Friday, July 2, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

ரே வரியில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல முடியும். 'ரகசிய உளவாளிகளின் உலகம் சுற்றும் சாகசங்கள்'. இந்த ஐந்து வார்த்தைகளின் கலவையைத்தான் 110  நிமிடங்கள் தடதடக்கும் ஹை ஸ்பீட் ரோலர் கோஸ்டர் பயணமாக மாற்றியிருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகளாகிரார்கள். எதிரிகள் நண்பர்களாகிறார்கள். உளவாளியாக இருந்தவன் ஆயுதக்கடத்தல் வியாபாரியாகி, குரூர புன்னகையுடன் பேரம் பேசுகிறான். உதவி செய்ய வந்த நண்பன், கொலை செய்யப்படுகிறான். வெகு முக்கியமான ஆயுதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி கடத்தப்படுகிறான். தன் காதலியை காதலன் கொல்லப் பார்க்கிறானா... காப்பாற்றுகிரானா?

'நைட் அண்ட் டே' (Knight and Day) ஹாலிவுட் படத்தின் கதையும் இதுதான். திரைக்கதையும் இந்தக் கேள்விகளை சுற்றித்தான்.

முதல் காட்சியிலேயே படம் தொடங்கிவிட வேண்டும் என கமர்ஷியல் படங்களுக்கான வெற்றி சூத்திரத்தை கண்டுபிடித்த புண்ணியவான், இப்படத்தை பார்த்தால் சந்தோஷப்படுவான். படம், இப்படித்தான் தொடங்குகிறது.

சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜூன் ஹேவன்ஸ் விமான நிலையம் செல்கிறாள். அவளுடன் பயணம் செய்யப் போகும் ராய் மில்லர் மீது அவளுக்கு ஈர்ப்பு வருகிறது. விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஹேவன்ஸ் ஓய்வறைக்கு செல்கிறாள். திரும்பி வருவதற்குள் அந்த விமானத்தில் இருந்த பைலட் உட்பட அனைவரும் கொல்லப்படுகிறார்கள். எந்த ஆண் மீது ஹெவன்ஸுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதோ, அந்த ராய் மில்லர்தான் இந்தக் காரியத்தை செய்தது. எதற்காகத் தெரியுமா? ஹெவன்சை கடத்த. ஏன் இந்த கடத்தல்? உண்மையில் ராய் மில்லர் யார்?

நகத்தை கடித்தப்படி பர ரவென டேக் ஆஃப் ஆகும் இந்த ஆரம்பம். இறுதிவரை தொடர்வது ஆச்சர்யம். ஜூன் ஹெவன்ஸாக நடித்திருப்பவர் கேமரூன் டயஸ். அவரது காதலன் ராய் மில்லராக, ரகசிய உளவாளியாக அதகளம் செய்திருப்பவர் டாம் க்ரூஸ். 'மிஷன் இம்பாசிபிள்' (எம்.ஐ) பாகங்கள் வழியே ரசிகர்களை தன்பக்கம் வசீகரித்த டாம் க்ரூஸ், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சர்யமான விஷயம். 'மிஷன் இம்பாசிபிள்' சாயலில் இருப்பதாலேயே 'சால்ட்' உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடிக்க மறுத்த அவர், இந்த 'நைட் அண்ட் டே' படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியதற்கு காரணம், பரபரக்கும் திரைக்கதைதான். எதிர்பாராத க்ளைமாக்ஸ்தான். பின்னே, 10 ஹாலிவுட் திரைக்கதை ஜாம்பவான்கள் சேர்ந்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட் ஆயிற்றே?!
'விச்சிட்டா', 'டிரபிள் மேன்' என ஆரம்பத்தில் சூட்டப்பட்ட பெயர்களை பிறகு ரப்பரால் அழித்து 'நைட் அண்ட் டே' என மாற்றியவர் இயக்குனர் ஜேம்ஸ் மேன்கோல்ட். 'வாக் தி லைன்', ' 3:10 டூ யூமா' என பேசப்பட்ட, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் இயக்குநரல்லவா இவர்? சென்ற அக்டோபரில் படப்பிடிப்பை ஆரம்பித்தவர் திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிட்டார். படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பதற்கு காரணம், இயக்குனர் மட்டுமல்ல. 'வெனிலா ஸ்கை' என்ற சக்கைப்போடு போட்ட சைக்காலஜிக்கள் த்ரில்லர் படத்துக்கு பின், டாம் க்ரூஸ் - கேமரூன் டயஸ் இணையும் படம் இது என்பதாலும்தான்.

இந்த விமர்சனத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் இப்படம் அமெரிக்காவில் ரிலீசாகியிருக்கும். டாம் க்ரூஸின்  முந்தைய படமான 'வல்க்யூரி' பாக்ஸ் ஆபிசில் வாஷ் அவுட். அதேநிலைமை இப்படத்துக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என முப்பது முக்கோடி தேவர்களையும் வேண்டி வருகிறார்.
டாம் க்ரூஸின் பிரார்த்தனை நிறைவேறுமா?       
 
கே.என்.சிவராமன்           

No comments: