Saturday, October 23, 2010

உடலினை உறுதி செய்!

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதி செய்...


மகாகவி பாரதி, புதிய பாரதத்தின் புதல்வர்களுக்குத் தந்த புதிய ஆத்திச்சூடி. இந்த ஒவ்வொரு வரியும் இளைஞர்கள் தடம் புரளாமல் இருக்க உதவும் தன்னம்பிக்கைக் கீற்றுகள். இவற்றுள் ஒன்றுதான், 'உடலினை உறுதி செய்'.

உடலினை எதற்காக உறுதி செய்ய வேண்டும்? சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்? உடல் நன்றாக இருந்தால்தானே எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்? உடல் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? உடலோடு ஒட்டியிருக்கின்ற மனமும் நன்றாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒன்று நன்றாக இருந்தால்தான் இன்னொன்று நன்றாக இருக்கும்.

மனம் ஒரு கண்ணாடியைப் போன்றது. கண்ணாடி, முன்னே இருப்பதை அப்படியே காட்டும். அது போல் மனமானது நினைவு, சிந்தனை, உணர்ச்சிகள் இவற்றைச் செயல்படுத்திக் காட்டும்.

கண்ணாடி உடைந்தால் உருவமும் உடையும். அதுபோல்தான் உடல் அழிந்தால் மனமும் அழியும். ஆரோக்கியமான உடலில்தான் தெளிவான மனத்தைக் காணலாம். மனமும் உடலும் கலந்து செயல்படும்போதுதான் மனிதன் சிறப்பாக இயங்க முடியும். எனவேதான் சித்தர்களுள் சிறப்பாகப் போற்றப்படுகின்ற திருமூலர்-

உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்று உடலைப் பேணுவதின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை அடைவதற்கு மூலக் கருவியாக இருப்பது உடல்தான். எனவே இந்த உயிர் அழியாது பாதுகாக்க வேண்டுமெனில், உடலையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

'பலமுள்ள தேகத்தில்தான் திடமான மனம் இருக்க முடியும்' என்பார் சிந்தனையாளர் ரூசோ. கடினமான உழைப்பு, உற்சாகம் தரும் விளையாட்டு, பிறரை ஏமாற்றாமை, பொறாமை கொள்ளாமை, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல் இவையே உன்னதமான வாழ்க்கை நெறிகள். இந்த நெறிமுறைகளின்படி வாழ்வதற்குத்தான் உடலினை உறுதி செய்தாக வேண்டும்.

ஆற்றல்மிக்க இளைஞர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கவர்ச்சியான தோற்றம் வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறீர்கள். அதைக் கனவாகவும் காண்கிறீர்கள். அந்த அழகிய தேகத்தைத் தீய வழிகளில் சென்று தீக்குத் தின்னக் கொடுக்கச் சம்மதமா?

அழகான உடம்பும், உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எவ்வளவு விலை மதிப்பு மிக்கது என்பதை உணர்ந்தாலே போதுமே, உடலை நேசிக்கும் மனசு உங்களுக்கு வருமே!

நாம் கண்ணும் கருத்துமாய் காக்கும் நமது உடல் நமக்கு ஒரு நாளாவது போரடிக்கிறதா? என்ன காரணம் என்று யோசித்தீர்களா? நதியில் ஒரே தண்ணீரில் நாம் குளிப்பதில்லை என்று ஜென் துறவிகள் சொல்லுவார்கள். ஆம், நதி நகர்ந்து கொண்டே இருக்கிறது. அதுபோல்தான் நாம் ஒரே உடலை எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. நம் உடலில் நாளும் பல திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. புது ரத்தம் பாய்கிறது. அதனால்தான் நமக்கு உடல் போரடிப்பதில்லை.

நடை, நோய்க்குத் தடை என்பார்கள். டாக்டர் ப்ரட் ஸ்டட்மன் என்பவர்தான் முதன் முதலில் நடப்பதைப் பயிற்சியாக மேற்கொண்டார். உடல் உறுதிக்கும், அழகிய தோற்றத்திற்கும் நடைப்பயிற்சி நல்லது. எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு குறைந்த நேரத்தில் ஊக்கமாக நடந்து செல்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

மன ஆற்றலை உறுதிப்படுத்த யோகாசனப் பயிற்சி செய்யலாம். உடலும், மனமும் உறுதியாய் இருந்தால் வெற்றிப் படிகளில் பயணிக்கலாம்.

இளைஞனே! நீயும் வெற்றிப்படிகளில் பயணிக்க விரும்பினால் தனியே நடந்து செல். அப்போது உன் மனம் பல பிரச்சினைகளில்இருந்து விடுபடும். நடந்த பிறகு சிந்தித்தால் குழப்பங்களுக்குத் தெளிவு பிறக்கும். உங்களை நீங்களே கண்டறிய நடைப் பயிற்சி நல்லது.

கோபம், பொறாமை, காமம் முதலிய கீழான உணர்ச்சிகளிலிருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும். உடல் வலிமையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் அதைச் சாத்தியமாக்கலாம். ஒரு நிகழ்வுக் கதை...

மக்கள் நெருக்கம் மிகுந்த கொல்கத்தா நகரம். மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு குதிரை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வண்டியினுள் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தியின் மடியில் ஒரு குழந்தை இருந்தது.

குதிரை திடீரென நான்கு கால் பாய்ச்சலில் பறக்கத் தொடங்கியது. வண்டிக்காரன் தூக்கியெறியப்பட்டுக் கீழே விழுந்தான். வண்டியினுள் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் பதறினாள், கதறினாள். ஒரு கையில் குழந்தையையும், இன்னொரு கையில் வண்டியின் சட்டத்தையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

சாலையில் குதிரை வண்டி பறந்து கொண்டிருந்தது. "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்!' என்று அந்தப் பெண் கத்துகிறாள். அவளின் குரலுக்கு எவரும் செவி சாய்க்கவில்லை.

அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அக்குரலைக் கேட்கிறான். எப்படியாவது அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறான். துடிப்புமிக்க அச்சிறுவன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து குதிரை வண்டி வந்த திசையை நோக்கி ஓடினான். குதிரை மீது தாவி ஏற முயன்றான். ஆனால் குதிரை துள்ளிக் குதித்து முதுகை நெளித்து அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடியது. மீண்டும் எழுந்த அவன் முன்போலவே முயற்சி செய்தான். அதில் மீண்டும் மீண்டும் தடுமாறி விழுந்தான். அவன் உடல் முழுவதும் காயங்கள். ரத்தம் கசிந்தது. அதைப் பற்றியெல்லாம் அவன் சிறிதும் கவலைப்படவில்லை. கடைசியில் ஒருவாறு குதிரை மீது ஏறி வண்டியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், பெருமூச்சு விட்டபடி கீழே இறங்கினாள். அதுவரை சாலையோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் விரைந்தோடி வந்து வண்டியைச் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அச்சிறுவனின் மனவுறுதியைக் கண்டு பாராட்டினர்.

அவனோ எவருடைய புகழ் மொழிக்கும் மயங்கவில்லை. தான் செய்தது அரும்பெரும் செயல் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. தான் செல்ல வேண்டிய பாதையில் அமைதியாகத் தன் நடையைத் தொடர்ந்தான்.

அந்த உறுதி மிக்க வீரச் சிறுவன் யார் தெரியுமா? அவன் பெயர் நரேந்திர தத். ஓ! இது விவேகானந்தரின் இயற்பெயரல்லவா? ஆம், அந்த வீரச்சிறுவன்தான் விவேகானந்தர். அவர், இளைஞர்களின் விடிவெள்ளி அல்லவா! விவேகானந்தர்தான் இளைஞர்களுக்கு உடல் பலமும், மனபலமும் வேண்டும் என்கிறார். அவர்களால்தான் வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க முடியும் என்கிறார். இளைஞனே, நீயும் உனது உடலினை உறுதி செய். அதோ! அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு இந்தியா உன் கண்களில் தெரிகிறது!


பேராசிரியர்
க. ராமச்சந்திரன்

1 comment:

Anonymous said...

Arumai!!!