Saturday, August 7, 2010

வெற்றி தரும் வித்தியாசமான சிந்தனை!

பாரதி...

கூட்டுக்குள் கிடந்து துடித்த தேசப் பறவைக்காகக் குரல் கொடுத்த பாட்டுப் பறவைதான் பாரதி. அவன், கண்கள் என்னும் தீப்பந்தத்தில் கருணை விளக்கேற்றிய கவி நெருப்பு. எளிமை கண்டு இரங்கிய ஏந்தல். சிறுமை கண்டு சீறிய சிறுத்தை.

எழுதுகோல் பலரின் கைகளில் மயிலிறகாய் இருந்தது. பாரதியின் கைகளில் மட்டும்தான் அது துப்பாக்கி முனையாக எதிரிகளைத் துளைத்தது.

அவன் பேனா மகுடம் கழற்றிய போதெல்லாம் ஆங்கிலேயரின் கிரீடம் ஆட்டம் கண்டது.

தங்க மணிமகுடங்களைத் தமிழுக்குத் தந்தான். ஒரு சாதாரணத் தலைப்பாகையை தன் தலையில் கட்டிக் கொண்டான். அந்த முண்டாசுக் கவிஞன்தான் முடங்கிக் கிடந்த தமிழ்ச் சொற்களுக்கு புதிய இரத்த ஓட்டம் தந்தவன்.

இனிய இளைஞர்களே!

இந்தக் கவிஞன்தான் உங்களுக்காகவே 'அச்சம்தவிர், உடலினை உறுதி செய், ஓய்தல் ஒழி, குன்றென நிமிர்ந்து நில், வெடிப்புறப்பேசு, வேதம் புதுமை செய், புதியன விரும்பு' என்று புதிய ஆத்திசூடியில் புதுமைகளைச் சொன்னவன்.

புதியன விரும்பு. அவன் விரும்பிய அந்தப் புதுமையின் கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. 'அது அந்தக் காலம்'... 'காலம் மாறிப்போச்சு'... இந்த வார்த்தைகளை இன்று அடிக்கடி கேட்க முடிகிறது. காரணம் உலகெங்கும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மாறுதல் என்றால் பழைய நிலை மாறிப் புதுநிலை வருவதுதானே! அந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய பாதையில் செல்வதற்குத் தயாராக வேண்டும். குறிப்பாக மாணவர்கள் சூழ்நிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்றார் போல் வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு மாற்றத்தில் உள்ள நல்ல வாய்ப்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
 
அவ்வப்போது உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன புதிய ஆற்றல்களும், செயல்திறன்களும் தேவைப்படும் என கேட்டுப் பாருங்கள். புதிய ஆற்றல்களையும், வித்தியாசமான சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்பவர்களே நாளைய உலகின் வெற்றியாளர்கள்.

'வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்' என்பார் தன்னம்பிக்கை எழுத்தாளர் சிவ் கெரோ.

இளைஞர்களே! இந்தச் சமூகம் உங்களை ஓர் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. கிராமங்களிலே பெரியவர்கள் சொல்வார்கள், 'இடித்தபுளி மாதிரி உட்கார்ந்திருக்கிறான்' என்று. அந்த இடித்த புளி மாதிரி இருந்த இடத்திலேயே இருந்து விடாதீர்கள். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான தகுதியை நீங்களேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் தோரணைகளையும், செயல்களையும் பளீர் பளீரென மாற்றிக் கொள்ளுங்கள். அந்த மாறுதலுக்கான வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். அப்போது உங்கள் சக்தி உயரும். உங்கள் மீது புதிய பார்வைகள் படியும்.

நான் படித்த அராபியக் கதை ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது. சலவைத் தொழிலாளி ஒருவனிடம் ஒரு கழுதை இருந்தது. அது பல வருடங்களாகச் சுமையைச் சுமந்து கால்கள் நடுங்குமளவு நோவுற்றிருந்தது. முன்பு போல அது தன் வேலைக்கு உதவுவதில்லை என அவன் அந்தக் கழுதைக்குத் தீனி போடாமல் எப்போதும் அடித்துக் கொண்டே இருந்தான்.

ஒருநாள் நள்ளிரவு அந்தக் கழுதை இனி தன் எஜமானன் தேவையில்லை என்று வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கியது. தெருமுனைக்கு வந்த போது எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. இதுநாள் வரை எஜமானன் கூட்டிச் சென்ற பாதையில் அது நடந்து சென்றிருக்கிறது. சாலைகள் பற்றியோ, வழியிலிருந்த கட்டிடங்கள், மரங்கள், நீருற்றுகள் போன்ற எதைப் பற்றியுமோ அது கவனம் கொண்டதே இல்லை. தனது கவனம் முழுவதும் சுமை மீது மட்டுமே இருந்தது என்று அதற்குப் புரிந்தது.

'ஐயோ! இத்தனை வருசம் இதே ஊரில் வாழ்ந்தும் எந்தத் தெரு எங்கே போகிறது எனத் தெரியவில்லையே?' என்று நொந்தபடியே நடந்தது. இருட்டில் வழியில் இருந்த கிணறு தெரியாமல் அதற்குள் விழுந்து விட்டது. வெளியே வரமுடியாமல் இரவெல்லாம் கத்தியது.

மறுநாள் காலை சலவைத் தொழிலாளி தன் கழுதையைத் தேடி கிணற்றுக்கு வந்து சேர்ந்தான். `இனிமேல் இந்தக் கழுதையால் பிரயோஜனமில்லை, கிணற்றை அப்படியே மண்ணைப்போட்டு மூடி விடுங்கள்' என்று சொன்னான்.

உடனே ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அங்கிருந்த மண்ணைக் கிணற்றுக்குள் தள்ளத் துவங்கினார்கள். தன் மீது புழுதியும், மண்ணும் சேர்ந்து விழுவதைக் கண்ட கழுதை முதலில் கோபம் கொண்டாலும் பிறகு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. சட்டென அது தன் கால்களை உதறத் துவங்கியது. மண்ணைப் போடப் போட கழுதை உடலை அசைத்தபடியே மேலே வரத் துவங்கியது. ஒரு நிலையில் கழுதை கிணற்றை விட்டு வெளியே வந்து விட்டது.

மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபோது, 'நம் மீது வீசப்படும் கல்லையும், மண்ணையும், புழுதியையும் கண்டு நாம் பயந்தால் வாழ்க்கை முடிந்து விடும். அதைப் பயன்படுத்தியே மேலே செல்ல முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்து கொண்டேன்' என்றது கழுதை.

இப்படித்தான் வாழ்க்கை பல விதங்களில் ஓடிப் புழுதியையும், மண்ணையும் நம் மீதும் வாரி இறைக்கும். நாம் ஒவ்வொரு முறையும் அதை உதறி அதனையே படியாக்கி மேலே ஏறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுதான் புதிய அணுகுமுறைகளுக்குக் கிடைக்கும் வெற்றி.

வாழ்க்கை என்பது அழித்து அழித்து வரையும் ஓர் அழகிய சித்திரம். ஒவ்வோர் அழிப்பிலும் ஓர் உதயம் நிகழும். இத்தகைய புதிய முயற்சிகளைச் செய்யவில்லை என்றால் பல நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம். தீர யோசித்துப் புதிய சிந்தனைகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை அந்தச் சிந்தனையின் செயற்பாட்டில் தோல்வி ஏற்பட்டால் அதையே படிப்பினையாக ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.
 
மாற்றத்தை எதிர் கொள்ளும் திறமை நமது மனப்பான்மையைப் பொறுத்ததுதான். பாதி அளவு நீர் உள்ள பாத்திரத்தை பாதிக்கு மேல் காலி என்று பார்க்கலாம். இன்னொரு வகையில் பாதி நிரம்பியிருக்கிறது என்றும் பார்க்கலாம். அனைத்திற்கும் மனம்தான் காரணம்.

ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தால் அதுவே வசதியாக இருக்கிறது, சிரமப்படத் தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறான அணுகு முறையாகும். ஒரே மாதிரியாக இருப்பவர்கள் எப்போதும் கீழ்த்தட்டிலேயேதான் இருப்பார்கள்.

அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், 'இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன்' என்றார்.

ஆம் இளைஞர்களே! நீங்களும் அறிவுச்சுரங்கத்தின் புதிய கதவுகளைத் திறந்திடுங்கள். அதன் வழி புதிய சிந்தனைகளைப் புகுத்துங்கள். வித்தியாசமான சிந்தனை வெற்றிகளைத் தரும்.

பேராசிரியர் க.ராமச்சந்திரன்

4 comments:

க.பார்த்திபன் said...

வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும்
ஒவ்வொரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பல முக்கிய தத்துவங்கள் நிறைந்த "வெற்றி தரும் வித்தியாசமான சிந்தனை!"--தான்.

(உளறுவாயன் + தத்துவவாயன் =வெற்றி)சும்மா.

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

Maduraimohan said...

நல்ல பதிவு :)

Anonymous said...

தத்துவ சிந்தனைகள் : வெற்றியின் இரகசியம்