Friday, July 9, 2010

ஹாலிவுட் ட்ரெய்லர்

விடுங்கள். எதுவுமே இப்படத்தில் இல்லை. பொறி பறக்கும் வசனங்கள் இல்லை. ப்ரேமுக்கு ப்ரேம் பிதுங்கி வழியும் கம்ப்யூடர் கிராபிக்ஸ் இல்லை. கார்கள் பறக்கவில்லை. விமானத்திலிருந்து தவறி விழும் கதாநாயகியை காப்பாற்ற ஸ்பைடர் மேன் இல்லை. அமெரிக்காவை அழிக்க ரஷ்யா முயற்சி செய்யாததால், ஜேம்ஸ் பாண்டுக்கும் படத்தில் வேலை இல்லை.

இப்படி இல்லையென்று பட்டியலிட 'குரோன் அப்ஸ்'  Grown Ups படத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. இந்த ஆயிரத்தை குறித்தும் மில்லியன் டாலர் அளவுக்குக் கூட கவலைப்படாமல் ஒரேயொரு 'இருக்கும்' விஷயத்தை ப்ரேம் ப்ரேமாக காண்பித்து நம் கண்களில் நீரை வரவைத்திருக்கிறார் டென்னிஸ் டியூகன். அது நகைச்சுவை.

யெஸ், சிரிக்க வைப்பதையே தனது இம்பிரிண்ட்டாகக் கொண்டிருக்கும் டென்னிஸ் டியூகனின் சமீபத்திய ஹாலிவுட் படம் 'குரோன் அப்ஸ்'. சக்கைப்போடு போட்ட 'ப்ராப்ளம் சைல்ட்', அதகளம் செய்த 'சேவிங் சில்வர்மேன்' படங்களின் பிரம்மா இவரேதான்.

செண்டிமெண்ட் பிழியப் பிழிய சொல்ல வேண்டிய கதையை எடுத்துக் கொண்டு, ஜஸ்ட் லைக் தட் காமெடி கொத்து பரோட்டா போட்டிருக்கிறாகள்.
மத்திய வயதில் ஏகப்பட்ட டென்ஷனுடன் வாழ்கிறான் லெனி. குடும்பம், குழந்தைகள் அது தொடர்பான சிக்கல்கள், போராட்டங்கள், மன அவஸ்தைகள் என நாட்கள் ஊர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தத் தகவல் வருகிறது. பள்ளி நாட்களில் லெனி, ஒரு பேஸ்கட்பால் ப்ளையர். அப்போது அவனுக்கு பயிற்சியாளராக இருந்தவர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லெனி செல்கிறான். அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளிக்கால நண்பர்கள் சிலரை சந்திக்கிறான். அனைவருமே பேஸ்கட்பால் டீமில் இருந்தவர்கள். இறுதிச் சடங்கு முடிந்ததும் நண்பர்கள் உரையாடுகிறார்கள். வார விடுமுறையில் சந்திக்க முடிவு செய்து அதேபோல் ஒன்றுக் கூடவும் செய்கிறார்கள். அந்த ஒன்றுக்கூடலில் அனைவரது வயதும் உதிர்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் சுருண்டிருக்கும் குழந்தைத்தனம் விழித்துக் கொள்கிறது. விஸ்வரூபம் எடுக்கிறது. குழந்தைகளைப் போல் ஆட்டம், பாட்டம் என விடுமுறையை கொண்டாடுகிறார்கள்.

இந்த ஒன்லைனை எடுத்துக் கொண்டு 102 நிமிடங்களில் ஒரு நகைச்சுவை ஜுகல்பந்தியை நடத்தி இருக்கிறார்கள். முதல் காட்சியின் முதல் ஷாட்டில் ஆரம்பிக்கும் சிரிப்பு, இறுதிக் காட்சியின் இறுதி ஷாட் வரை தொடர்வது ஆச்சர்யம்.
  
இந்த ஆச்சர்யத்தை சாத்தியமாக்கியவர் ஆடம் சான்ட்லர். இவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் ப்ளஸ் ரைட்டர். அத்துடன் லெனியாக நடித்திருப்பவரும் இவரே. அமெரிக்க நகைச்சுவை நடிகரான இவர் ஏற்கனவே 'பில்லி மேடிசன்', 'ஹேப்பி கில்மோர்'. 'பிக் டேடி', 'மிஸ்டர் டீட்ஸ்' ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தவர். அப்படங்களின் திரைக்கதையை எழுதியவர். ஒரு வசனத்தை கவனிக்க மறந்தாலும் ஒரு நகைச்சுவையை தவறவிடுவோம். அந்தளவுக்கு சுருக்கமாகவும், சுருகென்றும் சிரிக்க வைக்கும் வித்தை ஆடம் சான்ட்லரின் பேனாவுக்கு உண்டு.

4 வயதிலும் பால் குடிக்கும் குழந்தை, தன்னை விட வயதான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட மசாஜ் தெரபிஸ்ட், வேலையில்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் மனிதன், மாமியார் டார்ச்சரால் அவதிப்படும் ஆண்... என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் அக்மார்க் நகைச்சுவை வெடிகள்.

தவிர சல்மா ஹெய்க் இப்படத்தில் நீச்சல் உடையில் வருவது போனஸ்.

ஜாலியாக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு சரியான ட்ரீட். படத்தில் மெசேஜ் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.....
சாரி இப்படத்தை நீங்கள் பார்க்காமல் இருப்பதே ஆடம் சாண்ட்லர் - டென்னிஸ் டியூகன் கூட்டணிக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

கே.என்.சிவராமன்.                               

1 comment:

மயில்ராவணன் said...

நல்லதொரு பகிர்வு. இங்குன எப்போ ரிலீஸாகும்?