Friday, August 20, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

இடப்பக்கமோ, வலப்பக்கமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். அப்படியொரு படம் வருமா... என காமெடி ஜுகல்பந்திக்கு ஆசைப்படும் நபராக நீங்கள் இருந்தால்...

'தி ஸ்விட்ச்'
ஹாலிவுட் திரைப்படம் உங்களுக்கானதுதான்.

'விந்து தானம்' தான் இப்படத்தின் அடிநாதம். அதை நகைச்சுவை கொத்து பரோட்டாவாக மசாலா கலந்து பரிமாறியிருக்கிரார்கள்.

கெஸி சிங்கிள்டனுக்கு வயது 40. இன்னமும் திருமணமாகவில்லை. ஒண்டிக்கட்டை. ஆணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதிலோ, குழந்தையை பெற்றுக் கொள்வதிலோ அவளுக்கு உடன்பாடில்லை. கெஸியை உயிருக்கு காதலிக்கிறான் வெலி. ஆனால், அவனை, நண்பனாக மட்டுமே கெஸி கருதுகிறாள். இந்நிலையில்தான் கெஸியின் அடிமனதில் பூத்த ஆசை, விருட்சமாக வளர்கிறது. வேறொன்றுமில்லை. தான் தாயாக வேண்டுமென விரும்புகிறாள். ஆனால், திருமணம் செய்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. எனவே விந்து தானம் மூலம் கற்பமாக முடிவு செய்கிறாள். இதை முடிந்தளவு தடுக்கப் பார்க்கிறாள் வெலி. ம்ஹூம், நண்பனின் பேச்சைக் கேட்க கெஸி தயாராக இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் அவள் ரொலாண்ட்டை சந்திக்கிறாள். தனது உயிரணுக்களைதானம் செய்வதையே முழு நேர தொழிலாகக் கொண்ட ரோலான்ட், தனது விந்தை கெஸிக்கு தானமாக வழங்க ஒப்புக் கொள்கிறான். இந்த சந்தோஷமான செய்தியை நண்பர்களுக்கு தெரிவிக்கும் விதமாக கெஸி, பார்ட்டி வைக்கிறாள். அந்தப் பார்ட்டியில் வெலியும் கலந்துக் கொள்கிறான். ஆனால், தவறுதலாக அல்லது வேண்டுமென்றே அல்லது விபத்தாக ரோலாண்ட்டின் உயிரணுக்களுக்குப் பதில், தனது விந்தை குடுவையில் வைத்து விடுகிறான்.

ஏழாண்டுகள் உருண்டோடுகிறது. கெஸி எங்கு சென்றால் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு பொன் மாலைப் பொழுதில் அவளை மகனுடன் சந்திக்கிறான் வெலி. அவனுக்கு மட்டுமே தெரியும்,கெஸியின் கர்ப் பத்திலிருந்து பிறந்தவன் தன் மகன் என்று. ஆனால், ரோலாண்ட்தான் தன் மகனின் அப்பா என கெஸி நம்புகிறாள்.

மெல்ல மெல்ல அச்சிறுவனுடன் நட்பாகிறான் வெலி. மகன் மூலமாக கெஸியின் காதலை அடையலாம் என்பது அவன் திட்டம். பழம் பழுத்து கீழே விழும் நிலையில் ரோலாண்ட் திடீரென்று வருகிறான். தான்தான் அச்சிறுவனின் தந்தை என உரிமை கொண்டாடுகிறான்.
முடிவு என்ன என்பது இன்று (ஆகஸ்ட் 20 ) தெரியும். உலகெங்கும் 'தி ஸ்விட்ச்' ரிலீஸாவது இன்றுதான்.

புலிஸ்டர் விருது பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜெஃப்ரி யூஜினிடெஸ் எழுதிய 'பேஸ்டர்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கான திரைக்கதையை ஆலன் லோப் எழுதியிருக்கிறார். 'ப்லேட்ஸ் ஆஃப் க்ளோரி' புகழ் இரட்டையர்களான ஜோஷ் கார்டன் - வில் ஸ்பீக் இப்படத்தை இயக்கியிர்க்கிரார்கள்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் பூசணி சுற்றி ஷூட்டிங்கை முடித்துவிட்டார்கள். ஆனால், படத்தை போட்டுப் பார்த்த ஜெனிஃபர் ஆனிஸ்டனுக்கு திருப்தியில்லை. இன்னும் இன்னும் காமெடி வேண்டும். ஸோ ரீ ஷூட். எனவே சென்ற அக்டோபரில் திரும்பவும் காமிராவும் கையுமாக படப்பிடிப்புக்கு சென்றார்கள். இரண்டாவது முறையாக பூசணியை உடைத்தார்கள். நவரசங்களும் சரி விகிதத்தில் வந்ததும் ஜெனிஃபருக்கு பரம திருப்தி.

இப்படத்தை தயாரித்திருக்கும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே, கெஸியாகவும் நடித்திருக்கிறார். வெலியாக வாழ்ந்திருப்பவர் ஜெசன் பேட்மேன்.

வாங்க, நோய்விட்டு போக சிரித்துவிட்டு வரலாம்.

கே.என்.சிவராமன்                    

2 comments:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

கண்டிப்பாக...

Maduraimohan said...

நல்ல விமர்சனம் :)