Thursday, October 21, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

அனைத்துக்கும் காரணம் ஸ்பீல்பெர்க்தான். அவரது 'ஜுராசிக் பார்க்' திரைப்படம் மட்டும் வெளிவந்திருக்காவிட்டால் இம்மாத இறுதியில் சத்தியமாக 'மான்ஸ்டெர்ஸ்' ஹாலிவுட் படம் ரிலீஸாக காத்திருக்காது.

'அரிச்சந்திரன்' நாடகம் பார்த்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மாவானது அனைவருக்கும் தெரிந்த கதை. 'ஜூராசிக் பார்க்' படம் பார்த்து இன்ஸ்பையராகி 'மான்ஸ்டெர்ஸ்' திரைப்படத்தின் கதையை எழுதி கரீத் எட்வர்ட்ஸ் இயக்கியிருப்பது புதுக்கதை. படத்தின் கதை?


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நமது பால்வீதியில் பூமி தவிர வேறொரு கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கண்டுப்பிடித்ததும் விஞ்ஞானிகள் துள்ளிக் குதித்தார்கள். மூலைமுடுக்கில் உள்ள கல்வெட்டில் எல்லாம் இந்த விஷயத்தை பொறிக்க வேண்டும் என ஏகமனதாக முடிவு செய்தார்கள். சரித்திர சாதனை என சாக்லெட்டை பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், அது தரித்திர சாதனையாகும் என அவர்கள் எதிர் பார்க்கவேயில்லை.


சுபயோக சுபதினத்தில் அங்குள்ள நிலத்தின் மாதிரியை எடுத்துக் கொண்டு பூமியை நோக்கி அந்த விண்கலம் புறப்படும் வரையில் எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத ராகுகாலத்தில் அந்த விண்கலம், மத்திய அமெரிக்காவில் விழுந்தது. விஞ்ஞானிகள் பதறிப்போனார்கள். அலாரங்கள் எட்டுத்திசையிலும் ஒலித்தன. அரசிடம் சொல்லி மெக்சிகோ நாட்டின் பாதியை 'அபாயகரமான பகுதி' என அறிவித்த பிறகே ஓரளவுக்காவது விஞ்ஞானிகளால் மூச்சுவிட முடிந்தது.

ஆனால், ஆண்ட்ருவின் சுவாசம் சுத்தமாக நின்று விட்டது. புகைப்படக்கலைஞனான அவனை அழைத்து தன் மகளை கண்டுப்பிடித்து மீட்டு வரும்படி வேண்டுகோள் வைக்கிறார் அவன் முதலாளி. உண்மையில் அது வேண்டுகோள் அல்ல. கட்டளை, ஆனால், முதலாளி உதடு துடிக்க, நா தழுதழுக்கச் சொன்ன தோனி, அதை வேண்டுகோள் என அர்த்தப்படுத்தி விட்டது. முதலாளியின் மகள் சமந்தா தேவதைதான். அது ஆண்ட்ரூவுக்கு தெரியும். அவளை மீட்டு வருவது என்பது சந்தோஷமான விஷயம்தான். அதுவும் அவன் மனதுக்கு புரிகிறது. ஆனால், 'அபாயகரமான பகுதி' யில் அல்லவா அவள் சிக்கியிருக்கிறாள்?

ம்ஹூம். இது கல்லில் நார் உறிக்கும் காரியம். ஆனாலும் மறுக்க முடியாது. குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து தன்னைக் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்துவிட்டு புறப்படுகிறான். சமந்தாவை கண்டுபிடிக்கவும் செய்கிறான். அவளை அழைத்துக் கொண்டு 'அபாயகரமான பகுதி' யை அவன் எப்படி கடக்கிறான்... அப்பகுதியில் மறைந்திருக்கும் வேற்று கிரக வாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறான்... என்பதுதான் 94 நிமிட படம். தோராயமாக 7 ரீல். ஆனால், ஏழும் ரீலா என்பது படம் வந்தால்தால் தெரியும்.

ரிலீசுக்கு முன்பே 'மான்ஸ்டெர்ஸ்' படத்துக்கு ஹாலிவுட் முழுக்க எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. காரணம், படத்தின் கதையோ, திரைக்கதையோ அல்ல. பட்ஜெட் ! ஆமாம், இம்மாம் பெரிய சயின்ஸ் பிக்ஷன் கதையை தம்மாத்தூண்டு பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். அந்த தம்மாத்தூண்டும் ஸ்பெஷல் எபக்ட்ஸ்காக மட்டும்தான் என்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.

இத்தனைக்கும் படத்தின் சிஜியை எந்த பெரிய நிறுவனமும் செய்யவில்லை. சொல்லப்போனால், 'நிறுவனம்' என்ற சட்டத்துக்குள் அடங்கும் யாருமே ஸ்பெஷல் எபெக்ட்சை செய்யவில்லை. தனது லேப் டாப்பைக் கொண்டு இயக்குநரே சிங்கிள் மேன் ஆர்மியாக அந்த வேலையையும் பார்த்திருக்கிறார்!

ஆண்ட்ரூவாக ஸ்காட் மெக்நைரியும், சமதாவாக விட்னி ஏபிளும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மட்டும்தான் படத்தில் ஃபுரொபஷனல் நடிகர்கள். மற்ற அனைவரும் துக்கடாக்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்றால், பல சிறு துக்கடாக்கள் படம் எடுக்கவே உதவும் என முயன்று பார்த்திருக்கிறார் இயக்குனர் கரீத் எட்வர்ட்ஸ்.

அவர் முயற்சி பலித்ததா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

கே. என்.சிவராமன்                            

No comments: