Thursday, July 8, 2010

மரங்களின் ரவுடி

தனது சக மனிதர்களை அடித்து உதைத்து அவனிடம் இருக்கும் பொருட்களை பிடுங்கி, தான் மட்டும் சுகமாக வாழும் மனிதனை ரவுடி என்கிறோம். இந்த ரவுடி தன்னைத்தவிர வேறு யாரையும் தலையெடுக்க விடமாட்டான்.

மனிதர்களில் மட்டுமல்ல, தாவரங்களிலும் இப்படிப்பட்ட ரவுடிகள் உண்டு. இதுபோன்ற தாவரங்களைத் தப்பித்தவறிக் கூட வளர்த்துவிடாதீர்கள் என்கிறது அமெரிக்க தாவரவியல் பூங்கா. வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள் என்று தனிப்பட்டியலே வெளியிட்டுள்ளது. அதில் முன்னணியில் இருப்பது முள்மரம் எனப்படும் காட்டுக்கருவேல மரம் (வேலிக்காத்தான்).

ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சியை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், இந்த மரங்கள் அதிகமாக இருக்கின்றன. எந்த வறட்சியிலும் இந்த மரங்கள் வாடுவதில்லை. நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் நிலத்தடி நீரே இல்லை என்றால் கூட இது கவலைப்படாது. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஆற்றல் இந்த மரத்திற்கு உண்டு.

இதனால் காற்று மண்டலம் வறண்டு இந்தமரம் இருக்கும் பகுதிகளில் வறட்சி தாண்டவமாடும். இது வளரும் நிலப்பகுதிகளில் வேறு எந்த தாவரமும் வளராது. நிலத்தடிநீரும் விஷத்தன்மையுடன் மாறிவிடுமாம்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்திற்கும் பயன்படாது. இதில் கால்நடைகளை கட்டிவைத்தால், அது சினைபிடிக்காது. மலடாகிவிடும். அப்படி மீறி கன்று ஈன்றாலும் அது ஊனத்துடன் பிறக்கும். இது வளரும் பகுதியில் வேறு எந்தச் செடியும் வளராது.
 
இந்த வேலிகாத்தான் மரங்கள் மிகவும் குறைவாகவே ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. மாறாக கரியமிலவாயுவை உற்பத்தி செய்து காற்றுமண்டலத்தில் நச்சுத்தன்மையை அதிகமாகக் கலக்கின்றன.

ஆலமரமும், அரசமரமும் மனதுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கும். பல்வேறு உயிரினங்களும், பறவைகளும் அவற்றைச் சார்ந்து வாழும். ஆனால், இந்த கருவேல மரத்தில் எந்த பறவையும் கூடு கட்டாது. பறவைகள் மட்டுமல்ல, மனிதர்களின் மனங்களையும் கூட, இந்த மரம் மாற்றி, வன்முறை எண்ணத்தை உருவாக்கும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

கேரளாவில் இந்த ரவுடி மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் கேரளாவில் இந்த மரத்தை எங்குமே பார்க்கமுடியாது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக வறட்சி மாவட்டங்களில், இந்த மரம் நீக்கமற நிறைந்திருக்கிறது. பல இடங்களில் அடுப்புகரிக்காக இந்த மரத்தை வளர்க்கின்றனர்.

சுற்றுப்புறத்தில் புல், பூண்டைக் கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள்மரத்தை வெட்டிவீழ்த்துவோம், மண்ணின் மாண்பைக் காப்போம். ரவுடி மரத்திற்கு விடை கொடுப்போம்            

2 comments:

Anonymous said...

Good one ! i heard about that years back from a doctor.
we should create awareness about htis to people and start chopping down those trees . thanks for sharing !

Anonymous said...

இந்த நச்சு படிக்காத காமராஜ் என்பவர் தமிழக முதல்வராக இருக்கும் போது தமிழகத்திற்கு அவரால் வழங்கப்பட்ட சாபம்.