Saturday, August 28, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

நியாயமாகப் பார்த்தால் ‘திருடர்கள் போலீஸ்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். ஒரு வசதிக்காகத்தான் தலைப்பை ஒருமையில் வைத்திருக்கிறோம். இதற்காக இயக்குநர் ஜான் லூசன்ஹாப்இ தலையில் குட்டமாட்டார் என நம்பு வோமாக.அரைடிராயருடன் தெருவில் விளையாட ஆரம்பிக்கும் அனைவருமே திருடன் - போலீஸ் விளையாட்டு வழியேதான் வளரவே ஆரம்பிக்கிறார்கள்.

அவரவரின் புத்திசாலித்தனங்கள் பரிணாம வளர்ச்சி அடைவதும் சுவாரஸ்யமான இதுபோன்ற விளையாட்டுகளால் தான். அதனால்தான் இன்றைய வீடியோ கேம்ஸின் மையப் பொருளாகவும் இந்த ஆடு புலி ஆட்டம் இருக்கிறது. விஸ்தாரமாக திருடர்களின் பராக்கிரமங்கள் - புத்திசாலித்தனங்கள் ஆகியவற்றை விளக்கிவிட்டுஇ இப்படிப்பட்ட திருடர்களை போலீஸ் எப்படி பிடிக்கப் போகிறது என கொக்கி வைப்பது துப்பறியும் நாவல்களின் அரிச்சுவடி.

இந்த அரிச்சுவடியில் பிஎச்டி பட்டம் வாங்கியவர் என ஜெனே ப்ரூவரை சொல்லலாம். 1937ம் ஆண்டில் பிறந்த இவரது கேஃபேக்ஸ் நாவல் வரிசைகளை வாசிக்காதவர்கள், துப்பறியும் நாவல்களின் சுவையை முழுமையாக சுவைக்காதவர்கள் என்று சொல்லலாம். அந்தளவுக்கு பொடி வைத்து கரம் மசாலா கலந்து எழுதுவதில் மனிதர் சமர்த்தர். இப்போது நியூயார்க்கில் கலப்பின நாயை வளர்த்தபடி தன் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து வரும் இவரிடமிருந்து அனுமதி பெற்று இவரது ஒரு நாவலை ஹாலிவுட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.
அதுதான் ‘டேக்கர்ஸ்’ (Takers). மொத்தம் ஐந்து திருடர்கள். வங்கிகளை குறி வைத்து, நாள் நட்சத்திரம் பார்த்து கூட்டாக  கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரர்கள். எந்த டெக்னாலஜியை கொண்டு எந்த புத்திசாலி வந்தாலும் யார் கொள்ளையடித்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. குண்டூசி முனையளவுக்குக் கூட துப்பு கிடைக்காது. அந்தளவுக்கு இந்தத் திருடர்களின் தொழில் சுத்தமாக இருக்கும்.

எல்லாம் சரி, இப்படி மாதச் செலவுக்காக அவ்வப்போது திருடுவதைவிட, மொத்தமாக வாழ்நாள் செலவுக்கு கொள்ளையடித்துவிட்டு செட்டிலானால் என்ன? இந்த யோசனை ஐவருக்குமே பிடித்திருக்கிறது. லிஸ்ட் எடுத்து எந்த வங்கி இதற்கு சரிவரும் என்று ‘செல்ஃப் ஆடிட்டிங்’ செய்து ஒரு வங்கியை டிக் அடிக்கிறார்கள். அப்போதுதான் அந்த நபர் குறிக்கிடுகிறார். துப்பறியும் நிபுணரான அவர், இவர்களது கடைசி  கொள்ளையின் போது இவர்களை கையும் களவுமாக பிடிக்க முயற்சிக்கிறார்.

ஒரு துப்பும் அவருக்கு வழங்கக் கூடாது என ஐவரும் திட்டமிடுகிறார்கள். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஜெயித்தது? கொள்ளையர்களை எப்படி அவர் பிடிக்கிறார்  என்பதுதான் ‘டேக்கர்ஸ்’.தடிமனான நாவலை எடுத்துக் கொண்டு அப்படியே படப்பிடிப்புக்கு ஜான் லூசன்ஹாப் செல்லவில்லை. கேப்ரியல் கேசஸ், பீட்டர் ஆலன், ஜான் ரோகர்ஸ் என மூவரணி உட்கார்ந்து பேசி, விவாதித்து நாவலிலிருந்து கதையை உருவாக்க...

பீட்டர் ஆலன், கேப்ரியல் கேசஸ், ஆவ்ரி டஃப் மற்றும் ஜான் லூசன்ஹாப் என நால்வரணி இன்ச் பை இன்ச்சாக திரைக்கதையை எழுதியிருக்கிறது. எல்லாம் பக்காவாக அமைந்த பின்னரே ஜான் லூசன்ஹாப் ஷூட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார். மிக்கேல் இயலி, க்ரிஸ் பிரவுன், ஹெய்டன் க்ரிஸ்டன்சன், பால் வாக்கர் மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் பஞ்ச கொள்ளையர்களாக நடிக்க, இவர்களை பிடிக்கும் துப்பறியும் நிபுணராக வருகிறார் மேட் டிலோன்.

‘அவதார்’ படத்தில் நம்மை வசீகரித்த ஜோ ஜல்தானா, இப்படத்தில் நம் மனதை திருட வருகிறார். புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகளை ரசிக்கும் மக்களை குறி வைத்து உலகெங்கும் ‘டேக்கர்ஸ்’ நேற்று ரிலீசாகியது. படம், ‘டேக் ஆஃப்’ ஆகுமா? நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார் இயக்குநர் ஜான் லூசன்ஹாப்.

கே.என்.சிவராமன் 

No comments: