Monday, November 8, 2010

'நோபல்' நாயகர்கள் 2010

உலகின் உயரிய கவுரவம், 'நோபல் பரிசு'. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு வரலாறு உங்களுக்குத் தெரியும்தானே? இந்தப் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், சுவீடன் நாட்டுக்காரர். 1833-ம் ஆண்டு பிறந்த இவர், பொறியியல், வேதியியல் துறைகளில் மிகுந்த திறமை உடையவராகத் திகழ்ந்தார்.

'டைனமைட்' வெடிபொருளைக் கண்டுபிடித்த இவர், பெரிய ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலையையும் நடத்தினார். தனது கண்டுபிடிப்பு, மனித அழிவுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மனம் வருந்தி, தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதியன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் தலா ரூ. 6 கோடியே 57 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிப் பார்க்கலாமா...

மருத்துவம்

ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் (85)- இங்கிலாந்து


1925-ல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார், ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் பணியாற்றிய இவர், போர் முடிந்தபின்னர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1955-ல் பி.எச்டி. படிப்பை முடித்தார்.

அதன்பின் 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார் ராபர்ட்ஸ். 1963-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட இவர், அங்குதான் 'இன் விட்ரோ பெர்ட்டிலைசேஷன்' ஆய்வை மேற்கொண்டார். 'ஐ.வி.எப்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதுவே 'சோதனைக்குழாய் குழந்தை' ஆய்வு.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உலகின் முதல் ஐ.வி.எப். ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அங்கு ராபர்ட்ஸ் தனது சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்டோவுடன் இணைந்து சோதனைக்குழாய் குழந்தை ஆய்வை வெற்றிகரமாக நடத்தினார்.

இவரது முயற்சியால், உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுன், 1978 ஜுலை 25-ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தது. ராபர்ட்டின் முயற்சியால் உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தை பெற்றனர். உலகம் முழுவதும் இதுவரை சுமார் 40 லட்சம் சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

'ராபர்ட்டின் முயற்சி, நவீன மருத்துவ உலகில் ஒரு மைல்கல்' என்று நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்தது. தற்போது 85 வயதாகும் ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அதனால், நோபல் பரிசு பெற்றது குறித்து அவரால் கருத்துத் தெரிவிக்கக்கூட முடியவில்லை.

வேதியியல்

 ஐயிஷி நெகிஷி (75), அகிரா சுஸுகி (80) -ஜப்பான், ரிச்சர்டு எப். ஹெக் (79)- அமெரிக்கா

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, இந்த இரண்டு ஜப்பானியர்களுக்கும், அமெரிக்க நாட்டவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தொகை இம்மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

ஐயிஷி நெகிஷி

ஜப்பானின் சாங்சுன் பகுதியில் 1935 ஜுலை 14-ம் தேதி பிறந்தார் நெகிஷி. ஆரம்பம் முதலே வேதியியல் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு பயின்று வந்தார். 1958-ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நெகிஷி, பயிற்சி விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இவர், 1960-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். பர்டிï பல்கலைக்கழகம், சிராகுஸ் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பணியாற்றிய நெகிஷி, 1979-ல் மீண்டும் பர்டிï பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார்.

அகிரா சுஸுகி

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள முகாவா பகுதியில் 1930-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி பிறந்தார் சுஸுகி.

ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற இவர், 1963-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை பர்டியூ பல்கலைக்கழகத்தில் உயர் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டார். பின்னர் மறுபடி ஹொக்கைடோ பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிய அகிரா சுஸுகி, அங்கு பேராசிரியராகச் சேர்ந்தார்.

ரிச்சர்டு எப். ஹெக்

ரிச்சர்டு பிரெட் ஹெக், அமெரிக்க வேதியியலாளர். மசாசூசெட்ஸில் 1931 ஆகஸ்டு 15-ல் பிறந்த ரிச்சர்டு, லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து, ஆய்வுப் பட்டம் பெற்றார்.

ரிச்சர்டின் `ஹெக் வினை', இவருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்தது. வேதியியல் துறையில் பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளைப் படைத்திருக்கிறார் ரிச்சர்டு பிரெட் ஹெக்.

கரிம வேதியியல் துறையில் மேற்கொண்ட ஆய்வுக்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 'நுண்ணிய ரசாயனப் பொருட்கள் உற்பத்திக்கு இவர்களது கண்டுபிடிப்பு உன்னதப் பங்காற்றுகிறது' என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பின் மூலம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து கள், மிக மெல்லிய `மானிட்டர்கள்' போன்றவற்றைத் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமைதி

லியூ ஜியாபோ (54)- சீனா

சீனாவைச் சேர்ந்த ஜனநாயக ஆதரவாளரான லியூ ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சீனாவின் ஜிலின் பகுதியில் உள்ள ஷாங்ஷனில் 1955-ம் ஆண்டு பிறந்தார் லியூ. 1976-ல் ஜிலின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், 1982-ல் இலக்கியத்துக்கான பி.ஏ. பட்டம் பெற்றார்.

பின்னர் பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த லியூ. 1984-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார். அதன்பின் அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்து 1988-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1989-ல் பெய்ஜிங் தியானென்மன் சதுக்கத்தில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டம் சீன அரசை அதிர வைத்தது. சீன அரசால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்ட அப்போராட்டத்துக்கு லியூ முக்கிய ஆலோசகராகச் செயல்பட்டார். தற்போது சீன அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லியூ ஜியாபோ, சீனாவில் மனித உரிமை ஆதரவுப் போராட்டத்தின் அடையாளச் சின்னமாக விளங்குபவர் என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு லியூ ஜியாபோவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு சீனா கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்

பீட்டர் ஏ டைமண்ட் (70), டேல் டி மார்டன்சென் (71)- அமெரிக்கா, கிறிஸ்டோபர் ஏ. பிஸாரைட்ஸ்(62)- இங்கிலாந்து

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, இந்த இரு அமெரிக்கர்களுக்கும், இங்கிலாந்தில் வசிக்கும் சைப்ரஸ் நாட்டவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பீட்டர் ஏ டைமண்ட்



யேல் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்ற டைமண்ட், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

அதன்பின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இவர், தற்போது மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

டேல் டி மார்டன்சென்
 

வில்லாமெட்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற மார்டன்சென், கார்னகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தார்.

1965-ம் ஆண்டு முதல், வடமேற்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கிறிஸ்டோபர் ஏ. பிஸாரைட்ஸ்

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிரேக்க வம்சாவளியினரான பிஸாரைட்ஸ், இங்கிலாந்தில் குடியேறி 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' மையத்தில் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தார். அதே மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், 'நார்மன் சாஸ்னோ சேர் ஆப் எக்னாமிக்ஸ்' அமைப்பின் பொருளாதார ஆய்வு மைய இயக்குநராகவும் உள்ளார்.

தொழிலாளர் சந்தை நிபுணர்களான இந்த அறிஞர்கள் மூவரும், பொருளாதாரக் கொள்கைகள் எந்தளவு வேலைவாய்ப்பின்மையை உருவாக்குகின்றன என்பது குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையிலும் வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல்

ஆண்ட்ரே கீம் (52), கான்ஸ்டான்டின் நோவோசெலாவ் (36)- ரஷியா

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, ரஷியாவைச் சேர்ந்த இந்த இரண்டு ஆய்வாளர்களுக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது.

ஆண்ட்ரே கீம்

முந்தைய சோவியத் யூனியனில் உள்ள சோச்சியில் ஜெர்மானிய யூத குடும்பத்தில் 1958 அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார் ஆண்ட்ரே கான்ஸ்டான்டினோவிச் கீம்.

மாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆப் பிசிக்ஸ் அண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படித்து, ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரே கீம். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

கான்ஸ்டான்டின் நோவோசெலாவ்

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நிஸானி டாகிலில் 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்தார் கான்ஸ்டான்டின் செர்கீவிச் நோவோசெலாவ். மாஸ்கோ இன்ஸ்டிட்ïட் ஆப் பிசிக்ஸில் பட்டயம் பெற்ற இவர், ஆலந்தின் நிஜிமெகன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆய்வுப் பட்டம் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இவர், ஆண்ட்ரே கீமுடன் இணைந்து இயற்பியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இரு பரிமாணப் பொருளான 'கிராபீனில்' மிக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இலக்கியம்

ஜோர்ஜ் மரியோ பெட்ரோ வர்காஸ் லோஸா (74)- பெரு

பெரு நாட்டின் அரிகிபாவில் 1936-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்தவர் மரியோ வர்காஸ் லோஸா. எழுத்தாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், கட்டுரையாளர் என்று பன்முகம் கொண்டவர் இவர். தென் அமெரிக்காவின் மிக முக்கியமான நாவலாசிரியராகவும், கட்டுரையாளராகவும் மரியோ வர்காஸ் லோஸா கருதப்படுகிறார்.

'அதிகார அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எதிர்ப்பு, புரட்சி மற்றும் தோல்விகளின் தீவிரமான காட்சிகளை வரைபடமாகத் தீட்டியதற்காக மரியோ பெட்ரா வர்காஸுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது' நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

No comments: