Saturday, July 31, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

சும்மா சொல்லக் கூடாது. டிரெய்லர் மூலமாகவே ரசிகர்களின் நாடி நரம்பை அதிரச் செய்யும் வித்தையை ஹாலிவுட் பிரம்மாக்கள் கற்று வைத்திருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், 'ரெசிடென்ட் ஈவில்: ஆஃப்டர் லைப்' (Resident Evil After Life).

பெயரை பார்த்ததுமே சில பழைய படங்களின் நினைவுகள் உங்களுக்கு வந்தால்...? கையை கொடுங்கள். அதேதான். ஏற்கனவே பாகம் பாகமாக வந்து பாக்ஸ் ஆபிசை ஏக்கர் கணக்காக பிரித்து நிரப்பிய அதே 'ரெசிடென்ட் ஈவில்' படங்களின் தொடர்ச்சிதான் இந்த படமும்.

ஒருவகையான உயிர்கொல்லி வைரஸ் நகரத்தையே தாக்குகிறது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் சிலர்தான். அந்த சிலரையும் பாதுகாப்பாக அழைத்து கொண்டு ஆலிஸ், வேறொரு நகரத்துக்கு வருகிறாள். அதிர்ந்துப் போகிறாள். இந்த புதிய நகரத்தில் இருப்பவர்கள் அனைவருமே அந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பி பிழைத்தவர்கள்தான். ஒட்டு மொத்தமாக இவர்களை குறி வைத்து அழிக்க வேறொரு சக்தி வருகிறது. அந்த சக்தியை எதிர்த்துப் போராடும் ஆலிஸுக்கு முகம் தெரியாத நபர் உதவுகிறார். அவர் யார்? ஆலிஸால் அனைவரையும் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.
இதை உச்சி முதல் உள்ளங்கால் வரை முளைத்திருக்கும் அனைத்து முடிகளும் சிலிர்க்கும்படி மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்கள். பற்கள் டைப் ரைட்டர் அடிக்காதபடி படம் பார்க்க வேண்டிய கட்டாயம், ரசிகர்களுக்கு.

முந்தைய பாகங்களில் ஆலிஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து இளைஞர்களை உசுப்பேற்றிய மீ லா யோ வோ விடச், இந்தப் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். உக்ரேனை சேர்ந்த செக்சியான நடிகை என ஆஸ்திரேலிய பத்திரிகைகளால் ஒருமனதாக பாராட்டப்பட்டவர். இதுவரை இவரது புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டு நூற்றுக்கணக்கான மாத வார இதழ்கள் பெருமையடைந்திருகின்றன. புகழ் பெற்ற மாடலான இவருக்கு இயற்கையாகவே அமைந்த நீலப் பச்சை கண்களும், பழுப்பு நிற தலைமுடியும் இவரது அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனும் கூட. ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும் இவரது அழகும், ஆக்ஷனும் குறையவில்லை என்பதற்கு ரத்த சாட்சி இப்படத்தின் டிரெய்லர்.

எழுதி இயக்கியிருப்பவர், பால் டபிள்யு.எஸ். ஆண்டர்சன். முதல் இரண்டு 'ரெசிடண்ட் ஈவில்' படங்களின் இயக்குனரும் இவர்தான். 'ஏலியன் வெர்சஸ் பிரிடேட்டர்' , 'டெத் ரேஸ்' படங்கள் மூலம் ஆக்ஷன் ரசிகர்களின் பிரியத்தை ஒட்டு மொத்தமாக அள்ளிய இவரது ப்ளஸ் பாயிண்ட் துல்லியமான எடிட்டிங்கும், கண்ணைக் கவரும் விஷுவலும். இவையிரண்டும் இப்படத்திலும் உண்டு என்பது முப்பது முக்கோடி தேவர்களின் கூற்று.

இந்த பால் டபிள்யு.எஸ்.ஆண்டர்சனின் மனைவியாக மீ லா யோ வோ விடச் அமைந்தது ஹாலிவுட் ரசிகர்களின் பூர்வஜென்ம புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நிஜத்தில் மனைவியை எப்படி அணு அணுவாக ரசிக்கிறாரோ, அப்படியே கேமராவிலும் படம் பிடித்திருக்கிறார். உறைய வைக்கும் மிரட்டலான அழகு என்பதற்கு அர்த்தம், இந்தப் படம்தான்.

முந்தைய பாகத்தின் தொடர்ச்சிதான் என்றாலும், அவற்றை பார்க்காதவர்களும் இப்படத்தை ரசிக்க முடியும். அதற்கேற்ப கதை எழுதியிருக்கும் பாலுக்கு ஒரு சொட்டு.

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இப்போது ஹாலிவுட் மிதக்கிறது. எனவே 3டி உட்பட அனைத்துவிதமான லேட்டஸ்ட் டெக்னாலஜியையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன், படம் ரிலீசாகும் அன்றே, வீடியோ கேம்ஸாகவும் இக்கதை வெளிவர இருக்கிறது. பாப்கார்னை கொறித்தபடி அடுத்தமாதம் படம் பார்க்க தயாராகுங்கள்.

கே. என்.சிவராமன்                               

2 comments:

Anonymous said...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4346

Anonymous said...

tamil sourceக்கு ஏன் மானம் கெட்ட பொழப்பு...


http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4346