Thursday, July 8, 2010

சாதிப்பதும் சறுக்கி விழுவதும்...

கடுமையான மன அழுத்தம் காரணமாகவே மன உளைச்சல் உண்டாகிறது. உயிருக்குயிராக நேசித்தவர்கள் திடீரென பிரியும் போது தான் மனம் அதிகமாக பாதிப்படைகிறது. இதன் பக்க விளைவாக உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.

காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, பொருளிழப்பு, வேலை இழப்பு, பதவி இழப்பு, கட்டாய ஓய்வு, எதிர்பார்ப்புக்கு மாறான நீதிமன்ற தீர்ப்பு, எதிர்பாராமல் நேரும் விபத்துக்கள், வியாபாரத்தில் நட்டம், அறுவை சிகிச்சைகள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் மனஉளைச்சலை உண்டாக்குபவை. இவற்றை அனுசரித்து ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

இயற்கையாக நடைபெறும் செயல்களை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் தீர்வு கிடைத்து விடாது. அவற்றால் உண்டாகும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம், உடல் சோர்வடையும் சூழலில் பணிபுரிபவர்கள் அவற்றைப் போக்குவதற்கு தேவையான பிராணாயாமம், தியானம், யோகாசனம் போன்ற பயிற்சி முறைகளில் ஈடுபடலாம்.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

சிலர் தாங்க முடியாத அளவிற்கு துன்பம் வந்தால் தலையில் இடி விழுந்தாற்போல நொந்து போய்விடுவர். வாழ்க்கை என்பது 'சாதிப்பதற்காகத் தானே தவிர, சறுக்கி விழுவதற்கல்ல' என்பதைப் புரிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். கவலையைப் போக்க வேண்டும் என்பதற்காக தனிமையில் இருந்து கவலையை மேலும் அதிகமாக்கி விடக்கூடாது. இதனால் மனமும், உடலும் பாதிக்கப்படும். 'கூடிவாழ்ந்தால் கோடிநன்மை' என்பதற்கேற்ப நாம் எப்போதும் கலகலப்பாக பேசி, சிரித்து மகிழும் கூட்டத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும்.

டி.வி. மற்றும் ரேடியோவில் விரும்பிய நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழலாம். நகைச்சுவை நிறைந்த நூல்களை விரும்பிப் படிக்கலாம். இனிமையான பாடல்களைக் கேட்கலாம். கலை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாவிற்கு போகலாம். ஓவியங்களில் ஈடுபாடு இருந்தால் அதில் உங்கள் கைவண்ணத்தைக் காட்டலாம்.

இயற்கையை ரசியுங்கள்

இயற்கையைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டாம். நம்மைச்சுற்றிலும் உள்ள மரங்கள், ஆகாயம், தென்றல், கடல் அலைகளின் சத்தம், பறவைகளின் ஒலிகள் போன்றவற்றை ரசித்தாலே போதும். முடிந்தால், அருகில் உள்ள சுற் றுலாத்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

திடீரென்று உணர்ச்சி வசப்படுவதாலும், அதிக வேலைப்பளுவாலும் தான் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எக்காரணம் கொண்டும் பொறுமையை இழந்து விடாதீர்கள். உணர்ச்சி வசப்படுதல், கோபம், கவலை, மனசஞ்சலம், பயம், மிதமிஞ்சிய செயல்பாடு ஆகியவற்றை அறவே வெறுத்து ஒதுக்குங்கள். பிறரிடம் கனிவோடும், அன்போடும் பழகுங்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். எப்போதும் சுறுசுறுப்போடும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். சாதிப்பதும் சறுக்கி விழுவதும் நம் கையில் தான்இருக்கிறது. நாம் எப்போதும் சாதிப்பவர்களாகவே இருப்போம்.

No comments: