Thursday, August 26, 2010

பத்திரிக்கைச் செய்திகள்

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் கொழும்பு செல்ல இருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறு வாழ்வு குறித்து, பாராளுமன்ற மக்களவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அவர் கூறியதாவது:-

"இதுவரை இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்ததா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

போர் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையிலும், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, முகாம்களில் உள்ள தமிழர்களை துன்புறுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில், கடந்த 1987-ம் ஆண்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கையில், தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை அளிக்கப்படாமல், இரண்டாம் கட்ட மக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ராஜபக்சே, இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறார். 52 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.''

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.


இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை அறிந்து வருவதற்காக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் மற்ற கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பேசும்போது, இலங்கைக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் குறித்து ஐ.நா. அமைப்பின் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கைக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கருதுகிறேன்.

ஏற்கனவே இலங்கை சென்ற தமிழக எம்.பி.க்கள் குழுவில் மற்ற கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இலங்கைக்குச் சென்று நிலைமைகளை பார்வையிடலாம்.

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத இறுதியில் நானே நேரில் சென்று தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட இருக்கிறேன். அதற்கு முன்பாக வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் டெல்லி வந்தபோது, தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தி இருந்தார்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவுக்கு உட்பட்டு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது பிரதமர் கேட்டுக்கொண்டார். அகதிகள் முகாம்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், இலங்கையின் வடக்குப்பகுதியில் ரெயில்வே கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்கிய ரூ.80 கோடி கடன் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியா சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்வே திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்.''

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

No comments: