Saturday, July 3, 2010

வாழ்க்கை வெளிச்சம்

'எது உலகில் அதிகம் புரிந்து கொள்ளாமல் போகிறது?'
உலகில் அதிகம் புரிந்துக் கொள்ளபடாமலே போவது திருமணமாகி பத்து வருடங்களான பிறகு பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே ஆகும். கணவன், குழந்தைகள், வீடு என்று இருந்த போதும் தான் எதையோ இழந்துவிட்டதை போலவும், தான் நினைத்தது போல வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது இல்லை என்று பெண்கள் உணரும் தருணம் உருவாகிறது.

அப்போது குழந்தைகளை கவனிப்பது, சமைப்பது, கணவனோடு படுக்கையை பகிர்வது உள்ளிட்ட யாவும் அனிச்சை செயல்களாகிவிடுகின்றன. மனது எதற்கோ ஏங்கத்  தொடங்குகிறது. அன்றாட வாழ்வு அபத்தமானதாகவும், அர்த்தமற்ற செயலொன்றினை தொடர்ந்து செய்து வருவதை போலவும் உணரத்துவங்குகிறது. இதை பற்றி யாரிடமும் பேசிக்கொள்வதும் இல்லை. தன்னை மீறி அந்த மன அவஸ்த்தைகளை வெளிபடுத்தும் போது கூட அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிடுகிறது.

உண்மையில் திருமணம் தரும் கிளர்ச்சிகளும், கனவுகளும் எளிதில் வடிந்துவிடக் கூடியவை. அதன் பிறகு நீளும் நடைமுறை வாழ்க்கையை உரசலில்லாமல் கொண்டு போவதற்கு சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும், வழியின்றி ஏற்றுக் கொள்ளுதலுமே சாத்தியங்களாக உள்ளன. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஒரு பெண் கணவன் குழந்தைகளுடன் பயணம் செய்வதை போலவே தன்னோடு படித்த தோழிகள் மற்றும் தனக்கு விருப்பமான தோழமையுடன் பயணம் செய்வதற்கு உள்ளூர ஆசைப்படுகிறாள். அது இயல்பானது. ஆனால் எளிய இந்த விருப்பும் ஒருபோதும் நிறைவேறுவதில்லை.

ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்செயலாக சந்தித்த கல்லூரி நண்பனுடன் சேர்ந்து குடிக்க செல்வதில் ஆண் காட்டும் விருப்பும், அவனது மனைவியோடு பள்ளி முழுதும் படித்த தோழியைத் தற்செயலாக மனைவி வழியில் சந்திக்கையில், அவளோடு சேர்ந்து ஒரு தேநீர் அருந்தக் கூட அனுமதிக்காத நிலைதான் இன்றுள்ளது. என்ன பேதமிது? எதற்காக இந்த ஒடுக்குமுறை? விலக்கல்? இரண்டாம் பட்ச மனபோக்கு?            

ஒரு பெண்ணின் கடந்த காலத்தை முற்றிலும் அழித்துவிட்டு அவளது நினைவுகள் முழுமையையும் கணவன், குடும்பம், பிள்ளைகள் என்று மட்டும் நிரப்புவது அடக்குமுறையில்லையா?

'போர் முனை' என்ற ஜெர்மானிய குறுநாவலில் ஒரு தாய். அவளுக்குத் தன் மகனை யுத்த முனைக்கு அனுப்ப விருப்பமில்லை. பதின் வயதில் இருக்கின்றான். இன்னும் உலகம் தெரியவில்லை. இவனைப் போருக்கு அனுப்ப முடியாதென்று தாய் மறுத்துவிடுகிறாள். ஆனால் தாய் இல்லாத நேரத்தில் தகப்பன் தன் மகனிடம் 'நீ யுத்தக் களத்தில் சண்டையிட்டு வீரனாக செத்துப் போ!' என்று அவனை ஒரு குதிரையில் ஏற்றி அனுப்புகிறாள். மகனைக் காணாமல் தேடுகிறாள் தாய். மகன் குதிரையில் ஏறிப்போனத்தை அறிந்து துரத்தி ஓடுகிறாள். புல்வெளியில் குதிரை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை துரத்தி ஆவேசத்துடன் ஓட்டுகிறாள்.

சரிவில் குதிரை இறங்கும்போது ஒரு கையால் குதிரையை பிடித்து நிறுத்தி மகனை தன்னோடு வரும்படி சொல்கிறாள். மகன் பயந்து விடுகிறான். தன் தாய் குதிரையை விட வேகமாக ஓடி வருவதை, ஒரு கையால் ஆவேசமாக குதிரையை பிடித்து நிருத்தியிருப்பதை கண்டு 'அம்மா ! உனக்குள் இவ்வளவு சக்தி இருக்கிறதா? உன்னை சமையல் அறையில் பார்த்த போது பூனை போல இருந்தாயே' என்று கேட்கிறான்.

'அப்பா என்னை அப்படி மாற்றி வைத்திருக்கிறார். உண்மையில் நான் தனியே குதிரை சவாரி செய்யவும், ஓடும் ஆற்றில் தனியே நீந்தவும் தெரிந்தவள். பதினைந்து வயதுவரை அப்படிதான் இருந்தேன். உன் அப்பாவை திருமணம் செய்து கொண்டபொழுது, இத்தனை வருஷங்களில் ஒரு நாள் கூட நான் நீந்துவதற்கு வெளியில் செல்லவோ தனியே குதிரை ஏறிப் போகவோ இயலவில்லை. என் பலம் எனக்கே மறந்து போயிருந்தது. இன்று உன்னை இழந்துவிடக் கூடாது என்ற ஆசையில் என் பலம் எனக்குள் பெருகி ஓடியது. என்னை நான் மறந்து போயிருந்ததை ஓடி வரும் நிமிடங்களில் உணர்ந்தேன்' என்கிறாள்.

இந்த உண்மை ஜெர்மானியப் பெண்ணுக்கு மட்டுமில்லை, பெரும்பான்மை இந்திய பெண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. நீச்சல் வீராங்கனையாக பரிசு வென்ற பெண், திருமணமானதும் அதை மறந்து வீட்டின் குளியலறைக்குள் அடைபட்டுவிடுகிறாள். கூடைப் பந்து ஆடத் தெரிந்த பெண் கல்யாணம் ஆன பிறகு பந்தை தொடக் கூட மறந்துவிடுகிறாள்.
                              
தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் நம்மை அடுத்த நூற்றாண்டை நோக்கி கொண்டு செல்லும் போது நம் கலாச்சார சமூகத்தடைகள் நூறு வருஷம் பிந்தைய மனபோக்கைதான் நமக்குள் வைத்திருக்கிறதா? இந்த கேள்விக்குத் தேவை பதில் இல்லை. புரிந்து கொள்வது மற்றும் நடைமுறை செயல்மாற்றங்களுமே தேவைப்படுகின்றன. அது ஒன்றே இதற்கான எளிய தீர்வு.  

எஸ்.ராமகிருஷ்ணன் 
நன்றி ஆ.வி

3 comments:

rk guru said...

உண்மையிலே பெண்களின் இன்னொரு வெளிச்சம்..அருமையான பதிவு...

A.சிவசங்கர் said...

வாசித்தேன் ரசித்தேன்

செந்தில்குமார் said...

நல்ல அனுபவ பதிவு
பெண்களின் மறுபக்கத்தை யாறும் பார்ப்பதில்லை....