Friday, July 23, 2010

ஹாலிவுட் டிரெய்லர்


தலைப்புதான் இந்த 'சென்சூரியன்' ஹாலிவுட் படத்தின் ஒன் லைன். அதைத்தான் 97 நிமிடங்களாகவும் 130 நிமிடங்களாகவும் இரண்டுவகையில் எடிட் செய்திருக்கிறார்கள். அந்தந்த நாட்டின் சென்சார் போர்டுக்கு ஏற்ப 97 அல்லது 130 நிமிடங்களிலோ படம் திரையரங்குகளில் ஓடும். ஓட்டமென்றால் சாதாரண ஓட்டமல்ல. ஒ(ளி)லியை விட வேகமான ஓட்டம். தடதடக்கும் காட்சிகளும் பரபரக்கும் திரைக்கதையும் இப்படத்தின் உயிர்நாடி.

ஏப்ரல் மாதம் கிரீசில் ரிலீசாகி பாக்ஸ் ஆபீசை நிரப்பிவிட்டு இங்கிலாந்தில் வலது காலை எடுத்து வைத்து இப்படம் நுழைந்த தினம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்க வேண்டும். அங்கும் கல்லா நிரம்பி தெருவில் ஆறாக ஓடியது. காதை குடைந்தபடி இதைப்பார்த்த அமேரிக்கா, வெற்றிலைப் பாக்குடன் அடுத்த பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்க இப்படத்தை இருகரம் கூப்பி அழைத்திருக்கிறது. 


கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையிது. ரோமானியர்கள் எகிப்தை கைப்பற்றிவிட்டு அப்படியே ஸ்பெயினையும் ஒரு கை பார்க்க திட்டம் தீட்டுகிறார்கள். படையை நகர்த்துகிறார்கள். வழியில் குறுக்கிடும் ஸ்காட்லாந்தை அவ்வளவு சுலபத்தில் வெற்றி கொள்ள முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் கொரில்லா படைகள் தாக்குதல் நடத்தி ரோமானியர்களை சிதறடிக்கிறது. இக்காரியத்தை செய்பவர்கள் பிக்டஸ் என்ற பழங்குடியினர். 

உடனே குயின்டஸ் டயாஸ் என்ற போர் வீரனை ரோமானியப் படை அழைக்கிறது. முன்னாள் கிளாடியேட்டரின் மகனான குயின்டஸ் டயாசிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். பிக்டஸ் பழங்குடியினரை வெற்றி கொண்டு அவர்களது மன்னனை கொல்ல வேண்டும். இதுதான் அசைன்மென்ட்.

குயின்டஸ் டாயஸ் இப்பொறுப்பை ஏற்கிறான். பிக்டஸ் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்துகிறான். எதிர்பாரதவிதமாக பிக்டஸ் பழங்குடியினரின் இளவரசன் கொல்லப்படுகிறான். அத்துடன் ரோமானிய படை வீரர்களும் கொத்துக் கொத்தாக காணமல் போகிறார்கள் அல்லது இறக்கிறார்கள்.

இவர்களை எப்படி சமாளிப்பது? உயிரை துச்சமென மதிக்கும் கொரில்லா குழுவை எப்படி வெற்றி கொள்வது? குயின்டஸ் டயாஸ் திட்டம் தீட்டுகிறான். அப்போதுதான் அந்த உண்மை தெரிகிறது. 

கொரில்லா படையை தலைமையேற்று வழிநடத்துவது ஈடைன் என்கிற அழகான இளம் பெண். ஆனால், அவளால் பேச முடியாது. சிறுவதிலேயே அவளது நாவை ரோமானியர்கள் துண்டித்துவிட்டனர். ஐம்புலன்களில் ஒன்று குறைந்தால் என்ன நடக்குமோ அது ஈடைன் விஷயத்தில் கச்சிதமாக நடந்துவிட்டது. யெஸ், அவளால் கூர்மையாக பார்க்க முடியும். எந்தவொரு சின்ன சப்தத்தையும் துல்லியமாக கேட்க முடியும். 

ஈடைன் தலைமையிலான கொரில்லா படையை குயின்டஸ் டயாஸ், எப்படி வெற்றிக் கொள்கிறான் என்பதுதான் படம். 'இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்', '300' ஆகிய படங்களில் நடித்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கும் மைக்கேல் ஃபாஸ்பென்டர், இப்படத்தில் குயின்டஸ் டயாசாக நடித்திருக்கிறார்.

ஈடைனாக வாழ்ந்திருப்பவர் ஒல்கா கூரிலென்கோ. ஜெமேஸ்பாண்ட் படமான 'குவாண்டம் ஆஃப் சாலெஸ்' படத்தில் வித்தை காட்டினாரே... அவரேதான்.
நகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நம் நாட்டில் இப்படம் ரிலீசாகும் போது அதைக் கடித்தபடி பார்க்க முடியும். ரசிக்க முடியும்.
கே.என்.சிவராமன்  
 

No comments: