Thursday, July 22, 2010

மேலோட்ட மதிப்பீடு உண்மையை மறைக்கும்!

ஒருவரின் பார்வைக்கு கல்லாகத் தெரிவது, மற்றொருவருக்கு சிலையாகத் தோன்றலாம். எந்த விஷயத்தையும் மேலோட்டமாக மதிப்பிடுவது சரியானதல்ல. வெற்றி பெற ஒன்றை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்று காண்போம்.

வெற்றி, தோல்வியை தாமதமாக்குகின்றது. தோல்வி, வெற்றியை தாமதமாக்குகின்றது. தோல்விக்குள் வெற்றி குடியிருக்கின்றது. இதை எப்படி உணர்ந்து கொள்வது? சில விஷயங்கள் அறிவினால் உணரும்போது சரியாகத் தோன்றலாம். உணர்வுப்பூர்வமாக அணுகும்போது பிழையாகிப் போகலாம். இதில் எது சரி, எது தவறு?
  
தவறான அணுகுமுறை என்பதை எந்தக் காலத்திலும் சரியானதாகக் கருத முடியாது. ஆனால் ஒரு முயற்சியில் எதிர்கொள்ளும் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். அதனால் தோல்விகளைக் கண்டு யாரும் வெட்கப்படத் தேவையில்லை.

சூரிய அஸ்தமனமில்லாமல் சூரியோதயம் நிகழ்வதில்லை. தோற்றத்தில் எதிர்மறையாக இருந்தாலும் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே. இறப்பில்லாமல் பிறப்பில்லை. தோல்விகளை எதிர்கொள்ளாமல் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது சாத்தியமில்லை. ஒரு முயற்சி முழு வடிவம் பெறுவதற்குச் சற்றுத் தாமதமாகலாம். அதை தடை என்று கருத வேண்டியதில்லை.

சாதனைகள் செய்து சரித்திரம் படைக்க நினைப்பவர்கள் தளராமல் முயற்சி செய்யும்போது வெற்றியின் முகம் வெளிப்படுகின்றது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குறியீடுகளே. எந்தவொரு வெற்றியும் முயற்சியை முற்றுப்பெறச் செய்யும் அளவிற்கு வல்லமை கொண்டது கிடையாது. இதை அறிவுப்பூர்வமாக புரிந்தால் ஏற்றுக்கொள்வது கடினம். உணர்வுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்வதே பெரும்பாலும் உலக நடைமுறையாக இருக்கிறது. இத்தகைய மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்கச் செய்கின்றன. நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் அறிவின் துணை கொண்டு மட்டுமே வாழ்பவர்களாக உள்ளனர். சிந்திப்பது என்பது மட்டுமே அறிவின் சக்தி என்று நினைக்கிறார்கள்.

ஒருவர் சாதாரணமாக அமர்ந்திருந்தால் 'எதைப் பற்றி சிந்திக்கின்றீர்கள்?' என்றே கேட்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் மவுனத்தை மாபெரும் தவமாக மேற்கொள்வது சாத்தியமில்லை என்று சந்தேகிக்கின்றார்கள்.

சிந்தையிலுள்ள முடிச்சுகளை அவிழ்த்தால்தான் நம்மை சுற்றி உள்ளவற்றை வியப்புடன் உற்றுநோக்கும் சுபாவம் வெளிப்படும். அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அனைத்தையும் கற்றுக் கொடுத்ததன் அடிப்படையில் நினைவு கூரத் தொடங்கி விட்டால் மனம் மீண்டும் வகுப்பறையில் பாடம் படிக்கத் தொடங்கும்.

அப்படியானால், உணர்வும், அறிவும் ஒன்றா? அறிவால் மதிப்பிடுவது உணர்வால் மதிப்பிடுவதில் இருந்து வித்தியாசப்படுவது ஏன்?

ஓர் உளவியல் வல்லுனர் இளைஞன் ஒருவனுக்கு உணர்வு என்றால் என்ன என்று விளக்கினார். பின்னர் அந்த இளைஞனின் கையைப் பற்றிக்கொண்டு இளைஞனை கண்ணை ஒரு நிமிடம் மூடச் சொன்னார். 'எப்படி உணர்கிறீர்கள்?' என்று இளைஞனை கேட்க, 'உங்களது கையை உணர்கிறேன்' என்றான் அந்த இளைஞன். 'இது உங்களது உணர்வல்ல, நீங்கள் எண்ணுவதை வெளிப்படுத்தி உள்ளீர்கள்' என்று வல்லுனர் கூறினார்.

'மீண்டும் கண்களை மூடிக்கொண்டு என் கை உங்கள் கையை பிடித்திருக்கும் இடத்திற்கு மனதை நகர்த்தி உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்' என்றார் வல்லுனர். 'உங்கள் கை என் கையை ஆதரவாக பற்றிக்கொண்டு ஒருவகை பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பதை உணர முடிகின்றது' என்றான் இளைஞன். உணர்வுக்குப் பெயர் சூட்டாமல் அப்படியே வெளிப்படுத்துவதுதான் உணர்வின் உண்மையான அடையாளம்.

'மனிதன், குழந்தையிடம் கற்க வேண்டியவை அதிகம்' என்கின்றார் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். ஒரு குழந்தையின் செயல்களை ஒரு மணி நேரம் கவனித்துப் பார்த்தோம் என்றால் அது எவ்வளவு இயல்பாக தன் சுபாவத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை உணர முடியும்.

எதையும் அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள குழந்தை முயலுவதில்லை. அனுபவபூர்வமாக, புலன்களின் துணை கொண்டு மட்டும் உணர்கின்றது. ஒரு செயலைச் செய்யும்போது அதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு செயல்படும்போது ஒருவகை இசைவு வெளிப்படுகின்றது.

வெற்றி- தோல்வி, ஏற்றம்- இறக்கம், உயர்வு- தாழ்வு ஆகிய மதிப்பீடுகள் மன அமைதியை இழக்கச் செய்கின்றன. நமது உடம்பையே எடுத்துக் கொண்டாலும் கண், காது, மூக்கு போன்ற ஐம்புலன்களும் தத்தம் பணியை செய்கின்றன. கைகள், கால்கள், இதயம், நுரையீரல் என்று ஒவ்வொன்றும் அதனதன் பணியை செய்கின்றன.

அதேசமயம் உடம்பின் மற்ற உறுப்புகளுடன் தங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டே ஒவ்வொரு உறுப்பும் தத்தம் பணிகளைச் செய்கிறது. காலில் அடிபட்டால் கண்களில் கண்ணீர் வருவது முடிவெடுத்து நடக்கும் செயலன்று. இயல்பாக ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வுகளை வெளிப்படுத்தும் பரிமாணமே.

ஒரு விஞ்ஞானியோ, மருத்துவரோ, பொறியியல் வல்லுனரோ, நிர்வாகியோ, கற்பவரோ, வேலைநாடுபவரோ, உழைப்பாளியோ யாராக இருந்தாலும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்போதுதான் உறவுகள் வலுப்பெறுகின்றன. அவர்களின் செயலும் முழுமை அடைகின்றது. அறிவும், சாமர்த்தியமும் மட்டுமே இருந்தால், 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று சொல்வதுபோல ஆகிவிடும். இளைஞர்கள் அவரவர் செயல் களத்தில் செயல்பட்டுக் கொண்டே வாழும் உலகத்துடனும் முரண்பாடின்றி இருப்பதை சுபாவமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியம்!

ப.சுரேஷ்குமார்

No comments: