Saturday, July 24, 2010

அவமானம் முன்னேற்றத்தின் மூலதனம்!

சுத்தம் - அசுத்தம், நியாயம் - அநியாயம், நம்பிக்கை - அவநம்பிக்கை, மானம் - அவமானம்

இப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாகிறது. இரண்டுமே நல்லதுதான். என்ன? இரண்டுமே நல்லதா! முரண்பாடு நல்லதா என்கிறீர்களா?

முரண்பாடுதான். ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான் அது நல்லது என்கிறேன். வாழ்க்கையை அதுதான் அர்த்தமுள்ளதாக, அழகு மிகுந்ததாக மாற்றுகிறது.

மலருக்கு அழகைக் கொடுத்த இயற்கை, முள்ளுக்கு உறுதியைக் கொடுத்திருக்கிறது. அழகு மென்மையானது. அதனாலேயே அது சீக்கிரம் வாடி உதிர்ந்து விடுகிறது. முள் உறுதியானது. அதனாலேயே அது அதிக நாள் வாழ்கிறது. மென்மை, வன்மை இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவை. அழகான மலர் மகிழ்ச்சியைத் தருகிறது. உறுதியான முள் பாதுகாப்பைத் தருகிறது. அதனால்தான் முரண்கள் நல்லது.

படைப்பே முரண்களால் ஆனதுதான். உலகம், ஆண்- பெண் என்ற இரண்டு முரண்களால் ஆனது. அது போல நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் முரண்களாலேயே இயங்குகின்றது. இரவு- பகல், பிறப்பு- இறப்பு, இன்பம்- துன்பம், நன்மை- தீமை இப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பிறப்பு மட்டுமே இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும்? இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தானே வாழ்க்கை மதிப்பு மிக்கதாக இருக்கின்றது?

வாழ்க்கை அங்கும் இங்கும் அலையும் பெண்டுலம் போன்றது. ஒருபக்கம் ஏறிய பெண்டுலம் அதற்கு எதிராக மறுபக்கமும் சென்றே தீரும். மலையின் உச்சிக்குச் சென்றவன் கீழே இறங்கியாக வேண்டும். இப்படித்தான் ஏற்றமும் தாழ்வும் ஏற்படுகிறது.
வாழ்க்கை ஒரு நதியின் பிரவாகம் போன்றது. மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது. இடையே எத்தனையோ மேடுகள், பள்ளங்கள். அத்தனையையும் அதனதன் போக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கையின் நியதி.
  
வெயிலில் காய்ந்தால்தான் நிழலின் சுகம் தெரியும்.
பசித்தவனுக்குத்தான் உணவின் அருமை தெரியும்.
துன்பம் என்ற ஒன்றையே அறியாதவன் இன்பத்தை இன்பம் என்று எப்படி அறிய முடியும்?


இன்பத்தை வாங்க வேண்டும் என்றால் துன்பத்தை விலையாகக் கொடுக்க வேண்டும். கவிக்கோ அப்துல்ரகுமான், 'இன்பத்தை விடத் துன்பமே உயர்ந்தது. ஏனென்றால் துன்பம், இன்பம் என்ற லாபத்தைத் தருகிறது. இன்பமோ துன்பம் என்ற நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இனிப்பால் நோய் வருகிறது. கசப்பால் நோய் தீருகிறது. சர்க்கரை வியாதிக்குப் பாகற்காய் மருந்து. எனவே, இன்பம் ஒரு வகையில் நோய். துன்பம் அதைத் தீர்க்கும் மருந்து' என்று கூறுவார். அவமானமும் ஒருவகையில் துன்பம்தான். புத்தர் ஞானம் அடைந்தது அந்தத் துன்பத்தால்தான்.

அன்பான இளைஞனே!

ஒரு மனிதனுடைய கருவில் எல்லாமே நல்ல பண்புகளாக அல்லது தீய பண்புகளாக இருக்கும் என்று கூற முடியாது. இரண்டும் கலந்து இருக்கும். இருவகைப் பண்புகளில் சூழல் எதை வளர்க்கிறதோ அதுவே வளரும்.

இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது. இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக வேண்டிய அவசியமில்லை. போராடத் துணிந்த எவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற உந்துதல் மட்டும்தான்.

அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? அவமானம் ஏற்படுகிறபோதுதான். அதனால் அவமானத்தைச் சேமித்து வைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான உந்து சக்தி. அவமானத்தைப் போற்ற வேண்டும். அதுதான் லட்சியக் கனவுகளைத் திறக்கும் சாவி. அவமானம் ஒரு தீ. அதை அணையவிடக் கூடாது. ஒவ்வொரு அவமானமும் ஒரு போதிமரம். அதுதான் வெற்றி என்ற கனியைத் தரும்.

இளைஞனே! நீ நிராகரிக்கப்படுகிறாயா? அப்போது நீ நிமிர்ந்து நில். உன்னை வருத்தும் கைகளே ஒரு நாள் உன்னை வாழ்த்தி வணங்கும். அதற்குப் பதிலாக, அவமானப்படுத்தியவர்களை என்ன செய்கிறேன் பார் என்று இளமையின் துடிப்பில் கோபத்தோடு பழிவாங்க நினைப்பது அறிவீனம்.

நிம்மதியான வாழ்க்கைக்கு முதல் எதிரி யார் தெரியுமா? கோபம்தான். கோபம் முன் வாசல் வழியாக வந்தால் மகிழ்ச்சி பின்வாசல் வழியாகச் சென்று விடும். எதிர்மறையான எண்ணங்களையும் உடன்பாடாக மாற்றிச் செயல்படுத்தத் தொடங்கினால் நீதான் வெற்றியாளன்.

ஆபிரகாம் லிங்கன் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக அமர்ந்தவர். அவர் அந்தச் சிம்மாசனத்தை அடைவதற்கு எத்தனை தோல்விகளை சந்தித்திருப்பார்? அதை விட எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பார் தெரியுமா? இந்த இடத்தில் ஒன்றை மட்டும் இப்போது நினைவுபடுத்துகிறேன்.

----------------------------------------------------------
  
ன்னை தெரசா அகிலம் முழுவதும் அன்பால் அறியப்பட்டவர். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு-

ஒருநாள் அவர் கல்கத்தா நகர் தெரு ஒன்றில் நுழைந்து ஒரு கடைக்குச் சென்று நிதி கேட்டார். கடைக்காரர் அவரை அலட்சியப்படுத்தும் நோக்கில், 'போம்மா... ஒன்றும் தர முடியாது!' என்று விரட்டினார். ஆனாலும் கடைக்காரரிடம் எதையாவது வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்னை தெரசா. 'ஐயா... விடுதியில் தங்கியிருக்கும் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கையை நீட்டியபடியே இருந்தார்.

கடைக்காரர் கோபமாக, 'இந்தா...' என்று அன்னை தெரசாவின் கையில் எச்சிலைக் காறித் துப்பினார். அப்போதும் நிதானம் தவறாத தெரசா, 'உங்களுக்கு என் நன்றி. இப்போது நீங்கள் அளித்திருப்பதை எனக்கு வைத்துக்கொள்கிறேன். விடுதியில் தங்கி இருக்கும் என் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது கொடுங்கள்' என்று இன்னொரு கையை நீட்டினார்.

அதிர்ச்சி அடைந்தார் கடைக்காரர். அவமானப்படுத்த நினைத்த தனது இழிபுத்தியை நினைத்து வருந்தினார். அடுத்த நொடியில் பணப்பெட்டியைத் திறந்து அன்போடு அள்ளிக் கொடுத்தார். அன்னையின் கைகளையும் தொட்டு வணங்கினார்.

அன்னை தெரசாவின் அழியாப் புகழுக்குக் காரணம், அவமானங்களையும் முன்னேற்றப்பாதைக்கான மூலதனமாக அவர் மாற்றியதுதான். முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணியில் பெரும்பாலும் அவமானத்தின் தழும்புகள்தான் அணிவகுத்திருக்கும்.

----------------------------------------------------------

பிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார்.

அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு பல நல்ல பொறுப்புகளைக் கொடுத்தார் லிங்கன்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்க, அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும் அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதியுள்ளவனாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான முயற்சியைத் தொடங்கினேன். உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்தப் பதவியை இப்போது அடைந்துள்ளேன். இந்தப் பதவியை அடைய அவரும் ஒரு காரணம். என் நன்றிக்கடனை அவருக்குச் செலுத்த ஆசைப்பட்டு இந்தக் கூடுதல் பதவிகளை வழங்கினேன் என்றார்.

அவமதித்தவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அறிவீனம். அவமதித்தவரும் வருந்தும்படியாக வளர்வதே அங்கீகாரம். அவமானத்தை முன்னேற்றத்துக்கான மூலதனமாக்குங்கள். 'மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதின் மூலமாகத் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும்' என்பார் சிந்தனையாளர் வில்லியம் ஜேம்ஸ்.

ஆம்! இளமையில் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பு இதுதான். தடைகளையும், அவமானங்களையும் கூட உங்களின் ஆற்றலை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுங்கள். அதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

'எப்போதும் வீழ்ந்து விடாமல் இருப்பதில் ஆனந்தம் இல்லை. விழும் ஒவ்வொரு தடவையும் எழுந்து நிற்பதில்தான் ஆனந்தம் உள்ளது' என்றார் கன்பூசியஸ்.

எடிசன் பள்ளிப் பருவத்தில் ஏளனப்படுத்தப்பட்டார்.
ஐன்ஸ்டீன் அறிவியல் துறைக்கு லாயக்கற்றவர் என்று துரத்தப்பட்டார்.
மகாத்மா காந்தியடிகள் ரெயில் பயணத்தின்போது தூக்கி எறியப்பட்டார்.


இப்படி இன்னும் பல பேர். வலிபடாத வாழ்க்கையில் வசந்தங்கள் நுழையாது. எவ்வளவு பெரிய கரிய இருட்டையும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சம் நீக்கி விடும். அந்த விளக்கின் வீரியத்தை நாம் கொள்ள வேண்டும். இனியும் அவமானத்தைக் கண்டு ஏன் சோர்ந்து போக வேண்டும்? சாதனைகளுக்கு எண்ணங்கள்தான் எரிபொருள். அவமானங்களையும் சேமியுங்கள். அதுவும் வெற்றிக்கான மூலதனம்தான்.

பேராசிரியர்.க.ராமச்சந்திரன் 

2 comments:

ராசராசசோழன் said...

//அவமதித்தவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அறிவீனம். அவமதித்தவரும் வருந்தும்படியாக வளர்வதே அங்கீகாரம். அவமானத்தை முன்னேற்றத்துக்கான மூலதனமாக்குங்கள். 'மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதின் மூலமாகத் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும்' என்பார் சிந்தனையாளர் வில்லியம் ஜேம்ஸ்.//

ரசித்த வரிகள்...மனதிற்கு உரமேற்றும் வரிகள்...

A.Hari said...

Thanks for this inspiring story.

To read more inspiring stories, visit my blog 'Inspire Minds' by clicking the folloiwng link.

http://changeminds.wordpress.com/

A.Hari