Saturday, July 3, 2010

வழிகாட்டிகளுக்கு வணக்கம் செய்வோம்!

வாழ்க்கை, பயணங்களால் ஆனது...

பயணங்களின்போது பலவிதமான சந்திப்புகள் நிகழ்கின்றன. சில சந்திப்புகள் சுகமானவை. சில சந்திப்புகள் சோகமானவை. சந்திப்புகள் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும், அகலப்படுத்தும்.

நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறபோது பொதுவாக வணக்கம் தெரிவிக்கின்றோம். இந்த வணக்கம் சொல்லும் விதம், இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

ஜப்பானியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றபோது, "வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி'' என்று தொடங்கு கிறார்கள். அதனால்தான் அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறார்கள்.

கர்நாடகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கிறபோது வணக்கம் கூறிய உடன், "ஊட்டா ஆயித்தா?'' என்று கேட்பார்கள். 'சாப்பிட்டீர்களா?' என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆங்கிலேயர்கள், "காலை வணக்கம், உங்கள் உடல் நலம் எப்படி?'' என்பார்கள்.

எகிப்து நாட்டவர்கள், "நீங்கள் எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்?'' என்று கேட்பார்கள்.

சீனர்கள், "உங்கள் வயிறு எப்படி இருக்கிறது? உணவு உட்கொண்டீர்களா?'' என்பார்கள்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக நலம் விசாரிக்கப்படுகிறது.

தமிழர்கள் இருகரம் கூப்பி, "வணக்கம், நலமா?'' என்று சந்திப்பைத் தொடங்குகின்றனர். பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லை. சட்டென்று நகர்ந்து விடுகின்றனர். இந்த ஓட்டத்தில்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.


அன்பான இளைஞர்களே, இந்த வாழ்க்கைப் பயணத்தில் நீங்களும் பலருக்கு வணக்கம் செலுத்த வேண்டும். குறிப்பாக யாருக்குத் தெரியுமா? உங்கள் வழிகாட்டிகளுக்குத்தான்.

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக உங்களை உயர்த்தி நல்வழிப்படுத்துகிறவர்கள் ஆசிரியப் பெருமக்கள் தான். அவர்கள்தான் உங்களின் சிறந்த வழிகாட்டிகள்.

ஆசிரியர்கள், அறியாமை என்னும் இருளைப் போக்குகின்ற வெளிச்ச தீபங்கள். வழிகாட்டுகின்ற கலங்கரை விளக்கங்கள். அதனால்தான் "நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்று போற்றிப் புகழ்ந்தான் உலக வரலாற்றில் உன்னத இடத்தைப் பெற்ற அலெக்சாண்டர்.

இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அதனால்தான், 'ஆசிரியப் பணி புனிதமான பணி' என்பார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவரிடம் ஒருவர், "உங்களால் நாடு பெருமை அடைகிறது'' என்று கூறினார். அதற்கு அவர், "நான் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்ததற்கு எனது ஆசிரியர்கள்தான் காரணம். அவர்களுக்குத்தான் வணக்கத்தையும், நன்றியையும் சொல்ல வேண்டும்'' என்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற வேளையிலும் தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருமக்களை மறக்காமல் அழைத்து மரியாதை செய்தார். 'அக்னிச் சிறகுகள்' என்ற அவரது வாழ்க்கைச் சரிதத்திலும் அவர்களைப் பதிவு செய்தார். வழிகாட்டிகளுக்கு வணக்கம் செலுத்தியதால்தானே அவரைப் போற்றிக் கொண்டே இருக்கின்றோம்!

நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் கடமையும் முக்கியமானதாகும். ஆசிரியர்கள் அகல்விளக்குப் போன்றவர்கள். சோடியம் விளக்கு பிரகாசமாக எரிந்தாலும் அதைக் கொண்டு இன்னொரு விளக்கை ஏற்ற முடியாது. ஆனால் ஒரு அகல் விளக்கைக் கொண்டு ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்ற முடியும். அதைப் போன்று ஆசிரியர்களால்தான் சிறந்த மாணவர்களை, சிந்தனையாளர்களை உருவாக்க முடியும். அதனால்தான் கவிஞர் தாகூர், ஆசிரியர்களை எரியும் மெழுகுவர்த்திகள்  என்று குறிப்பிட்டார். ஆம்! தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டிய விளக்குகள் ஆசிரியர்கள். தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால்தான் மாணவர்களைப் படிக்கச் செய்ய முடியும்.

ஒவ்வொரு வகுப்புக்குச் செல்லும்போதும் இதுதான் தனது முதல் வகுப்பு என்கிற தயாரிப்போடும் உணர்வோடும் சென்று வருகிறபோது கிடைக்கின்ற இன்பத்திற்கு இணையான இன்பம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய ஆசிரியருக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் உண்டு.

மருத்துவர், பொறியாளர் போன்றவர்களுக்குத் தொழில் வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என்ற இரண்டு வாழ்க்கைகள் இருக்கலாம். ஆனால் ஆசிரியர்களுக்கு இரண்டு வாழ்க்கை இருக்க முடியாது. ஆசிரியப் பணி, ஒழுக்கம் கற்பிக்கும் பணி. ஆசிரியர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். புகைப் பிடிக்கும் ஆசிரியர் புகைப் பிடிக்காதே என்று போதித்தால் மாணவன் சிரிக்கமாட்டானா? எனவே வாழ்ந்து காட்டும் ஒரே வாழ்க்கைதான் ஆசிரியருக்கு உண்டு.

இனிய இளைஞர்களே!

இத்தகைய சிறப்பினைப் பெற்றிருக்கின்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்தான் உங்கள் வாழ்க்கையின் உயர்வு இருக்கின்றது.

வாழ்க்கை என்பது வழிகாட்டுதல், வழியைக் கேட்டுப் பெறுதல். கற்றுத் தருபவர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள். எப்படிச் செல்வது என்பதை அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவப் பருவத்தில் இருக்கின்ற இனிய இளைஞர்களே, நீங்களும் நல்ல ஆசிரியரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுங்கள். வெற்றியின் உயரத்தை விரைவில் அடைவீர்கள்.

அத்தகைய வழிகாட்டிகளுக்கு வகுப்பறைகளில் மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்திலும் வணக்கம் செலுத்துங்கள். அத்தகையவர்களுக்கு மதிப்பளிப்பது உயர்ந்த பண்பாடு.

'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் தனது இல்லத்துக்கு ஆசிரியர் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். உயர்ந்த நிலையை அடைந்த பிறகுதான் மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள். வாய்ப்பு வரும் போதெல்லாம் வழிகாட்டிகளுக்கு வணக்கம் செலுத்துங்கள். அவர்களின் வாழ்த்து உங்களை உயர்த்தும். சமீபத்தில் படித்த ஒரு கவிதை, மனதில் காட்சியாய்ப் பதிந்திருக்கிறது.

ஒரு மழை நாளில்
ஒதுங்க இடம் தேடி
அலைந்த கணத்தில்
ஓடி வந்து குடை தந்த
இளைஞன் சொன்னான்
'உங்க கிட்ட மூணாவது படிச்சேன்
நல்லா இருக்கீங்களா டீச்சர்?'
அந்த ஒற்றை விசாரிப்பில்
மனசெல்லாம் நிறைந்தது.


ஓர் ஆசிரியருக்கு இதை விட வேறு என்ன பரிசு வேண்டும்?
பேராசிரியர் க. ராமச்சந்திரன்
 

No comments: