபிட்சத்திற்கு என மேலும் பல மில்லியன் உயிர்களைக் காவு கொள்ளும் தாகமாகத் தொடர்கிறது.
மொழிக்காக, குலத்துக்காக, மதத்துக்காக, தேசியத்துக்காக என்று வரலாற்றில் அனேகம் போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. மனித இனம் அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழும் வழியை அவைகளால் தந்துவிட முடியவில்லை. போரை வெல்லும் மாவீரம் என்பது அதை உருவாக விடாமல் தடுப்பதிலேயே உள்ளது. அதற்குக் காரணங்களை ஏற்படுத்தாத கரிசனையிலேயே உள்ளது. மரணத்தை வலுவிழக்கச் செய்யும் வாழ்வாதாரங்களையே நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஹிட்லரின் வதைமுகாமில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய விக்டர் பிராங்கல் என்ற உளவியலாளர் பின்னர் எழுதினார்: “மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியுமென்பதை ஆஸ்விச் வதைமுகாம் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இனி என்ன நடக்கக் காத்திருக்கிறது என்பதை ஹிரோஷிமா மூலம் நாம் அறிந்திருக்கிறோம். எனவே, நாம் எச்சரிக்கையோடு இருப்போம்.”

இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தில் புகழ்பெற்ற வேட்டைக்காரராக விளங்கிய ஜிம் கார்பெட், ‘எனது இந்தியா’ என்ற அவரது பிரபலமான நூலில் குறிப்பிடும் ஒரு சம்பவம் இது:

“இரண்டு வயதுப் புத்தாலியும், மூன்று வயதுப் புன்வாவும் காணாமல் போனது வெள்ளிக்கிழமை மத்தியானத்தில். மாடு மேய்ப்பவன் அவர்களைக் கண்டெடுத்தது திங்கட்கிழமை சாயங்காலம் சுமார் ஐந்து மணிக்கு – கிட்டத்தட்ட எழுபத்தேழு மணி நேரம் கழித்து. எனக்குத் தெரிந்த வரை அந்தக் காட்டில் இருந்த காட்டு விலங்குகள் பற்றிய விபரத்தை முன்னரே கொடுத்திருக்கிறேன். அந்தக் காட்டில்தான் எழுபத்தேழு மணி நேரத்தைக் குழந்தைகள் கழித்திருக்கிறார்கள். மேற்சொன்ன விலங்குகளும் பறவைகளும் இந்தக் குழந்தைகளைப் பார்க்கவோ, கேட்கவோ அல்லது மோப்பம் பிடிக்கவோ இல்லை என்று அனுமானிப்பதற்கு எந்த ஒரு நியாயமுமில்லை. இருந்தாலும், மாடு மேய்ப்பவன் புத்தாலியையும் புன்வாவையும் அவர்களது பெற்றோரின் கரங்களில் ஒப்படைத்தபோது, குழந்தைகளின் மேல் பற்தடமோ, நகக்குறியோ ஒன்றுகூட இல்லை.

ஒரு மாதமே நிரம்பிய ஆட்டுக்குட்டியை நோக்கிப் பெண்புலியொன்று பதுங்கிப் பதுங்கி வந்ததை ஒருமுறை பார்த்தேன். திறந்த வெளியாய் இருந்தது அந்த இடம். புலி சற்றுத் தொலைவில் வரும்போதே ஆட்டுக்குட்டி அதைப் பார்த்துவிட்டது. கத்திக் குழறத் தொடங்கியது. உடனே, பதுங்குவதை விட்டு நேராக ஆட்டுக்குட்டியிடம் சென்றது புலி. சில யார் தூரத்துக்குள் புலி வந்த மாத்திரத்தில், ஆட்டுக்குட்டி அதை எதிர்கொண்டு சென்றது. அருகில் சென்றதும் புலியை முகர்ந்து பார்ப்பதற்காகத் தன் கழுத்தை நீட்டித் தலையை உயர்த்தியது. மூச்சுத் திணற வைத்த சில நொடிகளுக்கு வனத்தின் அரசியும், பிறந்து ஒரு மாதமே ஆன ஆட்டுக்குட்டியும் முகத்தோடு முகம் உரச நின்றனர். பிறகு அரசி திரும்பி விட்டாள். வந்த வழியே திரும்பிச் சென்றாள்….

படைத்தவன் காட்டுயிர்களுக்காக உருவாக்கிய அதே சட்டங்களை மனிதர்களுக்காகவும் உருவாக்கியிருந்தால் யுத்தங்களே இருந்திருக்காது. காரணம், எளியவர்கள் மீது வலியவர்களுக்குக் கரிசனம் இருந்திருக்கும்; கானகத்தினுள் சட்டமாக நிறுவப்பட்டிருக்கும் அதே கரிசனம்.”

No comments: