Monday, October 18, 2010

மாற்றம் ஒன்றே மகத்துவமானது

மனிதனின் மகத்துவம் குறித்து எல்லா மதங்களும் பேசியிருக்கின்றன. ஆனால்,  மக்கள் தங்கள் வாழ்வில் உணராத ஒன்றை நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு மாறாக, நீங்கள் உண்மையை நோக்கி நகர்வீர்களேயானால் எல்லாருக்கும் ஒரே உண்மைதான். அது கிறிஸ்துவராகயிருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மை ஒன்றுதான். நம்பிக்கை என்று வருகிறபோது, எது உண்மை, எது உண்மையில்லை என்பதைப் பற்றியும் தனித்தனியான ஒரு நம்பிக்கை இருக்கிறது. பார்க்காததையும், அனுபவித்து உணராததையும் நம்புகிறார்கள். எல்லா முரண்பாடுகளுக்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும்.

ஆன்மீகத் தேடல் என்பது நிச்சயமாக தனிமனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஓர் உணர்வு. ஆனால், அது உள்நோக்கிய தேடலாக அமைய வேண்டும். உண்மையான ஆன்மீகத் தேடல், முதலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. தான் உள்பட எல்லாவற்றையும் நிராகரிக்கும். ஆனால், எதையும் அலட்சியப்படுத்தாது. விடைகளைப் புத்தகத்தில் தேடாது. அனுபவத்தில் காண முயற்சிக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஆன்மீகம் என்பது ஓர் அனுபவம்.

கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நீ அவரைத் தேடி எங்கெல்லாமோ அலைகிறாய். இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு, ஊரெல்லாம் தேடிய கதையாகத்தான் கடவுளைத் தேடுவதும் இருக்கிறது. உன் மனம் நன்மையை மட்டுமே நினைத்தால் கடவுள் உனக்குள் இருக்கிறார் என்று பொருள். தீமையை நினைத்தால் அசுரர்கள் குடியேறியிருப்பதாக அர்த்தம்!

எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்ற எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது. பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.

தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது. இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும். இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள்.

இந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை.எப்போதும் அச்சத்திலேயே வாழ்வதால்தான் ஜோதிடமும் எண்கணிதமும் வாழ்க்கையில் ஆட்சி செலுத்துகிறது. அன்பிலோ, அமைதியிலோ, ஆனந்தத்திலோ வாழ்வதில்லை. அச்சத்திலேயே வாழ்கிறீர்கள் அச்சமே வாழ்வின் அடிப்படையாகும் பொழுது என்ன சொல்லியும் நம்ப வைத்துவிட முடியும். எதையும் நம்பி விடுவீர்கள். எது செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்வதில்லை. தேவையில்லாத விஷயங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள். உங்கள் எல்லா சக்தியையும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு எறும்பு பிறக்கிறது. எறும்பை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இந்த எறும்புக்கு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான அனைத்து அறிவும் இருக்கிறது. நீங்கள் செய்வதை அதனால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எறும்பு என்ன செய்யவேண்டுமோ, அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது. இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும். ஆனால், என்ன சிக்கல் என்றால், உங்களைப் போன்ற அறிவோடு உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன் இயல்புக்கேற்றாற்போல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட விதத்திலேயே உங்கள் குழந்தையையும் அறிவைப் புரிந்து கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள். 

உங்களைப் பொறுத்தவரை உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால் அந்தக் குழந்தை அற்புதமான தச்சுப் பணியாளராக வரலாம். உங்கள் குழந்தை மருத்துவராக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த உலகிற்கு மருத்துவர் தேவை என்பதாலோ, மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பவர்மீது அக்கறை கொண்டோ இம்முடிவை நீங்கள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஒரு முட்டாள்தனமான கருத்து, சமூகத்தில் ஒரு மருத்துவரோ- இல்லை ஒரு பொறியாளரோ அல்லது வேறு ஏதோ ஒரு அபத்தமான பொறுப்போதான் உங்களுக்கு பெருமை என்று கருதுகிறீர்கள்.

குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள். 

குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும். இவைதான் வீட்டில் செய்முறைப் பயிற்சியாக குழந்தைக்குக் கிடைக்கிறது.

எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும். குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

1 comment:

Anonymous said...

///சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும்.
ஆன்மீகத் தேடல் என்பது நிச்சயமாக தனிமனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஓர் உணர்வு. ஆனால், அது உள்நோக்கிய தேடலாக அமைய வேண்டும். உண்மையான ஆன்மீகத் தேடல், முதலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. தான் உள்பட எல்லாவற்றையும் நிராகரிக்கும். ஆனால், எதையும் அலட்சியப்படுத்தாது. விடைகளைப் புத்தகத்தில் தேடாது. அனுபவத்தில் காண முயற்சிக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஆன்மீகம் என்பது ஓர் அனுபவம்.///

என்பதாக அறிவை கிளறி ஆரம்பிக்கும் கட்டுரையாசிரியர் வாசகர்களை சுயமான முடிவெடுக்கும் வாய்ப்பை கொடாது தனது கருத்தையே திணித்துள்ளார். இறுதியில் குழந்தை வளர்ப்பில் கட்டுரை முடிக்கின்றார்.
கட்டுரையாஸ்ரியரின் கூற்றுப்படி இன்னும் பயணியுங்கள் கீழேயுள்ள தொடுப்பும் உங்களுக்கு உதவட்டும்.


இறைவனை தேடி ஓர் அறிவியல் பயணம்.
http://home-islam.blogspot.com/

"மாற்றம் ஒன்றே மகத்துவமானது"