Saturday, October 30, 2010

மனிதனைத் தேடும் மனிதன்!திரும்பும் திசையெங்கும் மனிதர்கள். 'அதோ போறானே... அவனெல்லாம் ஒரு மனுசனா?' என்று கூறுவதை இன்று அடிக்கடி கேட்க முடிகின்றது. மனிதனைப் பார்த்து மனிதன் கேட்கிற கேள்விதான் இது.

டயோஜெனிஸ் என்ற தத்துவஞானி ஒருநாள் பகல் நேரத்தில் எரியும் விளக்குடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் தென்படுகிறவர்களை உற்று உற்றுப் பார்த்தபடி சென்றார். எதிரே வந்தவர்கள், "யாரை இப்படித் தேடுகிறீர்கள்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "நான் மனிதனைத் தேடுகிறேன்'' என்றாராம். கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

ஓர் உருதுக் கவிஞர்...

வண்ணத்துப்பூச்சிக்கு
பின்னால் போயிருந்தால்
பூங்காவிற்குள்
போயிருப்பேன்
மனிதர் பின்னால்
சென்று விட்டேன்...


என்று வேதனையுடன் பாடுகிறார்.

தத்துவஞானிக்கும், கவிஞருக்கும் என்னவானது? மனிதர்களை அவர்களுக்குப் பிடிக்கவில்லையா, இல்லை மனிதர்கள் யாரும் மனிதர்களாக இல்லையா? அவர்களின் பார்வையில் இந்த இரண்டுமே சரிதான். பார்ப்பதற்குப் பலரும் மனிதர்களைப் போல மனித உருவில்தான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களாக இல்லை என்பதுதான் பொருள்.

கிரேக்கர்கள் எதற்கும் இலக்கணம் வகுப்பதில் வல்லவர்கள். அதிலும் வரைவிலக்கணம் கூறுவதில் வல்லவர்கள். அவர்களுக்குள் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. 'எல்லாவற்றிற்கும் நாம் வரை விலக்கணம் வகுத்து விட்டோம். மனிதனுக்கு மட்டும்தான் இலக்கணம் வகுக்கவில்லை' என்கிற வருத்தம் இருந்தது. எனவே, மனிதனுக்கு இலக்கணம் வகுத்தே தீர்வது என்று ஒருநாள் அறிஞர்கள் பலரும் கூடி முடிவெடுத்தனர்.

திட்டம் செயல்படத் தொடங்கியது. அறிஞர்கள் அனைவரும் கூடினர். ஒவ்வொருவரும் தமது மனதில் எழுந்த எண்ணங்களை எடுத்துச் சொன்னார்கள். ஒவ்வொருவர் கருத்திலும் ஏதோ ஒரு குறை இருந்தது.

ஒருவர் எழுந்தார். "என்னால் மனிதனைப் பற்றிய வரைவிலக்கணத்தைச் சொல்ல முடியும்'' என்றார்.

"சொல்லுங்கள்'' என்றனர்.

"மனிதன் என்பவன் இரண்டு கால்களைக் கொண்ட பிராணி'' என்றார்.

"இது சரி'' என்றார்கள் எல்லோரும்.

அப்போது ஒருவர் எழுந்தார். "எனக்கோர் ஐந்து நிமிட அவகாசம் கொடுங்கள்'' என்று வெளியே சென்றார்.

ஐந்து நிமிடம் கழித்து அவர் கையில் ஒரு துணிப்பையுடன் வந்தர். எதிரில் இருந்தவர்களை அருகில் அழைத்தார். துணிப்பையை அவிழ்த்தார். "இதோ மனிதன்!'' என்றார்.

எல்லோரும் திடுக்கிட்டார்கள். காரணம் அவர் கையிலிருந்து ஒரு கோழி!

"இது கோழி அல்லவா? இதை எப்படி மனிதன் என்கிறீர்கள்?'' என்றனர்.

"நான் சொல்லவில்லை. உங்கள் வரைவிலக்கணம்தான் அப்படிச் சொல்கிறது. இது ஓர் இருகால் பிராணி அல்லவா!''

அப்போது, மனிதனுக்கான இலக்கணம் சொன்னவர், "எனது தவறை ஒப்புக் கொள்கிறேன். இப்பொது மீண்டும் சொல்கிறேன். 'மனிதன் என்பவன் இறகுகளற்ற இருகால் பிராணி'' என்றார்.

கோழிக்காரர் மறுபடியும், "எனக்கோர் ஐந்து நிமிடம் அவகாசம் கொடுங்கள்'' என்றார்.

மறுபடியும் வெளியே சென்று விட்டு ஒரு துணிப்பையில் கோழியை எடுத்துக் கொண்டு வந்தார். அதே கோழி. ஆனால் ஓர் இறகு கூட இல்லை. அதன் எல்லா இறகுகளும் பிடுங்கப்பட்டிருந்தன.

"இதோ! இறகுகளற்ற இருகால் பிராணி. அதாவது உங்கள் வரைவிலக்கணப்படி, மனிதன்!'' என்றார் அவர் குறும்புச்சிரிப்புடன்.

இப்படியாக மனிதனைப் பற்றிய விவாதம் விரிந்து கொண்டே போனது. இறுதியாக அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். "எந்த இலக்கணத்திற்குள்ளும் மனிதனை அடக்க முடியாது. அதுதான் அவன் மகத்துவம்'' என்பதே அந்த முடிவு.

ஆம். மனிதனின் ஆற்றல் அளவிடற்கரியது. எந்த வேலிக்குள்ளும் அவனைக் கொண்டு வருதல் அரிது.

ஓர் ஊரில் ஒரு சித்தர் இருந்தார். வீதியில் செல்லும் மனிதர்களைப் பார்த்து, 'அதோ பாம்பு போகிறது, அதோ தேள் போகிறது, புலி போகிறது, நரி போகிறது' என்று சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருநாள் அந்த வழியாக ஒருவர் வந்தார். அவரைப் பார்த்தவுடன் அந்தச் சித்தர் மகிழ்ச்சி யோடு எழுந்து வணங்கினார். "இதோ ஒரு மனிதர் போகிறார்'' என்றார். அருகிலிருந்தவர்கள், "ஏன் இவரை மட்டும் மனிதர் என்று சொல்கிறீர்கள்?'' என்று கேட்டனர்.

அப்போது அவர் சொன்னார், "இந்தப் பிரபஞ்சம் என்ற பெருங்கடலில் மிதக்கும் பனிமலைதான் மனிதன். தெரிவது கொஞ்சம், தெரியாதது அதிகம். மனிதனின் புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை நான் எடை போடுவதில்லை. அவரவர் மன இயல்புகளைக் கொண்டே அளக்கிறேன். அந்த மன இயல்பைக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் அவரது உள்ளத்தில் ஓடுவதைக் கண்டேன். அதனால்தான் அவரை 'மனிதர்' என்று குறிப்பிட்டேன்'' என்றார்.

ஆம்! அவர் கண்ட 'மனிதர்'தான் வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் பெருமான். ஞானிகளின் பார்வை தீர்க்கதரிசனமான பார்வை என்பது இதுதான்.

இனிய இளைஞனே!

இன்று மனிதர்கள் பலரும் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சின்னச் சின்ன தொட்டிகளில் நடப்படுகிறார்கள். ஆம், மனிதர்களும் இன்று போன்சாய் மரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிற உயிர்களுக்குப் பயன் தராத மரத்தினால் என்ன பயன்?

மனிதம் நிறைந்திருப்பவன்தான் மனிதன். தன்னுயிர் போல் பிற உயிர்களைப் பாவிக்கும் பண்பு நலன், துன்பத்தில் பிறர் துவல்கிற போது அவர்களின் கண்ணீரைத் துடைக்கிற கருணை உள்ளம், பகைவர்களையும் நேசிக்கும் பாசம், கைம்மாறு கருதாமல் பிறரிடம் காட்டும் அன்பு இவற்றின் கூட்டுறவில் பிறப்பதுதான் மனிதநேயம். இதயத்தில் எழுகிற ஈரம்தான் மனிதநேயத்தின் சாரம். மொத்தத்தில் அன்பில் விளைந்ததுதான் மனிதம். இந்த மனிதம் நிறைந்தவன்தான் மனிதன். இத்தகைய மனிதப் பண்புகளை இளம் இதயங்களில் விதைகளாகத் தூவுங்கள். அதுதான் விருட்சமாக மாறிப் புதிய தலைமுறைக்கு நிழல் கொடுக்கும்.

'இன்றைய சூழலில் மனிதனாக இருக்க முடியவில்லையே? அப்படியே இருந்தாலும் என்ன பயன்?' என்று எதிர்மறையாகச் சிந்திக்கின்றீர்களா? மனிதம் உடையவர்களாக சிலராவது இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தான், 'பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்கிறது சங்க இலக்கியப் பாடல்.
  
இந்தப் பூமியில் பேராற்றல் மிக்கவன் மனிதன். அவன் கால்கள் ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடக்கின்றன. அவனது கண்கள் காண முடியாதவற்றைக் காண்கின்றன. அவனது காதுகள் உலகின் மறுபாதியில் பேசும் வார்த்தைகளை இங்கிருந்து கேட்கின்றன. அவன் எத்தனை வலிமை பெற்றிருக்கிறான்! அவனால் மலைகளைக் குடைந்து இன்னொரு பக்கம் செல்ல முடியும். அவனால் மலையில் விழும் அருவியை அங்கேயே தடுத்து நிறுத்த முடியும். யார் இத்தகைய ஆற்றல் பெற்றவர்? மனிதன்தான்.

அத்தகைய ஆற்றல் பெற்ற இளைஞனே! இந்த ஆற்றலோடு மனிதநேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கையை வளப்படுத்தும், வாழும் நாட்டையும் வலிமைப்படுத்தும். மனிதம் நிறைந்த மனிதர்களால்தான் இது சாத்தியமாகும்.

மனிதன் பெரும் ஆற்றல் பெற்றவன். மனிதனுக்குள்தான் எல்லாம் அடங்கி இருக்கின்றன. வெறும் ஆற்றல் மட்டுமே பெற்றிருப்பவன் மனிதன் அல்லன். மனிதம் நிறைந்தவன் தான் மனிதன். மனிதம் நிறைந்தவர்கள் தான் புனிதம் நிறைந்தவர்களாக இருப்பர். புனிதம் போற்றக்கூடியதல்லவா!

பேராசிரியர்.க.ராமச்சந்திரன் 

No comments: