Monday, September 13, 2010

கதவுகளைத் திறக்கும் 'கடிதச் சாவிகள்'!

கடிதம்...

இது வெறும் காகிதம் அல்ல. நினைவுகளைச் சுமந்து வரும் நினைவுச் சுரங்கம். உறவுகளையும், நட்புகளையும் இணைக்கும் இணைப்புப் பாலம். சிறகுகள் இல்லாமல் பறக்கும் பறவை.

கடிதம் விரல்கள் விடும் தூது. ஓர் இதயத் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணங்களை இன்னொரு இதயத் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப் பயன்படும் காகிதக் கப்பல்.

சிவப்புக் கூடுகளுக்குள் இருக்கின்றபோது இது சிறகடிக்கத் துடிக்கும். துடிப்பை உணர்ந்து கொண்ட தபால்காரர்கள் தட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள். பறந்து வரும் காகிதப் பறவையை வரவேற்க வாசலில் விழி வைத்துக் காத்திருக்கின்றார்கள் மக்கள்.

காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். காவியத் தலைவி சகுந்தலை இளவரசன் துஷ்யந்தனுக்கு தாமரை இலையில் தன் நகக் குறிகளைக் கொண்டு எழுதுகிறாள்.

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி. இவள் பூப் பெயர் கொண்ட பூம்புகார் நாயகி. கலைகள் அனைத்தையும் கற்றுணர்ந்தவள். எழுத்தாணியால் எழுதினால் ஏட்டை மட்டுமல்ல, கோவலனின் பெயரையும் காயப்படுத்தும் என்று நினைத்து தாழம்பூவின் வெண்மடலை வெள்ளைக் காகிதமாக்கி, பிச்சிப் பூவின் அரும்பை எழுத்தாணியாக்கி, செம்பஞ்சுக் குழம்பை மையாகத் தொட்டு உள்ளத்து உணர்வுகளை கடிதத்தில் எழுது
கிறாள்.

கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை என்ற காவியம். காவியத் தலைவன் உதயணன். மனைவியின் முகத்திலேயே கடிதம் எழுதி அனுப்புகிறான். மனைவியின் முகத்திலா! ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆச்சரியம்தான். அந்தச் சுவையான கடிதத்தைப் பாருங்கள்.
  
உதயணன் மனைவி வாசவதத்தை அந்தப்புரத்தில் மானனீகை என்பவளுடன் பந்தாடிக் கொண்டிருக்கிறாள். உதயணன் தற்செயலாய் அங்கே வருகிறான். அதுவரை பார்த்திராத மானனீகையின் பேரழகு அவனது இதயத்தையும் பந்தாடுகிறது.

மானனீகை, வாசவதத்தைக்கு அலங்காரம் செய்யும் யவன நாட்டுப் பணிப்பெண். மறுநாள் மனைவி, மானனீகை செய்த அலங்காரத்தைக் காட்ட கணவனிடம் வருகிறாள். வாசவதத்தைக்குத் தெரியாத யவன மொழி உதயணனுக்குத் தெரியும். வாய்ப்பைப் பயன்படுத்துபவர்கள்தானே வாழ்க்கைப் பயணத்திலும் வாகை சூடுகிறார்கள்!

வாய்ப்பைப் பயன்படுத்தி யவன மொழியில் மனைவியின் முகத்திலேயே தன் உணர்வுகளை எழுத்துகளாக்கி எழுதி அனுப்புகிறான். மானனீகையும் பதிலுக்கு எழுதி அனுப்புகிறாள். எவரும் கற்பனை செய்ய முடியாத கடிதம் இது. இதனால்தான் கடிதத்திற்கு `திருமுகம்' என்ற பெயரும் வந்ததோ?

கடிதங்கள் நேசிப்பின் அடையாளங்கள். நேசிப்பிற்குக் கிடைக்கும் மகத்துவம் அதிகம்.

இனிய இளைஞர்களே! எல்லோரையும் நேசியுங்கள்.

கடிதங்கள் பலவிதமானவை. சில கடிதங்கள் காயப்படுத்தும். சில கடிதங்கள் காயங்களுக்கு மருந்து தடவும். உங்களது கடிதங்கள் யாரையும் காயப்படுத்தாத நேசிப்பிற்குரிய கடிதங்களாக இருக்கட்டும். கடிதத்தின் எழுத்துகளுக்கு சக்தி மிக அதிகம். சிறிது நேரம் செலவிட்டு எழுதப்படும் கடிதம் காலமெல்லாம் நம்மிடம் இருந்து பேசிக் கொண்டே இருக்கும்.

மறைந்த பாரதப் பிரதமர் நேரு சிறையில் இருந்த போது தமது அருமை மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் உலக சரித்திரமாகத் திகழ்கின்றன. அதில் ஓரிடத்தில் 'நீ வரலாறு படிப்பது நல்லது. அதைவிட நல்லது, நீ வரலாறு படைப்பது!' என்று எழுதினார். அதுபோல் அவரும் வரலாறு படைத்தார். கடிதத்தின் மகத்துவம் இது.

காரல்மார்க்ஸ் தனது அருமை மனைவி ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள் மனிதநேயத்தின் திறவுகோல்களாகத் திகழ்கின்றன. இப்படி இன்னும் சிலரது கடிதங்கள் இதய வாசலைத் திறக்கும் இனிய சாவிகளாக விளங்குகின்றன.

நேசத்திற்குரிய இளைஞனே! இப்போதைய உங்களது கடிதம் பெரும்பாலும் விண்ணப்பக் கடிதம் தான். அதுவும் வேண்டுதல் விண்ணப்பக் கடிதம்தான். ஒன்று, நீங்கள் எழுதுவது பெற்றோர்களுக்கு. 'நான் நலம். நான் இங்கு நலமாக இருக்க உடனே அனுப்புக பணம்' என்று எழுதுவது.
 
இரண்டாவது, வேலை வேண்டி எழுதும் விண்ணப்பக் கடிதம். இது உங்களது வாழ்க்கையின் கதவுகளைத் திறக்கும் கதவு. பொறியியல் மாணவர்கள் மட்டுமின்றி கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இன்று போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. தானியத்திலிருந்து பதர்களைப் பிரிப்பதற்கு உழவர்கள் முறத்தால் தூற்றுவார்கள். அதுபோல் நீங்கள் தானியமா, பதரா என்பதைக் கண்டுபிடிக்கத்தான் இந்த போட்டி தேர்வுகள்.

வேலைக்காக நீங்கள் அனுப்பும் விண்ணப்பக் கடிதம் தனித்துவம் உடையதாக இருந்தால்தான் வெற்றி கிட்டும். விண்ணப்பக் கடிதத்தால் வெற்றி பெற்ற ஓர் இளைஞனின் அனுபவத்தை உங்களோடு பகர்கின்றேன். அந்த இளைஞன் தனது விண்ணப்பத்தை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்த வழிமுறைகளைக் கண்டுபிடித்தான்.

பத்திரிகையில் ஒரு கம்பெனியின் விளம்பரம் வந்திருந்தது. அந்த கம்பெனி பற்றி பலரிடமும் விசாரித்தான். வியாபார உத்திகளைப் பற்றித் தெளி
வாகத் தெரிந்து கொண்டான். அந்த கம்பெனியின் நிறை, குறைகளை ஓர் அறிக்கையாய் தயாரித்தான். அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றியும் விளக்கி எழுதி, அத்துடன் தன்னைப் பற்றிய ஒரு சிறிய விவரக் குறிப்பையும் இணைத்து அனுப்பினான். அவனது விண்ணப்பம் மட்டும்தான் தனித்ததாகத் திகழ்ந்தது. கம்பெனியின் நிர்வாக இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டான். இன்று அந்த இளைஞன்தான் கம்பெனியின் மார்க்கெட்டிங் மேனேஜர். எப்படி இது சாத்தியமானது? வித்தியாசமான விண்ணப்பம் தான்.

சிலர் விண்ணப்பிக்கும்போது குடும்பச் சூழல்களை எல்லாம் விலாவாரியாக விவரிப்பார்கள். வறுமையின் கோரத் தாண்டவத்தையும், ஏதாவது ஒரு வேலை கொடுங்கள், உங்கள் காலுக்குச் செருப்பாக உழைப்பேன் என்றெல்லாம் எழுத்தில் இறைஞ்சுவார்கள். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பக் கடிதங்களில் இந்தக் கெஞ்சல்களும், கொஞ்சல்களும் வேண்டவே வேண்டாம். வேலை கொடுப்பவர்கள் உங்கள் திறமைக்கு மதிப்புத் தருபவர்களே தவிர, உங்களது பலவீனத்திற்கு அல்ல.

அப்புறமென்ன? இனிமேலாவது உங்கள் 'பயோடேட்டா'வை 'பளிச்'சிடச் செய்யுங்கள். 'யூ ஆர் அப்பாயின்டட்' என்ற வெற்றிக் கடிதம் உங்களது வீட்டுக் கதவை விரைந்து வந்து தட்டும். இதோ! கதவு தட்டும் ஒசை கேட்கிறது.

பேராசிரியர் க.ராமச்சந்திரன்

No comments: