Friday, August 6, 2010

ஹாலிவுட் டிரெய்லர்


குத்துமதிப்பாக ஆண்டுக்கு 300 வங்கிக் கொள்ளைகள் பாஸ்டன் நகரில் நிகழ்கின்றன. இக்காரியத்தை செய்பவர்கள் அனைவருமே கொள்ளையடிப்பதில் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள். இந்தக் கொள்ளையர்கள் அனைவரும் குழு குழுவாக வாழ்வது, வசிப்பது சார்லஸ் டவுனில். ரூம் போட்டு பக்காவாக திட்டம் தீட்டி வங்கியை கொள்ளையடிப்பார்கள். அடித்தப் பணத்தை தங்கள் குழுவுக்குள் நயா பைசா பாக்கியில்லாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்னர் தலைமறைவாகிவிடுவார்கள். பணம் தீர்ந்ததும் மீண்டும் திட்டம். திரும்பவும் கொள்ளை. இதுதான் சார்லஸ் டவுனில் வசிக்கும் கொள்ளை குழுக்களின் ஃபார்முலா.

இப்படியான குழுக்களின் டக் மேக்ரே குழுவும் ஒன்று. இந்தக் குழுவுக்கு அவன்தான் தலைவன். பிறவித் திருடனான டக்மேக்ரே தன் தந்தையிடமிருந்து கசடற கற்றது கற்றது அன்பை மட்டுமல்ல; கொள்ளையையும்தான். அதனால்தான் நிற்க அதற்குத் தக என வாழ்கிறான். வழிப்பறியை விட, வங்கிகளை குறி வைத்து கொள்ளையடிப்பது அவனுக்கு பிடிக்கும். பிடித்ததை செய்வது நிரம்பவும் பிடித்திருப்பதால், பிடித்ததையே பிடித்தபடி செய்து வருகிறான்.

அவனது தளபதி என ஜெம்மை சொல்லலாம். இருவரும் ஓருயிர். இரு உடல். லாலிபாப் சாப்பிட ஆரம்பித்தது முதல் இருவருக்கும் பழக்கம். நட்பு. அது வாலிப வயதிலும் தொடர்கிறது. ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்ததில்லை. பிரிவை குறித்து யோசித்ததுமில்லை. ஆனால், குணத்தில் வட துருவம், தென் துருவம். டக் மேக்ரே நல்லவன். கொள்ளை மட்டுமே அடிப்பான். ஜெம், கொலையும் செய்வான்.


ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் டக் மேக்ரேவின் தலைமையிலான குழு, வழக்கம்போல் வங்கி ஒன்றை கொள்ளையடிக்கிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அந்த வங்கியின் மேலாளர் க்ளாரி கேஸ்ஸியை கடத்தி வந்து சித்ரவதை செய்கிறார்கள். அழகுக்கு இலக்கணம் சொல்லும் க்ளாரியை ஒரு கட்டத்தில் விடுவிக்கிறார்கள்.

ஆனால், க்ளாரிக்கு சின்னதாக சந்தேகம். தனது இருப்பிடம், முகவரி அனைத்தும் தன்னை கடத்தியவருக்கு தெரியும். எனவே திரும்பவும் தன்னை கடத்தி சித்ரவதை செய்தால்? எனவே பாதுகாப்புக்கு பாடி கார்டை ஏற்பாடு செய்கிறாள். தேவர்கள் ஆசிர்வதித்த தருணத்தில் டக் மேக்ரேவும் க்ளாரியும் சந்திக்கிறார்கள். காதல் வசப்படுகிறார்கள். க்ளாரிக்கு தெரியாது தன்னை கடத்திய கும்பலின் தலைவன் டக் மேக்ரே என்று. ஆனால், டக் மேக்ரேவுக்கு தெரியும் க்ளாரி யாரென்று.

இந்த ஆடுபுலி ஆட்டத்தில் காதல் வெல்கிறது. தனக்கு பிடித்தமான கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட டக் மேக்ரே முடிவு செய்கிறான். ஆனால், ஜெம் அதை தடுக்கிறான். மீண்டும் கொள்ளையடிக்க வரும்படி அவனை வற்புறுத்துகிறான். அத்துடன், க்ளாரியை கொலை செய்யவும் ஜெம் முயல்கிறான்.


தன் நண்பனின் முயற்சியிலிருந்து க்ளாரியை எப்படி டக் மேக்ரே காப்பாற்றுகிறான்? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? க்ளாரிக்கு தன் காதலன் குறித்த உண்மை தெரியுமா.... என்பதற்கெல்லாம் பதில், அடுத்த மாதம் தெரியும். யெஸ், 'தி டவுன்' (The Town) ஹாலிவுட் படம் உலகெங்கும் ரிலீஸாவது செப்டம்பர் மாதம்தான்.


'பேர்ல் ஹார்பர்' திரைப்படத்தில் நடித்த பென் ஆஃப்லக், இப்படத்தில் டக் மேக்ரேவாக நடித்திருக்கிறார். அத்துடன் இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவரும் இவரேதான். 'குட் வில் ஹன்டிங்' படத்துக்காக சிறந்த திரைக்கதையாசிரியருக்கான அகடமி விருதை வாங்கியிருக்கும் இவருக்கு பல முகங்கள் உண்டு. நடிப்பு, இயக்கம், கதாசிரியர், தயாரிப்பாளர் என கலந்துகட்டி முத்திரை பதித்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி வேறொரு விஷயத்துக்காக பென் ஆ ஃப்லக், புகழ் பெற்றவர். ஆமாம், ஹாலிவுட் தேவதை ஜெனிபர் லோபஸின் காதலர் இவரேதான்!

க்ளாரியாக நடித்திருப்பவர் ரிபெக்கா ஹால். இந்தாண்டு கோல்டன் க்ளோப் விருதுக்காக பரிந்துரைக்கபட்ட இவர், ஒரு ஸ்டேஜ் ஆர்டிஸ்ட்டும் கூட.

எச்சரிக்கை; வங்கிக் கொள்ளையர்கள், நம் மனதை கொள்ளையடிக்க அடுத்த மாதம் வருகிறார்கள்!

கே.என்.சிவராமன்
           
                                 

No comments: