Friday, August 13, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

'ரெட்' - RED தலைப்பையும், இங்கு அச்சாகியிருக்கும் போஸ்டரையும் பார்த்துவிட்டு, 'சிவப்பு' என நேரடியாக அர்த்தம் கொள்கிறீர்களா? ஃப்ளைட் பிடித்து வந்து ப்ரூஸ் வில்லிஸ் உங்களை அடிப்பார்!

Retired Extremely Dangerous என்பதன் சுருக்கம்தான் 'ரெட்'. அதாவது 'ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர்'.

சரியாக சொல்வதென்றால் சென்ற ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, வாரன் எல்லிஸ் தனது வலைத்தளத்தில் (பிளாக்ஸ்பாட்) அச்செய்தியை பகிர்ந்து கொண்டார். 'ரெட்' என்ற தனது காமிக்ஸ் கதை, ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது.... அவ்வளவுதான். படித்தவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தங்கள் பால்ய காலத்தில் விழுந்து விழுந்து அவர்கள் படித்த, ரசித்த ஒரு காமிக்ஸ் கதை, அகண்ட திரையில் நவீன தொழில்நுட்பத்துடன் உயிர் பெற்று எழப்போகிறது என்ற செய்தி, அவர்களின் வயதை மடமடவென்று உதிர்த்தது. அனைவரையும் தங்களின் அரை டவுசர் நாட்களுக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், 66 பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் கதையை திரைப்படமாக்கினால் 40 நிமிடங்கள்தான் படம் ஓடும். இது போதாதே? எனவே ஜோன், எரிக் ஹோபர் ஆகிய திரைக்கதையாசிரியர்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார்கள். 90 நிமிடங்கள் அடங்கிய கதையாக அதை மாற்றினார்கள். 'தி டைம் டிராவலர்ஸ் வைஃப், 'தி ஃபேமிலி ஜுவல்ஸ்' ஆகிய படங்களின் இயக்குனரான ராபர்ட் ஷ்வன்கியிடம் திரைக்கதையை ஒப்படைத்தார்கள். சூட்கேஸ் நிறைய டாலருடன் வந்த லோரன்ஸோ டி பொனவென்சுரா, படத்தின் தயாரிப்பாளரானார்.

இது முன்கதை, திரையின் கதை?

சாரா என்னும் பெண்ணை பாதுகாத்தபடி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ப்ராங்க் மோசஸ். ஓய்வு பெற்ற சிஐஏ எஜென்ட்டான இவரது வாழ்க்கை, உண்டு, உறங்கி, டிவி பார்த்து, பேப்பர் படித்து, தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி, நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்று... என நிம்மதியாக கழிகிறது.

இப்படியொரு வாழ்க்கையை தனக்கு தந்த இறைவனுக்கு பிரான்க் மோசஸ் நன்றி சொல்லும் தருணத்தில் டமால்... தன்னை படுகொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள் என்பதை அறிகிறார். திடுக்கிடுகிடுகிறார். அடையாளமற்ற, முகவரியில்லாத ஒரு குழு இக்காரியத்தில் இறங்கியிருக்கிறது. யார் அவர்கள்? எதற்காக இப்படி தன்னை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டும்?

இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டறிய என்ன செய்யலாம்? யோசித்த பிரான்க் மோசஸுக்கு பளிச்சென்று தனது குழுவின் நினைவு வருகிறது. பனிப்போர் காலத்தில் ரஷயர்களுக்கு எதிரான போராட்டத்தில், தன்னுடன் இணைந்து பங்கேற்ற முன்னாள் சிஐஏ எஜென்ட்டுகளை ஒன்று திரட்டி இந்த ஆபரேஷனில் இறங்குகிறார்.

தொடர் ஆடு - புலி ஆட்டத்தில், அந்த விபரீதம் அவரை சுனாமியாக தாக்குகிறது. தன்னை படுகொலை செய்ய முயற்சித்தான் வழியே, ஓய்வு பெற்று அக்கடா என்று இருந்த அனைத்து முன்னாள் சிஐஏ ஏஜென்ட்டுகளையும் மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள். காரணம்? இந்த எக்ஸ் சிஐஏ ஏஜெண்ட்டுகளுக்கு தெரிந்த ஒரு ரகசியம். அந்த ரகசியத்தை கண்டறிய எதிரிகள் முயற்சிக்கிறார்களா... அல்லது அந்த ரகசியம் அறிந்த அனைவரையும் படுகொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்களா... இதற்கெல்லாம் சூத்திரதாரி யார்? ஒருவேளை இப்போதைய சிஐஏவில் இருக்கும் உயரதிகாரிகளில் ஒருவரா...?

அடுக்கடுக்காக எழும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சிடுக்கில்லாமல் அடுத்த மாதம் வாய் விட்டு சிரித்தும், ஆக்ஷன் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்த்தும் தெரிந்து கொள்ளலாம். யெஸ், இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி காக்டெயில். ப்ரூஸ் வில்லிஸ், மோர்கன்  ஃப்ரீமேன், ஹெலன் மிர்ரன், ஜான் மால்கோவிக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

நடித்திருப்பர்களின் லிஸ்ட்டை பார்த்ததும் புரிந்திருக்குமே, ஓய்வுபெற்றறவர் மிகவும் அபாயமானவர் என்று!                                

1 comment:

Maduraimohan said...

நல்லா இருக்கு நண்பா
படம் நல்லா இருக்கானு அடுத்த மாசம் பாப்போம் :)