Saturday, July 17, 2010

ஹாலிவுட் டிரைலர்

 
ஒருமைக்கும் பன்மைக்குமான இடைவெளி வெறும் 23 ஆண்டுகள்தான். ஆமாம், 'பிரிடேட்டர்' ரிலீஸானது 1987ல். 'ப்ரிடேட்டர்ஸ்' Predators வேட்டைக்கார(ர்கள்)ன்  வெளிவரபோவது 2010ல். அதில் நடித்தவர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். இதில் அட்ரியன் ப்ராடி. இது மட்டும்தான் வித்தியாசமா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றும் விடையளிக்கலாம். இல்லையென்றும் மறுக்கலாம். ஆனால், அதில் இருந்த ஆக்ஷன் ரகளையைப் போல் பல மடங்கு சரவெடி இதில் உண்டு.

ராய்ஸ் என்னும் கூலிப்படை வீரன் உச்சியிலிருந்து கீழே விழுகிறான். பாராசூட் வேலை செய்யவில்லை. அதனால் தப்பிக்கவும் வழியில்லை. அடர்ந்த காட்டில், மரங்களை ஊடுருவியபடி கீழே விழும் ராய்ஸ் அதிர்ந்து போகிறான். காரணம், அவனைப் போலவே அடுத்தடுத்து பலரும் பொத் பொத்தென்று விழுகிறார்கள். ரஷ்ய ராணுவ வீரனில் ஆரம்பித்து மெக்சிகோ போதை மருந்து கடத்தல்காரன் வரை சகலரும் இதில் அடக்கம். எதற்காக கீழே விழுந்தோம்.... இது என்ன இடம்... எதற்கும் விடையில்லை. வேறு வழியில்லாமல் பரஸ்பரம் அறிமுகமாகி, அக்காட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அதற்கும் விழியில்லாமல் போகிறது. காட்டைச் சுற்றிலும் ஏகப்பட்ட பொறிகள். தப்பி தவறி அதில் கால் வைத்தால் அவ்வளவுதான். அம்பேல். அப்போதுதான் அனைவருக்கும் புரிகிறது, தாங்கள் இருப்பது பூமியில் அல்ல. வேறு ஏதோவொரு கிரகத்தில்....

ஒவ்வொருவரின் புத்தியும் கூர்மையடைகிறது. தப்பிக்க வேண்டும். என்ன செய்யலாம்? மூளையை பட்டைத் தீட்டுகிறார்கள். ஒவ்வொரு பொறியிலிருந்தும் தப்பிக்கிறார்கள். கண்ணில் ஒரு ஸ்பேஸ் ஷிப் தென்படுகிறது. அதன் மூலமாக பூமிக்கு செல்லலாம் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த ஸ்பேஸ் ஷிப்பில் வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வீழ்த்தும்போதுதான் இவர்களுக்கு வேறொரு உண்மை புரிகிறது. பல நூற்றாண்டுகளாகவே பூமி உட்பட பிரபஞ்சத்திலுள்ள பல கிரகங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்டைகாரர்களை இந்த  கிரகத்துக்கு அழைத்து வந்து வேட்டை நாயைப் போல் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல... முகம் தெரியாத யாரோ, இப்படி அழைத்து வரப்பட்ட வேட்டைக்காரர்கள் பரஸ்பரம் வேட்டையாடுவதைப் பார்த்து தங்கள் வேட்டைத் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.... ஏன் இப்படி செய்கிறார்கள்? யார் அந்த முகம் தெரியாத எக்ஸ்?

தொடரும் கேள்விகளுக்கு விடையாக நிலத்தில் தென்படும் தடங்களை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அப்போதுதான் ராய்ஸ் அந்த உண்மையை கண்டறிகிறான். தங்களை அகச்சிவப்பு கதிர்கள் வழியே கண்காணிக்கிறார்கள் என்று. உடனே தன் உடல் முழுக்க மணலை பூசிக் கொண்டு அந்த எக்ஸை எதிர்கொள்கிறான். மணல் பூசிக் கொண்டதால் அந்த எக்ஸால் ராய்சை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் புதிர் விலகுகிறது. இவர்களுடனேயே சுற்றும் அந்த மெக்சிகோ போதை கடத்தல் பேர்வழிதான் அனைத்துக்கும் காரணம். அவர்கள் இருக்கும் கிரகவாசிகளை கைக்குள் போட்டு மனிதர்களை வேட்டையாடுகிறான். ஏன் இப்படி செய்கிறான் என்பதற்கு சின்னதாக ஒரு பிளாஷ்பேக் உண்டு.

இறுதியில் எக்ஸ் உட்பட அனைத்து தடைகளையும் ராய்ஸ் தகர்க்கும்போது பொத் பொத்தென்று மீண்டும் மனிதர்கள் விழுகிறார்கள்.

இப்படி 106 நிமிடங்களில் ஏகப்பட்ட திருப்பங்களுடன் ஒரு ஆக்ஷன் மசாலாவை படைத்திருக்கிறார் நீம்ரோட் ஆன்டல். இவர்தான் இப்படத்தின் இயக்குனர். 'கண்ட்ரோல்' படம் மூலம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளிய திறமைசாலி. ஹீரோவாக நடித்திருக்கும் அட்ரியன் ப்ராட் மட்டும் லேசுப்பட்டவரா என்ன? 'தி பியானிஸ்ட்' திரைப்படம் மூலம் ஆஸ்கர் விருது வாங்கிய நடிகரல்லவா?

இப்படி திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே படமும் வாயைப் பிளக்கும் விதத்தில்தான் இருக்கும் என பலரும் சொல்கிறார்கள். அது உண்மையா? இந்த மாத இறுதியில் தெரிந்துவிடும். இந்தியாவில் அப்போதுதான் ரிலீஸ்.

கே.என்.சிவராமன்       
                                  

No comments: