Saturday, September 25, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

மாங்கா மடையர்களா அல்லது கிறுக்கர்களா என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். மொத்தத்தில் சபிக்கப்பட்ட பிறவிகளாகத்தான் ஆண்கள் இருக்கிறார்கள். எந்த கண்டத்தில் வசித்தால் என்ன... அல்லது எந்த கிரகத்தில் வாழ்ந்தால்தான் என்ன? ஆண்களின் அவஸ்தைகள் பிரபஞ்சம் தழுவியது.

காதலிக்க ஆண்களுக்கு பிடிக்கும். தனக்கே தனக்கு என்று ஒரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டும். அவளுடன்  பொழுதன்மைக்கும் சுற்ற வேண்டும். ஆட வேண்டும். பாட வேண்டும். கொஞ்ச வேண்டும். இந்த ஆசையில்லாத ஆண்களே ஈரேழு உலகங்களிலும் இல்லை. ஆனால், இந்த ஆசை நிறைவேறிய, கனவு பலித்த ஆண்கள் படும் திண்டாட்டத்தை விளக்க எந்த மொழியிலும் ஒரேயொரு சொல் கூட இல்லை.
சாதரணமாக 'சாப்பிட்டாயா?' என ஒரு பெண் கேட்டால், அதற்கு அர்த்தம் கேட்கப்பட்ட ஆண் சாப்பிட்டானா என்பதல்ல. 'நான் சாப்பிடவில்லை. என்னை 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஏதேனும் வாங்கிக் கொடு' என்பதுதான். இதை புரிந்து கொள்ளாமல் 'ஓ... சாப்பிட்டேனே' என்று தப்பித் தவறி ஒரு ஆண் பதில் சொல்லிவிட்டால், செத்தான். அடுத்த பிரச்னை தலைதூக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து டின் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியாக பெண்கள் உச்சரிக்கும் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்துக்களுக்கு அர்த்தம் கண்டுப்பிடிப்பதற்குள் ஆண்களுக்கு தாவு தீர்ந்துவிடும்.

கேர்ரெட் அனுபவிக்கும் சிக்கல் இதேதான். நியூயார்க்கில் வசிக்கும் இவனுக்கு கேர்ள் ப்ரெண்ட்டாக தம்மாதுண்டு உயிர் கூட கிடைக்கவில்லை. அப்படியே கஷ்டப்பட்டு யாரையாவது கரெக்ட் செய்தாலும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியாக விடையளிக்காமல் சொதப்பி விடுவான். இப்படியாக நொந்து நூடுல்ஸான ஒரு தருணத்தில் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு செல்கிறான். அங்கே இவனுக்காகவே பிறவி எடுத்தது போல் புஷ்டியாக வளர்ந்திருக்கும் எரினை சந்திக்கிறான். கப்பென இவனுக்குள் பல்பு எரிகிறது. சேரை இழுத்துப் போடுவது முதல் சாப்பிட்ட கையை அவள் கழுவ வரும்போது குழாயை திறப்பது வரை சின்னச் சின்னதாக அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறான். அதாவது வழிகிறான் ! முதலில் புருவத்தை உயர்த்தியவன், பிறகு புன்னகையை உதிர்க்கிறாள். இதுபோதாதா? கேர்ரெட் அவளிடம் டோட்டல் சரண்டர். இருவரும் கைகோர்த்தபடி 'நட்பாக' சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.
அடுத்து விவாக பிராப்திரஸ்து... என கேர்ரெட் மனக்கோட்டை கட்டும்போது புல்டோசர் உருவில் சான்பிரான்சிஸ்கோ வருகிறது. எரின் படிப்பது அங்குதான். ஆறு வார விடுமுறையில் நியூயார்க் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் கேர்ரெட் மீது ஒரு 'இது' ஏற்பட்டிருக்கிறது.

ஒரே ஊரில் வசிக்கும் காதலிகளே சர்வசாதரணமாக தங்கள் காதலனுக்கு அல்வா கொடுக்கும்பொது தொலைதூரத்தில் வசிக்கும் எரின் மெல்ல மெல்ல தன் காதலை மறந்துவிட்டால் என்ன செய்வது? புழுவாக துடிக்கிறான் கேர்ரெட் . காதலில் இவன் ஜைய்யிதானா... எரினை கைப்பிடித்தானா என்பதுதான் 'கோயிங் தி டிஸ்டன்ஸ்' (Going The Distance) ஹாலிவுட் படத்தின் கதை.

ரொமான்டிக் காமெடி வகையறாக்களில் அடங்கும் இப்படத்தை நானிடே பர்ஸ்டின் இயக்கியிருக்கிறார். கேர்ரெட் பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஜஸ்டின் லாங். எரினாக வாழ்ந்திருப்பவர், 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டுல்' புகழ் ட்ரூ பேரிமோர்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய படம், 'கோயிங் தி டிஸ்டன்ஸ்'.

கே.என்.சிவராமன்                                        

No comments: