Monday, September 13, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

படமா இது? தப்பித்தவறி கூட இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் மழைக்காகக் கூட ஒதுங்கி விடாதீர்கள்.

ஒரு கார் சேசிங் இல்லை. ஆங்காங்கே பாம் வெடிக்கவில்லை. வேற்றுகிரக மனிதர்கள் வரவில்லை. பொறி பறக்கும் டமால் டுமீல் இல்லை. நாடி நரம்பை உசுப்பேற்றும் ஆக்ஷன் காட்சிகள் இல்லை... தடதடக்கும் பின்னணி இசையில்... 

இப்படி க்ளிஷேவாகிப் போன எந்த காட்சிகளும்  இல்லை. எனவே இதையெல்லாம் விரும்பும் ரசிகர்கள் தப்பித் தவறி கூட இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் சென்றுவிடாதீர்கள்.

ஆனால், இவையெல்லாம் இடம் பெறாத, அமைதியான த்ரில்லர் படத்தை ரசிக்க விரும்புகிறவர்கள் உடனடியாக 'தி அமெரிக்கன்' படத்தை காணச் செல்லுங்கள். புத்தம் புது உலகம் உங்கள் முன்னாள் விரியும்.

கொலை செய்வதற்கு விதவிதமான ஆயுதங்களை தயாரித்து தருவதில் ஜேக் கில்லாடி. அவனது பாஸ், பாவெல். யாரை சந்திக்க பாவெல் சொல்கிறானோ அவர்களை ஜேக் சந்திப்பான். அவர்கள் விரும்பும் ஆயுதத்தை தயாரித்து தருவான்.

ஒருமுறை நேரம் நகரின் அருகிலுள்ள கிராமத்துக்கு செல்லும்படி பாவெல் கட்டளையிடுகிறான். அங்கு மாதில்டி என்னும் பெண்ணை ஜேக் சந்திக்கிறான். 'ரேன்ஞ்?' இதுதான் அவர்கள் இருவருக்கும் இடையிலான ரகசிய சொல். இதை மட்டுமே பகிர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அந்தக் கிராமத்திலேயே தங்கி அவளுக்கான ஆயுதத்தை தயாரிக்க ஜேக் முற்படுகிறான். ஆனால், அடையாளம் தெரியாத நபர்கள் அவனை கொலை செய்ய முயல்கிறார்கள்.

எனவே எட்வர்ட் என தன் பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு கிராமத்துக்கு சென்று ஜேக் தங்குகிறான். அங்கு தனியாக வசித்தபடியே மாதில்டி விரும்பும் ஆயுதத்தை தயாரிக்கிறான். அங்குள்ள சர்ச்சில் ஃபாதராக இருக்கும் பெனிடிட்டா என்பவருடன் நட்பும், அந்த கிராமத்தில் வசிக்கும் க்ளாரா என்னும் பாலியல் தொழிலாளி மீது ஈர்ப்பும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனைப் போன்ற தொழிலை செய்பவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பதெல்லாம் இருக்கக் கூடாது. ஆனால், இவையனைத்தும் ஜேக்கிடம் வந்து சேர்கிறது. எனவே, இந்த அசைன்மென்ட்டுடன் தொழிலிலிருந்து விலகுவதாக பாவெல்லிடம் ஜேக் சொல்கிறான்.
சொன்னபடி ஜேக், இத்தொழிலிலிருந்து விலகினானா... அவனை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்... மாதில்டி விரும்பும் ஆயுதத்தை மாதில்டி வாங்குகிறாள்... க்ளாரவும், ஃபாதர் பெனிடிட்டோவும் யார் என்பதற்கான விடையை 104 நிமிடங்கள் ஓடும் 'தி அமெரிக்கன்' படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

'பட்டர்ஃப்ளை' என்ற சொல் தவறான இடத்தில், தவறான நபரால், தவறுதலாக உச்சரிக்கப்படுவதால் நிகழும் சம்பவங்கள்தான் மொத்தப் படமும். ஒரு ஃபிரேமை தவறவிட்டாலும் திரைக்கதை புரியுது. அந்தளவுக்கு பக்காவான நேராஷன்.
1990ல் மார்டின் பூத் எழுதிய ' வெரி பிரைவேட் ஜென்டில்மேன்' திரில்லர் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் வெளிவர இருக்கும் 'பிரைடன் ராக்' படத்தை எழுதி, இயக்கம் ரோவன் ஜோஃப், இப்படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார். டச்சு நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞரும், மியூசிக் ஆல்ப இயக்குனருமான ஆன்டன் கார்பிஜ்ன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜேக்காக நடித்திருப்பவர், ஜார்ஜ் க்ளோனி. பாலியல் தொழிலாளி க்ளாராவாக நடித்திருப்பவர் வயோலெண்டெ ப்ளாசிடோ. சர்ச் ஃபாதராக வருபவர், பாலோ பொனாசிலி. கலைப்பட இயக்குனரான பசோலினியின் பல படங்களில் நடித்திருக்கும் இவர், செக்ஸ் படமாக பர்மா பஜாரில் விற்கப்படும் 'கலிகுலா' படத்திலும் நடித்திருக்கிறார்!

கே.என்.சிவராமன்                        
Trustworthiness:
Vendor reliability:
Privacy:
Child safety:
 

No comments: