Monday, September 6, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

'அட' என புருவத்தை உயர்த்தினாலும் சரி, 'சபாஷ்' என கைத்தட்டினாலும் சரி, 'கலக்கிட்டான்டா...' என தேநீர் அருந்தியபடி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலும் சரி, விஷயம் ஒன்றை குறிப்பதாகத்தான் இருக்கும். அது 'கேஸ் 39' ஹாலிவுட் படம். 2006ம்  ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 2008ல் வெளிவரும் என்று அறிவித்து பின்னர் 2009 ஏப்ரல் என தள்ளி வைக்கப்பட்டு, அதுவும் சரிப்படாமல் இந்தாண்டு ஜனவரி மாதம் நிச்சயம் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்த பின்னரும் மார்ச் 5ம் தேதி இங்கிலாந்தில் மட்டுமே இப்படம் ரிலீசானது. மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பகுதி பகுதியாக டிவியில் ஒளிபரப்பினார்கள். இப்படி ரிலீசில் கொத்து பரோட்டா போட்ட இப்படம், அக்டோபர் மாதம் அமேரிக்கா உட்பட உலகம் முழுக்க திரையரங்குகளில் (ரீ?) ரிலீசாகப் போகிறது.

பொதுவாக இப்படியான பட வெளியீட்டு துர்பாக்கியம் எந்த ஹாலிவுட் படத்துக்கும் நேர்ந்ததில்லை. ஆனால், 'கேஸ் 39' விஷயத்தில் நடக்காது என்று நினைத்ததெல்லாம் நடக்கிறது. என்றாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக உலகம் முழுக்கவே ஹரார் பட ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், கதை.
எமிலி ஜென்கின்ஸ், ஒரு சமூக சேவகி. பெற்றோர்களால் துன்புறுத்தப்படும் குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் அமைப்பின் முழு நேர ஊழியர். 38 கேஸ்களை வெற்றிகரமாக முடித்த எமிலிக்கு 39வது கேஸ் சிக்கலாக இருக்கிறது. காரணம், லில்லித் என்னும் பத்து வயது சிறுமி.

ஒருநாள் லில்லித், அவளை தொடர்பு கொள்கிறாள். விரைந்து வில்லித்தனத்தின் வீட்டுக்கு செல்லும் எமிலி, அதிர்ந்துப் போகிறார். லில்லித்தை கொலை செய்ய அவளது பெற்றோரே முயற்சி செய்கிறார்கள். சட்டென சிறுமியைக் காப்பாற்றி காப்பகத்தில் சேர்க்கிறாள். ஆனால், 'உங்களுடனேயே வாழ்கிறேன்' என லில்லித் சொன்னதும் இரக்கப்பட்டு தன்னுடன் அழைத்து வருகிறாள் எமிலி. அதன் பிறகுதான் அனைத்துமே தலைகீழாகின்றன.

எமிலியின் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுவன், தன் பெற்றோரை கொலை செய்கிறான். காரணம், அச்சிறுவனுக்கு வந்த ஒரு ஃபோன் கால். அச்சிறுவனை தொடர்பு கொண்டு பேசியதுடன் கொலை செய்யும்படியும் தூண்டியது வேறு யாருமில்லை, லில்லித்தான். பயந்துபோன எமிலி, துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுகிறாள். அதேநேரம், லில்லித்தின் பெற்றோரை சந்திக்கிறாள். லில்லித், சாத்தானின் வடிவம். அனைவரது சிந்தனைக்குள்ளும் ஊடுருவி கொலை செய்யும்படி தூண்டுவது அவளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எனவேதான் அவளை கொலை செய்ய முயன்றோம் என்கிறார்கள். நம்புவதா வேண்டாமா என குழப்பத்துடன் எமிலி தன் வீட்டுக்கு வருகிறாள். அதற்குள், லில்லித்தின் பெற்றோர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.

எமிலியும், துப்பறியும் நிபுணரும் இணைந்து எப்படி லில்லித்தை எதிர்கொள்கிறார்கள்... உண்மையில் லில்லித் யார் என்பதுதான் படம்.

எமிலியாக நடித்திருப்பவர் ரெனே செல்வேகர். அமெரிக்க நடிகையான இவர், ஒரு தயாரிப்பாளரும் கூட. 3 முறை கோல்டன் க்ளோப் விருது வாங்கியிருக்கும் இவரை சென்ற ஆண்டின் முக்கியமான பெண்மணி என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை தேர்ந்தெடுக்கிறது. 'சைலன்ட் ஹில்' ஹாரர் படத்தின் வழியே ரசிகர்களை பயமுறுத்திய ஜோடெல்லி ஃபெர்லான்ட், இப்படத்தில் லில்லித்தாக நடித்திருக்கிறாள். 'ஆண்டி பாடிஸ்' படத்தை இயக்கிய கிறிஸ்டியின் ஆல்வர்ட், இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

இளகிய மனம் படைத்தவர்கள், 'கேஸ் 39' படத்தை பார்க்காமல் இருப்பது அவர்களது இதயத்துக்கு நல்லது.

கே.என்.சிவராமன்                                            

No comments: