Friday, July 2, 2010

சுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை


வடக்கிலும், கிழக்கிலும் இராணுவ ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முனைப்புகள் அதிகரித்து வருகின்றன. இராணுவ ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் தமிழின அழிப்பை வேகப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி புலிகளின் இராணுவ நடவடிக்கைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது.     புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த ஆண்டு மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குரூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான விதவைகளும் பலநூறு அநாதைச் சிறுவர்களும் உருவாக்கப்பட்டனர். பல்லாயிரம் தமிழ் மக்கள் வயது, பால் வேறுபாடின்றி ஊனமாக்கப்பட்டனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. பல வைத்தியசாலைகளும் ஏராளமான பாடசாலைகளும் சிதைக்கப்பட்டன.
இவ்வரவு செலவுத் திட்டமானது தென்னிலங்கையைப் பொறுத்தவரை கட்சி ஆதரவுத்தளம் என்ற பாரபட்சத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை நிகழ்த்தப்பட்ட மேலதிக பட்டியலிடப்பட்ட அழிவுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டுவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடனும் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எமது தாயகத்திலேயே எமது அரசியல் பொருளாதார கலாசார உரிமைகளைப் பறித்து  எமது தனித்துவத்தை அழித்து  பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை அங்கு நிலை நாட்டுவதற்கான வக்கிரப் போக்கை இது வெளிப்படையாகக் காட்டி நிற்கின்றது.
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும்  இத்தகைய போர் அழிவின் பின்னரான வரவு  செலவுத் திட்டமானது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள், அந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் மீண்டும் வாழ வைக்கும் திட்டங்கள், அந்த மக்களின் வாழ்வாதாரங்களை மீளுருவாக்கும் திட்டங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் மற்றும் அரச நிர்வாகக் கட்டடங்கள் உட்பட்ட உட்கட்டமைப்புகளை மீள நிர்மாணம் செய்தல் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டிருக்கும்.

இந்த நாட்டில் பயங்கரவாத்திற்கான போர் என்ற போர்வையில் தமிழ்த் தேசிய இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்கான யுத்தம் நாசுக்கான பல புதிய வடிவங்களில் தொடர்வதையே இது வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி நிற்கிறது. பொதுவாக இலங்கை மக்கள் அனைவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பாதிப்பதற்கும் அவர்களை பட்டினிக்குள் தள்ளுவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தை மொத்தமாக அழித்தொழிப்பதை அல்லது நாட்டை விட்டு விரட்டுவதை நோக்கமாக கொண்டதாகவே இது அமைந்துள்ளது.
யுத்தம் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் யுத்தத்துக்காக அதிகூடியளவு பணம் செலவிடப்பட்டுள்ளமையால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நாட்டின் மொத்தச் செலவில் 50 வீதத்திற்கும் அதிகளவான தொகை யுத்தச் செலவுக் கடன்கள் மற்றும் வட்டிகளுக்காக செலவிடப்படுகின்றது. இதனால் பொருளாதார அபிவிருத்திக்கு மிகக் குறைந்தளவு பணமே ஒதுக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 20 ஆயிரத்து 200 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ள அரசு, நாட்டை அபிவிருத்தி செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு வெறும் 6100 கோடி மாத்திரமே ஒதுக்கியுள்ளது.

பிச்சைக்காரர்களையே கண்டிராத வந்தவர்க்கெல்லாம் உணவளித்த வடக்கு  கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதி மக்களை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றீர்கள். இது அடிப்படை பொருளாதார தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது. நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசின் அப்பட்டமான இனப்பாரபட்சக் கொள்கை ஒவ்வோர் துறையிலும் தெளிவாகப் புலப்படுகிறது. உதாரணமாக மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்திற்கு 56 கோடி 20 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டம் என்ற காரணத்திற்காக இவ்வளவு அதிக ஒதுக்கீடா?
அதேசமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாத ஜனாபதியின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு 37 கோடி 80 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டள்ளது. அதேவேளை இந்த அரசால் துவம்சம் செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெறும் 99 கோடி ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வெறும் 12 கோடி 20 லட்சம் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உண்மையாகவும் நேர்மையாகவும் இதனை அணுகுவோமாக இருந்தால் கம்பஹாவிற்கும் கொழும்பிற்கும் ஒதுக்கப்பட்ட பணம் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு மறுதலையாக இருக்கின்றது.
 
இவர்கள்தான் இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எதுவுமில்லை எல்லோரும் இலங்கையர்களென வார்த்தை ஜாலங்களை விட்டு உலகை ஏமாற்றுகின்றனர். எல்லோரும் இலங்கையர் என உண்மையில் இந்த அரசு நினைத்திருந்தால் இந்த வரவு  செலவுத் திட்டம் நேரெதிராக இருந்திருக்கும்.

வடக்கு  கிழக்கில் பாடசாலைகள் முற்றாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன. சில பாடசாலைகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சில பாடசாலைகள் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் முகாம்களாக உள்ளன. அண்மையில் கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பலாலி வீமன்காமம் மகா வித்தியாலயம் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ பயிற்சிக்கான நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்கின் கல்விக்கு இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். கல்விக்கான ஒதுக்கீட்டால் வடக்குக் கிழக்கின் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு தேவையான தளபாடங்கள் உபகரணங்கள் வழங்கப்பட்டு அது முழுமையாகச் செயற்பட வேண்டும். வடக்குக் கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கு போதிய தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வவுனியா பல்கலைக்கழக வளாகம் திருமலை பல்கலைக்கழக வளாகம் ஆகியவை முழுமையான பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தப்பட வேண்டும். இவற்றுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். 
துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் அழித்தொழிப்பதற்கும் ஒதுக்கப்படும் நிதியை ஆக்கத்திற்குரிய நிதியாக மாற்றினால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பதாகக் கொள்ள முடியும்.

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றும் யுத்த மமதைக்குள்ளும் யுத்த மாயைக்குள்ளும் மக்களை அமிழ்த்தி உங்கள் ஆட்சியை நடத்துவதற்கான உத்திகள்தான் உங்கள் பேச்சிலும் செயலிலும் வரவு செலவு திட்டத்திலும் வெளிப்படுகின்றன. இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானம், நிரந்தர பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால், முப்படைகளின் தொகை 1983 இற்கு முன்னரான நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும்.
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் 1983 இற்கு முன்னர் இருந்தளவுக்கு குறைக்கப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முனைப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனூடாக பல முனைகளில் தமிழ் இன அழிப்பை வேகப்படுத்துவதற்கே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து விடுவித்தல் என்ற பெயரால் தமிழ் மக்களை இந்த நாட்டிலிருந்தும் இந்த உலகத்திலிருந்தும் விடுவிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மக்கள் தமது ஜனநாயகபூர்வ கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்கள்கூடி அரசியல் நிலைமைகளையோ நாட்டு நிலைமைகளையோ விவாதிப்பதே ஓர் அச்சத்திற்குரிய விடயமாக மாற்றப்பட்டுள்ளது. அப்படியான கூட்டங்கள், விவாதங்களில் ஈடுபடுவோர் அரச புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படுவர் என மிரட்டப்படுகின்றனர். மக்கள் ஊமைகளாகவும் மந்தைகளாகவும் வாழவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  வடக்கு  கிழக்கின் ஜனநாயகம் இந்த அளவில்தான் இருக்கின்றது.

வடக்கு  கிழக்கு வழமையான வாழ்வுக்கு திரும்புமானால் அரிசி, மீன், பால், உப உணவுகள் போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடையக் கூடிய நிலை ஏற்படும். ஆனால் வடக்குக் கிழக்கு முழுமையாக வழமைக்குத் திரும்பி விடக்கூடாது என்ற திட்டத்திலேயே இந்த அரசு செயற்படுகின்றது. வடக்குக் கிழக்கில் ஏறத்தாழ 3 லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில் பல நூற்றுக் கணக்காண மக்கள் வாழ்ந்த இடங்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டு வீடுகள் இருந்த அடையாளம் இன்றி வெட்டை வெளி ஆக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் தென்மராட்சி பாதுகாப்பு வலயத்திலும் இதே நிலைதான். தனியார் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமிப்பது அரசாக இருந்தாலும் அது சட்ட விரோதமானதே.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது. அவர்களின் வீடுகளை யார் வேண்டுமானலும் அழிக்கலாம். உடமைகளை கொள்ளையிடலாம் நிலங்களை ஆக்கிரமிக்கலாம். அதனை அவர்கள் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம், நீதித்துறை நிர்வாகம் எதுவும் உதவி செய்யா என்ற நிலையே இங்கு வளர்க்கப்பட்டுள்ளது. இந்த அராஜக ஆட்சிப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் வீடுகளின் பெறுமதிகள் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

மாவிலாறு பூட்டியதால் ஒருபோக நெல் விதைத்தல் பாதிக்கப்பட்டதிற்கு அந்த மக்களுக்கு நிவாரணப் பணம் வழங்கிய அரசு, காங்கேசன்துறையிலும், தென்மராட்சியிலும், சம்பூரிலும் 4 தொடக்கம் 15 வருடங்கள் வரை அவர்களின் வளம்மிக்க நிலங்களில் விவசாயம் செய்ய விடாது  கால்நடைகளை வளர்க்க விடாது தடுத்ததற்கு எத்தகைய இழப்பீட்டினை வழங்கியது? சிங்கள மக்களுக்கு உரித்தான அனைத்தும் தமிழ் மக்களுக்கும் உரித்தானது என இந்த அரசு கருதினால் அந்த மக்களுக்குமான இழப்பீடுகளை வழங்க அரசு முன்வரவேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில் நீங்கள் பாரபட்சமான இனவாதத் தன்மை கொண்ட ஓர் அரசு என்பதையே நிரூபித்திருக்கின்றீர்கள்.
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பது என்ற பேரில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் கபளீகரம் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் எந்த வசதியுமற்ற ஒதுக்குப்புறமான இடங்களிற்கு விரட்டப்பட்டுள்ளனர். அனல் மின் நிலையத்திற்கு அவ்வளவு இடம் தேவையில்லை. இலங்கை வரலாற்றில் ஏதேனும் ஓர் அபிவிருத்தித் திட்டத்திற்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாதனியார் நிலச் சுவீகரிப்புக்கான அனைத்து சட்டதிட்டங்களையும் நடைமுறைகளையும் மீறி இப்பாரிய நிலம் மக்களிடமிருந்து திருடப்பட்டுள்ளது.
 
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்கள் மிச்சம் மீதமாக அந்த மக்களுக்கென உள்ள சிறு வளங்களையும் அபகரிக்கவும் சுரண்டவுமே  வகுக்கப்படுகின்றன. உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உரியவர்களின் நிலங்கள் உரிய இழப்பீட்டுடன் உரிமையாளர்களுக்குச் சேர்க்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 16 மாதங்கள் கடந்தும் இன்னும் வடக்குக் கிழக்கின் பல பிரதேசங்களில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவுக் கரையோரம் முழுவதும் இன்னமும் அந்த மக்களுக்கு சூனியப் பிரதேச மாக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடித்துச் செல்கின்றார்கள். 1983 இற்கு முன்னர் இலங்கையின் மொத்த மீன் தேவையின் பாதிக்கு மேல் வடக்குக் கிழக்கு மீனவர்கள் வழங்கி வந்தார்கள்.
15 ஆண்டுகளுக்கு மேலாக   அவர்களுடைய தொழில் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. கடலுணவு ஏற்றுமதி மூலம் இந்த நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்த அந்த மக்களுக்கு ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக சொந்த இடத்தில் வாழும் உரிமை, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டு வருகின்றன. உலக உணவுத் திட்டத்தின் தானியங்களில் தங்கி வாழ்வை ஓட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு மேல் அரசு அவர்களைக் குடியமர்த்துவதற்கும் அவர்களுடைய தொழில் உரிமையை மறுப்பதற்கும் கூறக்கூடிய எந்தக் காரணமும் தமிழின ஒழிப்புத் திட்டத்தின் அம்சங்களாக  தமிழ்த் தேசிய இனத்தின் மீதான சிங்கள மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளாக மட்டுமே நோக்க முடியும்.
எனவே, வடக்குக் கிழக்கு மீனவர் தொடர்பான இப்பாரபட்சப் போக்குக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வடக்குக் கிழக்கின் அனைத்து மீனவர்களும் மீள்குடியேற்றப்பட்டு படகு, வலைகள் போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு சிங்கறால், இறால், நண்டு போன்ற விலைமதிப்புள்ள மீன் வகைகளைப் பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உதவி வந்தனர். இது அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. சமீபத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் இந்தக் கடற்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனாவிற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இச்செயல் எமது மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதோடு மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கின்ற செயலாகும்.
கடந்த 20 வருடங்களக காங்கேசன்துறையிலிருந்து தொண்டமானாறு வரையிலான கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாகப் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இராணுவத்தினரால் இடம் பெயர்க்கப்பட்டனர். இன்று யுத்தம் முடிந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கு அரசு உரிய அக்கறை செலுத்த வேண்டும்.

30 ஆண்டுகால யுத்தத்தில் தமிழ் மக்கள் இராணுவத் தாக்குதல்களால் பல தடவைகள் இடம்பெயர்க்கப்பட்டனர். ஒவ்வொரு இடப்பெயர்வின் பொழுதும் ஒவ்வோர் குடும்பத்தினரும் தம் உயிர்களையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். ஆனால் எந்த வகையான இழப்பீடும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இறுதி யுத்தத்தில் இறந்த மக்களின் இறப்புச் சான்றிதழை வழங்குவதில் பாதுகாப்புத்துறை தலையீடுகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இறுதிக்கட்ட யுத்த தினங்களில் கொல்லப்பட்டோருக்கு உரிய தினங்களை விட்டு வேறு தினங்களில் இறந்தனர் எனப் பதியுமாறு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர் என அறிவிக்கப்படுகிறது. இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதுமாத்திரமல்ல யுத்தம் முடிந்து 16 மாதங்களாகிவிட்ட நிலையில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
 
சிவில் நிர்வாகத்திடமிருந்து இராணுவம் முற்றுமுழுதாக விலகியிருக்க வேண்டும். சிவில் நிர்வாகத்தில் தீர்மானம் எடுப்பதிலிருந்தும் சிவில் நிர்வாகத்தின் தீர்மானத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதிலிருந்தும் இராணுவம் முற்றாக விலக்கப்பட வேண்டும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட உழவு இயந்திரங்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், அநேகமாக எல்லா வீடுகளிலும் சைக்கிள்களும் கொண்டவர்களாக அம்மக்கள் இருந்தனர். அதேபோன்று நீரிறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகள் உள்ளிட்ட பல விவசாய உபகரணங்களும் அவர்களிடம் இருந்தன. ஆனால் இன்று எல்லாம் இழந்த நிலையில் தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கின்றனர். இவற்றின் ஒருபகுதியையாவது ஈடேற்றுவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும்.

இலங்கை அரசு இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும் இன்னமும் சிறிய தொகையினரே எஞ்சியுள்ளனர் என்றும் உலகம் முழுவதிலும் பிரசாரம் செய்து வருகின்றது. உண்மையாகவே மீள்குடியேற்றம் என்பதன் பொருள் என்ன? முகாம்களிலிருந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்குள் வைத்திருப்பதும், தற்காலிகக் கொட்டில்களில் வைத்திருப்பதும், அவர்களுக்கு எந்தவிதமான உதவிகளுமின்றி அலையவிடுவதும்தான் உங்களது மொழியில் மீள்குடியேற்றமா?
உங்களிடம் மீள்குடியேற்றம் தொடர்பாக சரியான திட்டங்கள் கிடையா. நான் ஏற்கனவே கூறியதுபோன்று பாடசாலைகள் இன்னமும் உடைந்தநிலையிலேயே உள்ளன. அதேபோன்று பாடசாலைகள் இன்னமும் இராணுவ முகாம்களாகவே இருக்கின்றன. வைத்தியசாலைகள் செயற்பட முடியாத நிலையில் உள்ளன. சந்தைகள் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றன. கலாசார மண்டபங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கு இராணுவத் தூபிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முழத்துக்கு முழம் யுத்த வெற்றியின் சின்னங்களே உருவாக்கப்பட்டு வருகின்ன்றன. தனியார் நிலங்கள் உட்பட பாரிய நிலங்கள் யாவும் இராணுவக் கட்டுமானங்களுக்காகப் பறித்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில்தான் உங்களது மீள்குடியேற்றம் அமைந்திருக்கின்றது.

வடக்கு  கிழக்கில் இருந்த கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கிருந்த நீதிபதிகள் சிலர் துணிச்சலுடன் முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாவரும் இன்று பல்வேறுபட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பல்வேறுபட்ட வழக்குகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்படக் கூடா என நீதிமன்றப் பதிவாளர்களும் சில சமயங்களில் நீதிவான்களும்கூட மிரட்டப்படுகின்றனர் என அறியப்படுகின்றது. இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையோடும், துணிவோடும் நீதித்துறையில் செயற்படும் நீதிபதிகளும்கூட மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமாத்திரமல்ல வடக்கு  கிழக்கு மாகாணங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள், அங்கிருக்கின்ற ஆளுநர்கள் விரும்பியவாறும் இராணுவத் தளபதிகள் விரும்பியவாறும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். உண்மைக்கும் நேர்மைக்கும் விரோதமாக அரசின் கபடத்தனமான நிகழ்ச்சிகளை நிறைவேற்றுவதற்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
தங்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணியாவிட்டால் அவர்கள் மிகமோசமான வழிகளில் பழிவாங்கப்படுகிறார்கள்.
 
நிர்வாக கட்டமைப்புகளின் மீதான ராணுவத் தலையீடு ஒரு ஆரோக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கோ இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கோ ஒருநாளும் உந்துசக்தியாக இருக்காது. மாறாக நம்பிக்கையீனங்களும் இடைவெளிகளும்தான் அதிகரிக்கும்.

மீள்குடியேற்றத்துவதற்கென மெனிக்பாம் முகாம்களிருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பல மாதங்களாக தங்க வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 1100 இற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் தங்கள் சொந்தக் காணிகளுக்கு அனுப்ப மறுத்து வருகிறீர்கள். இராணுவம் இதற்குத் தடையாக இருக்கிறது என நாங்கள் அறிகின்றோம்.
ஆனால் உங்கள் இராணுவத் தளபதி பொசன் பண்டிகையின்பொழுது கண்டி மகாநாயக்கர்களிடம் ஆசிவாங்கச் சென்ற வேளையில் வடக்கு  கிழக்கில் தாங்கள் நிரந்தர இராணுவக் குடியிருப்புகளை நிறுவி வருகின்றனர் எனவும் அங்கு இராணுவத்தினர் குடும்பத்துடன் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு வயல்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
 
தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய ஒரு சில மாவட்டங்களில் அவர்களைச் சிறுபான்மையினராக ஆக்கி படிப்படியாக அவர்களை இல்லாதொழிப்பது என்ற அரசின் நிகழ்ச்சி நிரலை இராணுவத் தளபதியே பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் முன்னர் சுண்ணாம்புக் கல் அகழப்பட்டு வந்தது. ஆனால் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு 20ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும்கூட அங்கிருந்த சுண்ணாம்புக்கல் மிகப் பாரிய அளவில் அகழப்பட்டு தென்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.
கடல்நீர் நாட்டுக்குள் புகுமளவிற்கு இந்த அகழ்வுவேலை இன்றும் நடைபெற்று வருகின்றது. இவற்றை நிறுத்தும்படி  கோரிக்கைகள் விடுத்தும்கூட இவை இன்னமும் நிறுத்தப்படவில்லை. இந்தச் சுண்ணாம்புக்கல் யாரால் என்ன தேவைக்காக அகழப்படுகின்றது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இப்படியான அகழ்விற்கு சூழல் பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை இந்தச் சபைக்குத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்த அகழ்வுப்பணிகளை அரசு மேற்கொண்டுள்ளதா? அல்லது தனிநபர்கள் மேற்கொண்டுள்ளனரா என்பதையும் இந்த சுண்ணாம்புக்கல்லில் இருந்து வருகின்ற வருமானம் எங்கு சென்றடைகின்றது என்பதையும் இச்சபைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் மணல் அகழ்வு வேலை மகேஸ்வரி மன்றம் என்னும் சட்டபூர்வமற்ற நிறுவனத்திடம் சுரங்க மற்றும் கனிமவளத் திணைக்களத்தால் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் பெற்றுக்கொள்ள கட்டட நிர்மாணத்தில் ஈடுபட்டிருப்போர் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த மகேஸ்வரி நிறுவனமானது பலநூறுகோடி ரூபாவை இந்த மணல் வியாபாரத்திலிருந்து கொள்ளை இலாபமாகப் பெற்றுக்கொள்கின்றது.
சட்டபூர்வமற்ற இந்த மகேஸ்வரி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் மணல் அகழ்விற்கான உரிமம் வழங்கப்பட்டது என்பதையும் இவர்கள் பெற்றுக்கொண்ட சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமற்ற நிதி தொடர்பான கணக்கு வழக்குகள் யாராலாவது சரிபார்க்கப்படுகின்றனவா அல்லது அதுதொடர்பான ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும் சம்பந்தபட்ட அமைச்சர்கள் இந்த சபைக்கும் தமிழ் மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டும். இப்படியான சட்டபூர்வமற்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்கள் நேர்மையான முறையில் தமது கட்டட நிர்மாணங்களுக்கு மணலை பெற்றுக்கொள்ள ஆக்கபூர்வமான மாற்றுவழிகள் உருவாக்கப்பட வேண்டும்.
இப்படி சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். 

No comments: