Thursday, November 18, 2010

ஆயுதங்களை மனதிலிருந்தும் களைவோம்


ற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவில் பல தரப்புகளிலிருந்தும் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டு வருவதும், அவை ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் பகிரங்கப்படுத்தப்பட்டு வருவதும் - நமது சூழலின் நெகிழ்வுக்கு மிக முக்கிய பங்களித்து வருவதை உணர முடிகிறது.

வன்னியிலும் கிழக்கிலும் அரச தரப்பால் பாதிப்புக்குள்ளான மக்கள் பல பதிவுகளைச் செய்திருக்கின்றனர். அப்பாவி மக்களுக்கு நடைபெற்ற பல்வேறு அநீதங்களுக்குமான எடுத்துக்காட்டுகளாக ஒரு சிலரேனும் ஆணைக்குழு முன் சாட்சியங்களாகியிருப்பது பாராட்டுக்குரியது.

பதிவு செய்யப்பட்டது மட்டுமல்ல, ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அவை பகிரங்கமாக விடப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. இது உள்ளுக்குள் குமைந்து இறுகும் புழுக்கத்தைக் குறைத்துக் கொள்வதுடன் திறந்த உரையாடல்களை நோக்கி நம் சமூகங்கள் நகர்வதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்தவரை, பெரும்பான்மைச் சமூகத்தின் மீதும் அரசின் மீதும் சுமத்துவதற்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் நம் தரப்பில் விட்ட தவறுகள் பற்றிய சுயவிமர்சனம் எதுவுமில்லாமல், ‘இணக்கமான சூழலே எங்களது எதிர்பார்ப்பும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பது எப்படி மாறுதலாகும்? எங்களுக்கே துக்கம் அதிகம் இழப்புகள் அதிகம் என்பதால் இதற்கெல்லாம் எங்கள் தரப்பிலான தவறுகள் எதுவும் காரணமில்லை என்றாகி விடுமா?

பிறரை மட்டும் குற்றம் சாட்டியபடி அவர்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் மடக்கிப் பணியச் செய்து, இணக்கத்துக்கு நகரலாம் என்ற இறுமாப்பில் தெரிவது விவேகமா, பாமரத்தனமா?

“மனதின் துக்கத்தை மறைப்பதற்காக அருகில் இருப்பவர்களிடம் என்னைக் கேலி செய்து பேசத் துவங்கி தான் எழுத்தாளன் ஆனேன்” என்றார் மலையாள இலக்கியத்தின் மேதையான வைக்கம் முகம்மது பஷீர். சுயவிமர்சனம் என்பது இல்லாமல் எப்படி நாம் மற்றவர்களை வெல்ல முடியும்?

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்களில், தமிழ்த்தரப்பு அரசியல்கட்சிப் பிரமுகர்களுக்கப்பால், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் மட்டுமே, போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்த்தரப்பாலும் நிகழ்ந்த அநீதங்கள் பற்றி வாய்திறந்திருக்கிறார். புலிகள் மக்களை அச்சுறுத்திக் கேடயமாக்கி அழிவுக்குக் காரணமாயிருந்தது பற்றியும், தப்பியோட முயன்ற பலரை நேரடியாக அவர்கள் கொன்றது பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.

நம் தரப்புத் தவறுகள் இறுதிக்கட்டத்தில் மட்டும் நிகழ்ந்தவை அல்ல. அதற்கு முன்பிருந்தே சொந்த மக்களைப் பயமுறுத்தி ஆயுதப் பிடிக்குள் வைத்திருந்தமையும், மாற்றுக் கருத்தாளர்களெல்லாம் மூர்க்கமாகக் கொன்றழிக்கப்பட்டமையும், முஸ்லிம்கள் துரத்தப்பட்டமையும், வணக்கத்தலங்களுக்குள் படுகொலைகள் புரிந்தமையும், பிற மக்களது உணர்வுகளைப் புண்படுத்தியமையும், அப்பாவிச் சிங்கள மக்களையும் வெட்டி – சுட்டு – குண்டுவைத்துக் கொலைகள் செய்தமையும் இன்னுமின்னும் நம் தரப்பு அறிவு வளங்களெல்லாம் விடுதலைக்கான இனச்சுத்திகரிப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டமை எல்லாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு நிகழ்ந்து வந்தவையே.

இதுபற்றியெல்லாம் மனந்திறந்து நம் கருத்துக்களைப் பதிவு செய்யாமல் நாம் எப்படி இணக்க சூழலை இங்கு உருவாக்க முடியும்? எப்படி மற்ற சமூகங்களின் நம்பிக்கையை பெற முடியும்?

நாம் விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கு இன்னும் தடையாக இருப்பது எது? நாம் உணர்ந்து கொண்டதை, இன்று அச்சம் நீங்கி நம்மிடையே மெல்லப் பேசிக்கொள்வதை பொதுவெளியில் சொன்னால், அது எதிர்த்தரப்பிற்கு நம்மைக் காட்டிக்கொடுத்ததாகிவிடும் என்ற பாமரத்தனமா?

மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய எந்தத் தப்புமே எங்கள் தரப்பில் செய்யப்பட்டிருக்கவில்லை என்று நாம் சொல்லிக்கொள்ள ஏலாதென்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் பெரிதாய் தவறுகள் இழைத்தது எதிர்த் தரப்பே என்கிற இன்னொரு உண்மைக்குள் இந்த உண்மையைக் கரைத்து மறைக்கிறோம். இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் மிக அதிகளவில் உள்ளானவர்கள் நாங்களே என்பதால் மற்றவர்களே குறிப்பாக சிங்கள சமூகமும் அரசுமே மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டியவர்கள்@ நாமல்ல என்ற எண்ணமே நமக்கிருக்கிறது.

இந்த எண்ணப்பாட்டைக் கொண்டிருந்துதான் இஸ்ரேலிய சமூகம் மற்றொரு அடக்குமுறைச் சமூகமாக மாறியிருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மற்றவர்களை அடக்குவதற்கும் அடிமைப்படுத்துவதற்குமான உரிமையோ சுதந்திரமோ அல்ல நாம் கோருவது. மற்றவர்களோடிணங்கி சமமாக வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமுமே நாம் வேண்டுவது என்பதில் தெளிவு இருக்குமானால், நாம் இழைத்த தவறுகளையும் சொல்லி சுயவிமர்சனமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்ள நமக்கு எந்தத் தடையுமிருக்காது. எதிர்த் தரப்பையும் நிராயுதபாணிகளாக்கும் உத்தி அல்லது இராணுவ அதிகாரத்திலிருந்து சிவில் அதிகாரத்துக்கு நாம் மாறும் வழி இதுவாகத்தான் இருக்க முடியும்.

“எதிர்த் தரப்பினர் பிறவியிலேயே காட்டுமிராண்டிகள்@ எங்களது இனமேன்மைக்குச் சற்றும் அருகில் வராத ரத்தக்காட்டேரிகள்” என்று தமிழக, வெளியுலக தமிழாவேசர்களின் புளிச்சல் பேச்சுகளைக் கேட்டு நாமும் மிகையுணர்ச்சியில் பொங்கிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, நம் வாழ்வைத் தொலைத்துவிட்டு மற்றவர்களின் ரோசத்திற்கு ஆடுகின்ற முட்டாள்களாகவே நாம் வதங்கிக் கொண்டிருப்போம்.

நமது தவறுகளை மட்டுமே நாம் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், சரணாகதியாகவும் இது அர்த்தப்படாது. பகைமுரணை நிறுத்திக் கொள்வதன் மூலம், நமக்குப் பாதகமான நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்க – திசைமாற்ற முடியும். நிதானமாக யோசித்தால் நமது உடனடிப் பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு நாமே திட்டங்களை மேற்கொள்ள என்ன வழி என்று காணமுடியும். அதை நோக்கி நகர வேண்டும்.

அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்ற முனைகிறது@ குடாநாட்டிலிருந்து கற்கள் சுரண்டப்படுகின்றன. தென்பகுதியிலிருந்து வருவோர் குப்பை போடுகிறார்கள், நகரை அசுத்தப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் வெறுமனே பதற்றப்படுவதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவுக்கு, அவற்றை நிறுத்தும் யதார்த்த வழிமுறைகள் என்னவென்று நாம் திட்டமிடுவதோ விவாதிப்பதோ இல்லை. குடாநாட்டுக்குள்ளேயே செறிந்து கிடக்கும் நம் குடிப்பரம்பல் முறைமை, நிலத்தடி நீரை இறைத்திறைத்து வரள்பூமியாக்கிக் கொண்டிருத்தல், பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்கள் சூழல் மாசு பற்றியெல்லாம் காண்பிக்கப்படும் அலட்சியம், குடாநாட்டுக்கு வெளியே பரந்து வெறிதே கிடக்கும் நிலப்பகுதிகளுக்கு மக்கள் விரும்பிச் செல்லும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் திட்டமிடுதலின்மை அக்கறையின்மை என்று பல்வேறு குறைபாடுகளை வைத்துக்கொண்டு நிலம் பற்றிக் கூக்குரலிடுவதை மட்டும் பெரிதாகச் செய்கிறோம்.

70களில் குமாரசூரியர் அரசுடன் இணைந்து, படித்த தமிழ் வாலிபர்களுக்கு கிளிநொச்சி வன்னிப் பகுதிகளில் காணிகளை வழங்கியது போல ஊக்குவிப்பை இன்று செய்ய என்ன வழிகள் என்பதை யோசிக்க வேண்டிய தருணமிது. நமது இணக்கமான அணுகுமுறையும் குறைந்தபட்ச சட்டரீதியான உரிமைகளையேனும் பெற்றுக்கொள்வதில் காட்டும் விவேகமும் நம் நிலத்தையும் வாழ்வையும் சீர்செய்து கொள்வதில் உதவக் கூடுமே தவிர, வெற்றுப் புறணிகளும் வீராவேசப் பகைச் சளாப்பல்களும் எந்த விடிவையும் கொண்டுவரா. மேலும் மேலும் இழப்பதையே தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும்.

இதற்குமேலும், வீண்பகையால் அனைத்தையும் இழந்தோம் என்று ஆகிவிடக் கூடாது.

No comments: