Friday, November 19, 2010

தோழர்.பத்மநாபா காட்டிய வழியில்...

"நாம் மக்களுக்காகப் போராடுவது
எம்மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர;
எமக்கு வழங்கப்பட்ட அதிகாரமல்ல"

- தோழர் க.பத்மநாபா

பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி.

மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோலோடும் இணைந்து நின்று செயலாற்றினார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் பிரதானமானவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனர். அதன் முதல் பொதுச் செயலாளர். 1951 நவம்பர் 19ல் பிறந்த இவர் தனது 39 வருடகால வாழ்நாளில் 20 வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அப்போராட்டத்தின் வழி நின்று இலங்கையின் ஒற்றுமைக்கும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், தொழிலாளர்கள், விவசாயிகளின் பூரண விடுதலைக்காகவும் அயராது இறுதிவரைப் போராடியவர்.

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தபோது, ஆயுதத்தின் மீது காதல் கொள்ளாமல், ஒரு தற்காப்பு கருவியாகவே பயன்படுத்தவேண்டும் என்று தனது இயக்கத்தினருக்கு வழி காட்டினார்.

தமிழ் போராளி இயக்கங்களிடையே ஒற்றுமையின்மை தலைதூக்கியபோதெல்லாம், அதை வேரூன்றவிடாமல் ஒற்றுமைக்காக கடுமையாகப் போராடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், பிளாட் இயக்கத் தலைவர் பாலகுமார் மற்றும் மிதவாத இயக்கத்தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்றோரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் சளைப்பில்லாமல் ஈடுப்பட்டார்.   

ஆனால் பாசிச குணம் கொண்டு, தான் மட்டுமே தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என ஆயுத பலத்தின் வன்மையால், சகோதரப்படுகொலைகளை நிகழ்த்தி, மேலே சொன்ன தலைவர்களை கொன்றொழித்தது பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம். 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.

அரசியல், ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்று, ஆயுதத்தின் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்ற பாசிச கோட்பாட்டில் மூழ்கி திளைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பலி கொடுத்து தானும் பலியானதுதான் பிரபாகரனின் சாதனை. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழி நடத்த இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கூட உருவாகத் தவறிய ஏகாதிபத்தியவாதியாக திகழ்ந்தவர் பிரபாகரன்.

இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமைப் போராட்டத்தை எந்த திசை வழியில், தலைமையின் கீழ் நோக்கி நின்று கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கை இன்னும் அழிந்திவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் தங்களது அரசியல் பணிகளை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், சோதனைகளுக்கும் இடையில் தோழர் பத்மநாபா காட்டிய வழியில், அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம். அந்த வழியில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும், ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணிக்க களம் கண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் தோழர்களுக்கு தோழர் க.பத்மநாபாவின் பிறந்த நாளில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.    

"நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை;
மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்"
- தோழர் க.பத்மநாபா
நன்றி ஜீவா முழக்கம்  

        

No comments: