Friday, September 17, 2010

சென்னை பல்கலைக்கழகத்திற்கு பழைய மாணவர் ரூ.18 கோடி நன்கொடை

இறந்த பிறகு தனது சொத்தில் பாதித்தொகையை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருந்த அமெரிக்க டாக்டரின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

அவர் விரும்பியவாறே சொத்தில் பாதித்தொகை ரூ.18 கோடி சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. ரேடியாலஜி படித்த தமிழக மாணவர் ராஜசேகர் ஷாம். படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் கதிர்வீச்சு பிரிவு டாக்டராக பணியாற்றி வந்தார். தனது மனைவி லூசில்லாவுடன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இவரது மனைவி புற்றுநோயால் இறந்து போனார்.

கடந்த 2008-ம் ஆண்டு ராஜசேகர் ஷாம் (வயது 68) மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது ஓர் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், தான் இறந்தபிறகு தனது சொத்தில் பாதியை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கும் எஞ்சிய பாதியை அமெரிக்காவில் உள்ள 'நேச்சர் கன்செர்விங் சவுத் போல்க்' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த உயிலை நிறைவேற்றுவதற்காக தாமஸ் ஆஸ்போன் என்பவர் நியமிக்கப்பட்டு ஷாமின் சொத்தை விற்று மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டது.

மறைந்த ஷாமின் விருப்பப்படி பாதித்தொகை ரூ.18 கோடி நன்கொடையாக அமெரிக்க தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மீதி பாதித்தொகையான ரூ.18 கோடி சென்னை பல்கலைக்கழகத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியை யுனிவர்சல் லீகல் என்ற சட்ட நிறுவனம் மேற்கொண்டது. அமெரிக்க விதிமுறைப்படி, அந்த நிதியில் 50 சதவீதம், அதாவது ரூ.9 கோடியை வரியாக செலுத்த வேண்டியது இருந்தது.

யுனிவர்சல் லீகல் நிறுவனத்தினரும், சென்னை பல்கலைக்கழக சட்டப்பிரிவு அதிகாரிகளும், பல்கலைக்கழகம் லாபநோக்கு இல்லாத ஒரு கல்வி நிறுவனம் என்பதை அமெரிக்க அரசிடம் எடுத்துச்சொல்லி வரிச்சலுகை பெற்றனர். இதைத்தொடர்ந்து, வரிப்பிடித்தம் எதுவும் இல்லாமல் ஷாம் சொத்தின் பாதித்தொகையான ரூ.18 கோடி முழுவதும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது.

இந்த நன்கொடையின் கடைசி தவணைத்தொகை துணைவேந்தர் ஜி.திருவாசகத்திடம் நேற்று வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சென்னை யுனிவர்சல் லீகல் நிறுவன அதிகாரிகள் சமீனா சத்ரபதி, கவிதா விஜய் ஆகியோர் வழங்கினர். அப்போது பல்கலைக்கழக சர்வதேச மாணவர் நலன் நிறுவன இயக்குனர் சித்ரா கிருஷ்ணா உடனிருந்தார். பழைய மாணவரின் நன்கொடை நிதியை பெற்றுக் கொண்ட துணைவேந்தர் திருவாசகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த பழைய மாணவர் ராஜசேகர் ஷாம் மூலமாக கிடைத்த நன்கொடை ரூ.18 கோடி நிதியானது, தனியாக ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு அதில் டெபாசிட் செய்யப்படும். இந்த நிதியை பல்கலைக்கழக மாணவர்கள் நலனுக்காக செலவிட முடிவுசெய்துள்ளோம்.

சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் (சேக்கிழார் வளாகம்) வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை மாணவர்கள் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியாக தங்குவதற்கு வசதியாக ரூ.11 கோடியில் விடுதிகள் கட்டப்படும். இதன்மூலம் 1400 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

எஞ்சிய ரூ.4 கோடி, பல்கலைக்கழக சேத்துப்பட்டு வளாகத்தில் (பாரதியார் வளாகம்) உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். புதிய விடுதிகளும், உள்விளையாட்டு மைதானமும் ராஜசேகர் ஷாம் பெயரில் கட்டப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.


No comments: