Tuesday, October 12, 2010

வறுமை...

இந்த வறுமை, எத்தனை குடும்பங்களை வாட்டிஇருக்கின்றது! இதன் பசி, எத்தனை உயிர்களைப் புசித்திருக்கின்றது!

கொடியது எது? என்ற கேள்விக்கு, 'இளமையில் வறுமை கொடியது' என்றுதானே சொல்லி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப் படையும் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சி... சமைத்துப் பல நாட்களான அடுப்பங்கரை. மூங்கில் வேயப்பட்ட அந்த வீட்டின் கூரையை கரையான்கள் அரித்தன. அடுப்பங்கரையில் காளான்கள் முளைத்தன. அதன் அருகே அப்பொழுதுதான் ஈன்ற நாய்க்குட்டிகள். கண் திறக்காத அந்தக் குட்டிகள் பசியெடுக்க, தாயின் மார்பகங்களை வருடுகின்றன. அந்தத் தாய் நாயோ பசியால் துடிக்கின்றது. குட்டிகளின் வருடலைப் பொறுக்க முடியாமல் குரைக்கவும் சக்தி இன்றி வலியால் முணங்குகின்றது.

வீட்டின் இன்னொரு பக்கம், உண்பதற்கு ஒன்றும் இல்லை. இளைத்த தேகத்தை உடைய அந்த வீட்டுப் பெண், குப்பையில் முளைத்த கீரையைக் கிள்ளி வேக வைக்கிறாள். போடுவதற்கு உப்பில்லை. கண்ணீர்த் துளிகளையே உப்பாக்குகிறாள். அதையும் சாப்பிடுவது எதற்குத் தெரியுமா?

'அழி பசி வருத்தும் வீடு' அது. சாதாரணமான பசியில்லையாம், அழிக்கும் பசி. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பார்களே, அது இதுதான். இலக்கியம் காட்டும் பாணர்களின் வறுமை வாழ்க்கை இது.

இந்த வறுமை எல்லோருக்கும் பொதுவுடைமை போலும். 'கதாசப்தசகி' என்ற புகழ்பெற்ற தெலுங்கு இலக்கியம். வாழ்வியலைப் பற்றி விளக்கும் ஓர் உன்னதப் படைப்பு. அதில் ஒரு சிறிய கவிதைக் காட்சி-

ஓட்டைக் குடிசையில்
கொட்டும் மழையில்
கைக்குழந்தை
நனையாமல்
முதுகைக் கூடாரமாக்குவாள்
ஆனாலும்
குழந்தை நனையும்
தாயின்
கண்ணீர்த் துளிகளால்


படிக்கின்ற போதே மனசு பதறுகின்றது! மீண்டும் ஒருமுறை கவிதையைப் படியுங்கள். தாயின் கண்ணீர்த் துளிகள் குழந்தையை மட்டுமல்ல, நம்மையும் நனைக்கின்றன.

அன்பான இளைஞனே! வறுமை கொடியதுதான். கொஞ்சம் நினைத்துப் பார். யாருக்கு இல்லை வறுமை? வறுமை வறுமை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போய்விடுமா? மனதார அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வறுமைதான் பலரை வார்த்திருக்கிறது.

செயல்படும்போதுதானே வீரம் பிறக்கும்? அதுபோல் வறுமை இருந்தால்தான் உடல் உறுதி பெறும். கற்கள் ஒன்றோடொன்று உராய்கிற போது நெருப்பு என்கிற சக்தி பிறக்கிறது. அதுபோல்தான் வாழ்க்கையோடு வறுமை முட்டி மோதுகிறபோது அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணம் பிறக்கிறது.

வறுமைதான் மனிதனை சாதிக்கத் தூண்டுகிறது. இன்றைய இளைஞர்களோ, வசதியில்லையே, வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தால் என்னாலும் முன்னேற முடியுமே என்று இல்லாததைப் பற்றியே ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முன்னேற்றத்திற்கு வறுமை ஒரு தடையல்ல. சாம்பலில்இருந்து உயிர்த்தெழுகிற பீனிக்ஸ் பறவையாய் வறுமைதான் வாழ்க்கையிலிருந்து மனிதர்களை உயிர்த்தெழச் செய்கிறது. அது மட்டுமல்ல, முறையாக வாழவும் கற்றுத் தருகிறது.

விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை இன்னொரு கதவைத் திறக்கிறது என்பார்கள். அந்த நம்பிக்கை கொண்டு வறுமையை விரட்டியவர்கள் உலக வரலாற்றில் பலருண்டு. அவர்கள் அந்த வறுமையை எதைக் கொண்டு விரட்டினார்கள் தெரியுமா? நம்பிக்கையைத் தருவது நல்ல கல்விதான். கல்வி என்ற ஒற்றை உளியைக் கொண்டே வறுமை என்கிற கருங்கல் பாறையை அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகிறேன்...

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் சீனிவாச சாஸ்திரிகள். 1931-ம் ஆண்டு ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, இந்திய நாட்டின் பிரதிநிதியாக லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார். 'வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்' எனப் புகழப்பட்டவர் அவர். லண்டன் ஹில்ட் ஹவுஸில் தன்னுடைய புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அவருடைய தெளிவான சிந்தனையையும், ஆங்கிலப் புலமையையும் கண்டு வாயடைத்துப் போனார்கள், ஆங்கிலேயர்கள்.

இப்படி புகழுக்கு உரியவராகத் திகழ்ந்த அவரின் இளமைப்பருவம் எப்படி இருந்தது தெரியுமா? வறுமை... வறுமை! கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேல் சட்டை அணியாமல் ஒருநாள் வந்து விட்டார். அதைக் கண்ட முதல்வர் பில்டர்பெக், எட்டணா அபராதம் விதித்தார்.

"சார்! என் ஒரே சட்டை, மழையில் நனைந்து விட்டது. அதனால் இன்று சட்டை இல்லாமல் வந்து விட்டேன். அபராதத் தொகை எட்டணா என்னிடம் இருந்தால் ஒரு புதிய சட்டை வாங்கியிருப்பேனே?'' என்றார்.

சீனிவாசனின் நிலையைக் கண்ட முதல்வரின் மனம் வாடியது. உடனே அவர் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து நீட்டினார்.

"எட்டணாவை அபராதமாகச் செலுத்தி விட்டு மீதிக்கு சட்டைத் துணி வாங்கிக் கொள்'' என்று கூறினார். அந்தச் சீனிவாசன்தான் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற சீனிவாச சாஸ்திரிகள்.

இனிய இளைஞனே! வறுமையில் பிறப்பது உன் தவறல்ல. வறுமையோடு இறப்பதுதான் உன் தவறு.

சீனிவாச சாஸ்திரிகள் மட்டுமா? இதோ...

விடுதியில் பணம் கட்டிப் படிக்க முடியாமல் அரசின் இலவச உணவைச் சாப்பிட்டு படித்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

அக்கரையில் உள்ள பள்ளிக்குச் செல்ல படகுக்காரனுக்கு தினந்தோறும் காசு கொடுக்க வசதியில்லாததால் ஆற்றை நீந்தியே கடந்து கல்வி கற்ற லால்பகதூர் சாஸ்திரி.

காரல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ்...

இப்படிப் பலரும் கல்வி என்கிற ஒற்றை ஆயுதத்தைக் கையில் ஏந்தி வறுமையை ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள்.

வறுமையைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போதே எழுதுகிற என் பேனாவுக்கும் வறுமை வந்து விட்டது! என்ன? பேனாவுக்கு வறுமையா? பொய்யில்லை. பேனாவில் மையில்லை. மையில்லை என்பதற்காக எழுதாமல் இருக்க முடியுமா? மையைத் தேடி எடுத்து நிரப்பினேன். எழுதும் ஆற்றல் தொடர்ந்தது. 'வறுமை' விலகியது. வாழ்க்கைப் பயணத்தில் வரும் வறுமையையும் இப்படி முயற்சியால் முறியடிக்க முடியும்.

நவராத்திரி விழா, கலைமகளைப் போற்றுகிற திருவிழா. கலைமகள் கையில் எப்போதும் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும். எதற்குத் தெரியுமா? 'கல்வி கரையில' என்பதை எடுத்துக்காட்டத்தான். தொடர்ந்து படியுங்கள். வாழ்க்கையின் மிகப் பெரிய இன்பம் படிக்கின்றபோதுதான் கிடைக்கிறது.


பேராசிரியர் க. ராமச்சந்திரன்

No comments: