Saturday, November 13, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

தப்பிக்க வழியேயில்லை. துளித்துளியாக இறந்துக் கொண்டிருக்கிறோம் என்பது அரான் ரால்ஸ்டனுக்கு நன்றாகவே புரிந்தது. வலது கையை அசைக்க முடியவில்லை. கனமான பாறையில் விரல்கள் சிக்கியிருக்கின்றன. சுதந்திரமாக இருப்பது இடது கை மட்டும்தான்.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மயக்கம். சாவு நெருங்கும் மயக்கம். இன்னும் எத்தனை நிமிடங்களில் இறக்கப் போகிறோம்? தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் வந்தது எவ்வளவு பெரிய தவறு என அந்த நேரத்தில் அரான் ரால்ஸ்டனுக்கு புரிந்தது. கையிலும் செல்ஃபோன் இல்லை. இருந்தாலாவது இப்படியொரு ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்ற தகவலை வெளியுலகத்துக்கு சொல்லலாம். இப்போது என்ன செய்வது?

சுற்றிலும் பார்த்தார். மலையின் பிளவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே புரிந்தது. கீழே பள்ளம். அது எத்தனை அடி ஆழத்தில் இருக்கும்? உத்தேசமாகக் கூட கணக்குப் போட முடியவில்லை. மேலே கிட்டத்தட்ட 70 அடி உயரத்தில் மலை உச்சி தெரிந்தது. அதை அடைய முடியுமா?

நோ சான்ஸ். சிக்கியிருப்பது பள்ளத்தின் நடுவில். ஒராள் பக்கவாட்டில் மட்டுமே நிற்கக் கூடிய பிளவு அது. மேலே ஏற இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். வலது கை பாறையில் சிக்கியிருக்கிறது. இடது கையால் பாறையை நகர்ந்த முடியவில்லை. காரணம், பிளவில் பாறை வலுவாக ஊன்றி நிற்கிறது. இனி ஒரு இன்ச் கூட அந்தப் பாறை நகராது.

அடி வயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. துக்கம் தொண்டையை அடைத்தது. சுதந்திரமாக இருக்கும் இடது கையால் அருகிலிருந்த பாறையில் ஆணியைக் கொண்டு தனது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை செதுக்கினார். இறந்த தேதி என்று எதை குறிப்பிடுவது? இன்றா... நாளையா? இரண்டு தேதிகளும் இருக்கட்டும் என்று எழுதினர். வீடியோ கேமராவை ஆண் செய்து தன் காதலிக்கும் நண்பர்களுக்கும் செய்திகளை சொன்னார்.

இனி இறப்பை வரவேற்க வேண்டியதுதான் என்ற தருணத்தில்தான் அரான் ரால்ஸ்டன், அந்த முடிவுக்கு வந்தார். எப்படியும் சாகப் போகிறோம். அதற்கு முன், முடிந்த வரை தப்பிக்க முயற்சிக்கலாமே?

பரபரவென காரியத்தில் இறங்கினார். குடுவையில் இருந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக, ரேஷன் முறையில் குடித்தார். குடிநீர் தீர்ந்ததும் தனது சிறுநீரையே பருகினார். டூல்ஸ்கிட்டில் இருந்த சாதனங்களைக் கொண்டு, பாறையில் சிக்கிய வலது கை விரல்களை, இடது கையினால் வெட்டினர். ஒற்றைக் கையால் 70 அடி தத்தித் தத்தி ஏறினார். மலை உச்சியை அடைந்தார். உயிர் பிழைத்தார்.

இந்தப் போராட்டம் நடந்து முடிய 127 மணிநேரங்களாயின. கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கும் மேல் சாவுடன் போராடி ஜெயித்த அரான் ரால்ஸ்டன், கற்பனைப் பாத்திரமல்ல. ரத்தமும் சதையும் நிரம்பிய நிஜ மனிதர். 2003ம் ஆண்டு சாவை நேருக்கு நேர் சந்தித்து இவரது அனுபவங்கள்தான் '127 ஹவர்ஸ்' ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இயக்குனரான டேனி பாயல்தான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இசை? வேறு யார், 'நம்ம' இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்தான்.

வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர், பார்க்கலாமா?

கே.என்.சிவராமன்             
           

No comments: