Friday, October 29, 2010

நேருவின் மறைவு பற்றி கருணாநிதி படித்த இரங்கல் கவிதை

சென்னை லயோலா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தொடக்கவிழா நேற்று முன்தினம் நடந்தது. புதிய கல்லூரியை தொடங்கி வைத்து பேசிய முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் நேருவின் மறைவையொட்டி தான் முன்பு எழுதியிருந்த இரங்கல் கவிதையை நினைவுகூர்ந்தார்.

1970-ம் ஆண்டுக்கு முன்பே எழுதிய கவிதை."புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலக்குதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முத்தமிழால் கவி தொடுக்கும்;
புவியரங்கில் புகழ்குவித்த பண்டிதர்க்குக்
கவியரங்கில் மாலை சூட்டும்
பூத்திருக்கும் தோட்டத்தில் புகுந்துவிட்ட என்றனுக்குக்
காத்திருந்த காட்சியொன்றைக் கவியாக்கித் தருகின்றேன்.
சிரிக்கின்ற 'மல்லிகை'யின் காதுகளில்
'செண்பகம்'தான்
ஏதோ சேதி தனைச் சொல்ல;
சேர்ந்திருவர் 'மந்தி'யிடம் ஓடி
அவள் செவியில் வாய் வைத்தார்; பின்னர்
மூவருமே 'முல்லை'யிடம் முனகிவிட்டு அவளோடு
நால்வருமே நந்தவனம் முழுவதும்
நடைபோடத் தொடங்கிவிட்டார்.
யாரைத்தான் தேடுகின்றார் பூப்பெண்கள்? கட்டுதற்கு
நாரைத்தான் தேடியலைகின்றாரோ- என எண்ணி, நான் வியந்தேன்.
(அதாவது நேருபிரான் மறைந்த நேரத்தில் அதையொட்டி எழுதப்பட்ட
தலைமைக் கவிதை. நேருவுக்கு ரோஜா மலர் மீது உள்ள அன்பும், அதன் மீது
உள்ள பிரியமும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். எனவே, மலர்களை வைத்து
இந்தக் கவிதையை எழுதினேன்.)
தென்றலிலே மணம் பரப்பித் தேடுகின்றார் தேடுகின்றார்
தெரியவில்லை யாரை என்று!
"முழங்காலை வலிக்குதடி'' என்றாள் முல்லை.
"சிவந்ததடி என் பாதம்'' எனச் செண்பகம் இளித்தாள் பல்லை!
சாமந்தி மல்லிகை இருவர்க்கும் பெருந்தொல்லை
பூங்காவின் மூலையொன்றில் புலம்பல் ஒலி கேட்டவுடன்
பூப்பெண்கள் "அதோ அதோ!'' எனச் சொல்லி அந்த இடம் பறந்திட்டார்.
(நேருவைப் பார்த்து ரோஜா கேட்கிறது.)
"பூமானே! புகழ்க்குன்றே! போனாயோ என் தலைவா?
கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக்
கொள்ளையிட்ட கூற்றெங்கே?
எனையெடுத்து முத்தமீந்து இதயத்தில் ஏற்றிக் கொண்டாய்; இன்று,
எனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தொலைவு போய்விட்டாய் என்ன நியாயம்?
இதழுக்குத் தேன் தருவாய் - பதிலுக்கு
நான் தருவேன் மறந்தா விட்டாய்?
மார்பகத்தில் அணைத்திருப்பாய்
மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும்
மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனம்தான் கல்லோ?''
எனக் கதறும் ஒலி கேட்டு
இனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார்
மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டி
மயங்கிவிழும் நிலைமையிலே ரோஜா நின்றாள்.
மல்லிகை முல்லை அருகே சென்று
"என்னடி ரோஜா இன்னமும் அழுகை?
நல்லவர் இருந்தார் நானிலம் வாழ
வல்லவர் இருந்தார் வாரி அணைக்க
போனது வருமோ? புலம்பலை நிறுத்து!
பூக்களின் ராணி! புன்னகை காட்டு!''
ஆறுதல் கூறினர்; அழகு ரோஜா
தேறுதல் பெறாமல் தேம்பியழுதாள்!
'இரவு உமிழும் எச்சில் என்பேன் பனித்துளியை - என்
இறைவனது முத்தம் அமுதம் என்பேன்
அன்றமுதம் தந்தெனக்கு ஆசை காட்டி
இன்றென்னை எச்சில் பனித்துளியில் நனைத்துவிட்டார்; என் செய்வேன்?
முடிசூடா மன்னரவர் இனி என்னைச் சூடார்
என நினைக்கும் போதெல்லாம்
முள்ளாகக் குத்துதடி மேனியெல்லாம்!
வாழ்வில் சிரிப்பில்லா எனக்கு இந்தச் சிவப்பெதற்கு?
மனத்தில் மகிழ்வில்லா எனக்கு நறுமணந்தான் எதற்கு?
இந்தியச் சிம்மாசனத்தில் அவர் இருந்தார் - அவர்
இதயச் சிம்மாசனத்தில் நானிருந்தேன்
உறங்குகின்றார் விழித்தெழுவார்; படி
இறங்கி வந்து பாவையெனை அழைப்பதற்குள் அவர் நெஞ்ச
அரங்குதனில் ஆடுதற்குச் சிவப்பாடை
புனைந்து நின்றேன் அதற்குள் காலக்
குரங்கின் கை 'மாலை'யாக ஆகிவிட்டார்;
என் வாழ்வை இரவாக ஆக்கிவிட்டு!
போய்விடுங்கள் எனை விடுத்துத் தனியாக
புனிதனவன் பிறந்த நாளில் கண்புனலை அவன்
காலடிக்குக் காணிக்கை யாக்குதலே என் கடமை''
ரோஜாவின் சொற்கேட்டுச் சோர்ந்து போனேன்; தன்
ராஜாவின் பிரிவாலே வாடுகின்ற அவளையெண்ணிப்
பேசாமல் திரும்பிவிட்டேன்; இன்றென்
மனைவி கூந்தல் மணம் வீசாமல் போகட்டுமென்று
மலர் எதுவும் பறிக்காமல் வந்துவிட்டேன் - இன்று
மலர் பறித்தால்; அது மாவீரன் நேருவுக்கு
மாலை தொடுத்திடவே! நம்
மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின்
கொடி பறிந்து விடுதலைக் கொடி பிடித்த கொள்கை வீரன்
அடி கொடுத்தால் வாங்கிக்கொண்டு
அடக்குமுறை தாங்கிக்கொள்ள
அண்ணல் வகுத்த வழி
அயராதுழைத்த சிங்கம்!
இளமையின் எழிலை இருட்டுச் சிறையில் கழித்த தியாகி!
எண்ணெயிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம் எனினும்
எண்ணெயிட்டார் விடுதலை வேள்விக் கென்போம்!
பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாய்த் திகழ்ந்தார் என்போம்!
பணியின் விரைவைப் பம்பரம் என்பர்.
பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்.
இடி இடிக்கும் பேச்சில் (நேருவின் பேச்சில்) - இளமைத்
துடிதுடிக்கும் எழுத்தில் - தேன் ஒரு
படி இனிக்கும் பண்பில் - அதிர்
வெடி முழக்கும் செயலில் - விடாப்
பிடியிருக்கும் குணத்தில் - விடுதலைக்
கொடியிருக்கும் கையில் - கொஞ்சம்
முடியிருக்கும் தலையில்! (என்னைப் போல)
நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்
நேர் நின்று எதிர்த்ததாலே நேரு வானார்... இந்திய
நீள் எல்லைக் கோடு தன்னைப் பெரும்பகைவர் கடந்த போது என்ன
நேருமோ என்றேங்கி இருந்த மக்கள்
நெஞ்சின் துயர் துடைத்து, எதுவும்
நேராது நான் இருக்கின்றேன் எனச் சொல்லி நேருவானார்.
துணிவிருந்தால் உள்ளத் தூய்மையிருந்தால்
துன்பம் நேருமா? எனக் கேட்டார் குழந்தையிடம்!
இன்பமே நேரும் மாமா என்றது பிஞ்சும் பூவும் -
இதனால் நேரு மாமாவானார்.
மதம் கடவுள் நம்பிக்கை இவற்றிலே
அவர் கொள்கை தனி. எனினும் பிறர்
மனம் புண்படாமல் நல்வழியில் ஆட்சி செய்தார் - தன்
மரணத்தின் பின்னாலே மதச் சடங்கு வேண்டாவெனத் தக்க
தருணத்தில் உயிலெழுதி உலகிற்கு ஒளி செய்தார்.
நடுநிலைத் தன்மை நலமெனக் கொண்டு
நானிலம் போற்ற நமது பூங்குன்றனார் நவின்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற மொழிக்குத்
தோதாய்க் கொள்கை தொகுத்தே சொன்னார்.
காலத்தின் கோலம் காட்டுக்கு ராஜாவாய்க் கர்த்தபம் ஆகும்
ஏலத்தில் சில பேர் கோபுர உச்சியில் குந்திக் கொள்வர் - இந்திய
ஞாலத்தின் தலைவராய் ஜவகர் ஆனது இவ்விதமன்று! அவர்
சேலத்து மாம்பழம் - சென்னைக் கடற்கரை -
கொற்கை முத்து - கொள்ளேகால் பட்டு -
தஞ்சைக் கோவில் - தண்புனல் காவிரி -
தறியில் காஞ்சி - தடந்தோள் பாண்டியன்.
கருத்தில் மாறுதல் இருந்த போதிலும் -
காலமானார் நேரு என்றதும் கண்ணீர் உகுத்தார்
கலங்கி அழுதார் காராக்கிரகம் கிடந்த அண்ணா!
கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்
கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!
படை துள்ளி வரும் - பகை
அள்ளி வரும் - எரி
கொள்ளி வரும் - கரும்
புள்ளி வரும் - சீனக்
கள்ளி வரும் - எனச் சிலர்
எள்ளி வரும் போது - விடி
வெள்ளி வரும் எனப் - பகை
கிள்ளி எறிந்தான் - இன்று திருப்
பள்ளி அயர்ந்தான் - நேரு -
திருப்பள்ளி அயர்ந்தான்! ''

1 comment:

THOPPITHOPPI said...

அருமையான பதிவு ஓட்டும் வாழ்த்தும் நண்பரே