Wednesday, November 3, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளருமான ஸ்டீஃபன் ஹாகிங்ஸூக்கு ராயல்டி கொடுத்தார்களா அல்லது கதை என்று அவர் பெயரையும் குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

ஆனால், 'ஸ்கைலைன்' ஹாலிவுட் படம் உருவாக அவர்தான் காரணம். 'வேற்றுகிரக உயிரினங்களுடன் பூமியில் வசிக்கும் மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பது ஆபத்தில் முடியும்...' என்ற பொருளில் அவர் நிகழ்த்திய உரையின் சாரம்சத்தைதான் புருவங்கள் விரிய விரிய மிகப் பெரிய விஷூவல் ட்ரீட்டாக படைத்திருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் நண்பர்கள், பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக கழித்துவிட்டு, தனித்தனி அறையில் உறங்கச் செல்கிறார்கள்.

ஆனால், நடு இரவில் யாரோ அவர்களை தட்டி எழுப்பிகிரார்கள். கண் திறந்து பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். அவர்களை எழுப்பியது மனிதர்களோ அல்லது உயிரினங்களோ அல்ல. ஒளி. ஆமாம், அறைக்குள் ஊடுருவிய ஒளி அவர்களை தொட்டு எழுப்புகிறது.

அதியசத்துடன் அந்த ஒளியை பார்த்தவர்கள், அதன் அருகில் செல்கிறார்கள். முழு உடலிலும் அந்த ஒளி விழுந்ததும் கரைந்து போகிறார்கள். விட்டில் பூச்சி மின்சார பல்பின் ஒளியால் ஈர்க்கப்பட்டு மரணமடையுமே... அதேபோல் மனிதர்களும் இந்த அதிசய ஒளியால் ஈர்க்கப்பட்டு காற்றாக மாறுகிறார்கள்.

அடுத்தடுத்த நண்பர்கள் இப்படி கரைவதைப் பார்த்து பயந்துபோன சிலர், அறையைவிட்டு வெளியே வருகிறார்கள். பார்த்தால்...

நகரம் முழுக்க ஆங்காங்கே கம்பியைப் போல் வானத்துக்கும் பூமிக்குமாக ஒளிக்கதிர்கள். அந்த ஒளி ஊடுருவிய இடங்களில் எல்லாம் மனிதர்கள் கரைகிறார்கள், மறைகிறார்கள்.
இப்படி ஒளியால் உறிஞ்சப்பட்ட மனிதர்கள் அனைவரும் அடைக்கலமாவது ஒரு விண்கலத்தில். அந்தக் களத்தில் இருந்துதான் பூமியை நோக்கி ஒளி பாய்கிறது. வேற்றுகிரக வாசிகளுக்கு சொந்தமான அந்த விண்கலம், பூமியை ஆக்ரமிக்க, மனிதர்களை உறிஞ்ச வந்திருக்கிறது.

இந்த ஆபத்திலிருந்து மனிதர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் முழுபடமும்.

இப்படத்தை இயக்கி தயாரித்திருப்பவர்கள் க்ரக் ஸ்ட்ராஸ், கோலின் ஸ்ட்ராஸ் சகோதரர்கள். சுருக்கமாக ஸ்ட்ராஸ் சகோதரர்கள். பொதுவாக பொம்மைகளை வைத்து சிறுவர்கள் விளையாடுவார்கள் அல்லது தட்டு முட்டு சாமான்களை வைத்து பொம்மைகளை சுயமாக தயாரித்து விளையாடுவார்கள்.

ஆனால், இந்த ஸ்ட்ராஸ் சகோதரர்கள் கம்ப்யூட்டரில் தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை வடிவமைத்து, மோதவிட்டு விளையாடுவார்கள். இப்படி நாளொரு கிராபிக்ஸும் பொழுதொரு சிஜியுமாக வளர்ந்தவர்கள், 'தி எக்ஸ் ஃபைல்ஸ்' திரைப்படம் மூலம் திரைப்பட விஷூவல் எபக்ட்ஸ் டீமில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தார்கள்.

தொடர்ந்து, 'வோல்கனோ', 'தி நட்டி ஃப்ரொபசர்', 'டைட்டானிக்' திரைப்படங்களில் பணிபுரிந்துவிட்டு மியூசிக் ஆல்பம் ப்ளஸ் விளம்பரத்துறை பக்கம் ஒதுங்கினார்கள். அங்கு இவர்களது விஷூவல் எபக்ட்ஸுக்கு பயங்கர வரவேற்பு. பிரிட்னி ஸ்பியர்சில் ஆரம்பித்து ஆரோ ஸ்மித் வரை பலரது ஆல்பங்களுக்கு இவர்கள் செய்த சிஜி, பல விருதுகளை பெற்றுத் தந்தது. 'நைக்', 'பெப்சி', 'கோக்' விளம்பரங்களும், 'யூனிவர்சல் ஸ்டூடியோ லோகோவும்' இவர்களது விஷூவல் எபக்ட்ஸால் ஒளிர்ந்தன.


நிரம்பி வழிந்த வங்கி கணக்கும், வீடு முழுக்க ஆக்ரமித்த விருதுகளும் 'ஹைட்ரால்ஸ்' விஷூவல் எபக்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பிக்க வைத்தது. சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சிஜி ஒர்க் உள்ள படங்களை தயாரிக்க நினைத்த ஹாலிவுட் நிறுவனங்கள் அனைத்தும் பிள்ளையார்சுழிக்கு அடுத்தபடியாக இவர்களது நிறுவனத்தையே ஒப்பந்தம் செய்தன. '300', 'எக்ஸ்மென்', 'தி லாஸ்ட் சான்ட்', 'பென்டாஸ்டிக் ஃபோர்', 'டெர்மினேட்டார் 3', 'ரைஸ் ஆஃப் தி மிஷின்', 'தி டே ஆ ஃப்டர் டுமாரோ' ஆகிய படங்களின் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் இவர்களது கை வண்ணம்தான்.

பெயர் கிடைத்தது. புகழ் தேடி வந்தது. கல்லா நிரம்பியது. அடுத்து டைரக்ஷன். பக்கவாக திட்டமிட்டு 'ஏலியன்ஸ் வெர்சஸ் ப்ரேடேட்டர்; ரேக்யூம்' திரைப்படத்தை இயக்கினார்கள். படத்தை பார்த்த விமர்சகர்கள் நார் நாராக கிழித்தார்கள். ஆனால், ரசிகர்கள் கொண்டாடினார்கள். பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அந்த அனுபவத்தை வைத்து இவர்கள் தயாரித்து இயக்கி இருக்கும் படம்தான் 'ஸ்கைலைன்'.

எரிக் பால்ஃபோர், ஸ்காட்டி தாம்சன், டொனால்ட் ஃபெய்சன் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வேற்றுகிரக விண்கலத்தால் உறிஞ்சப்படுகின்றார்களா என்று உலகெங்கும் 'ஸ்கைலைன்' இந்த மாதம் ரிலீசானதும் தெரிந்துவிடும்.

கே.என்.சிவராமன்                                                    

No comments: